murasoli thalayangam
”முறைகேடுகளை மறைக்க காவி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கும் ஆர்.என்.ரவி” : முரசொலி கடும் தாக்கு!
முரசொலி தலையங்கம் (03-07-024)
முறைகேடுகளை மறைக்கவே காவிப் பேச்சுகள்!
குற்ற வழக்குகள் உள்ள சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதன் மூலமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் தரம் என்ன என்பது வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது.
எட்டு பிரிவுகளின் கீழ் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர் ஜெகநாதன். அரசு செயலர் விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டவர் ஜெகநாதன். அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பை வழங்கி இருக்கிறார் நித்தமும் ‘நல்லொழுக்க வகுப்பு’ நடத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி.
போலி ஆவணங்களைத் தயாரித்து தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாகவும், அரசு அலுவலர்களை தனது தனிப்பட்ட நிறுவனங்களுக்கு பயன்படுத்தியதாகவும் சேலம் பெரியார் பல்கலைக் கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் காவல் துறையில் துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகார் கொடுத்தார்.
பணிக்காலத்தில் இவரே ஒரு அமைப்பைத் தொடங்கியும் இருக்கிறார். அந்த அமைப்பை வைத்து பல்கலைக் கழகப் பணிகளை பார்த்து, முறைகேடு களைச் செய்துள்ளார். இதன் மூலமாக பல்கலைக் கழக நிதியை தனது லாபத்துக்கு பயன்படுத்தி இருக்கிறார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதன்படி சேலம் கருப்பூர் காவல் துறையால் கைது செய்யப்பட்டவர் தான் ஜெகநாதன். முறைகேடு வழக்கு மட்டுமல்ல, வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கும் அவர் மீது இருக்கிறது. 8 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் தான் வெளியில் நடமாடி வருகிறாரே தவிர, விடுதலை ஆகிவிடவில்லை. சூரமங்கலம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டவர் தான் இந்த ஜெகநாதன்.
பல்கலைக் கழக வளாகத்தில் காவல் துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அங்கு சென்றவர் தான் ஆளுநர் ரவி. சர்ச்சைக்குரிய ஜெகநாதனை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தினார் ஆளுநர். அதாவது, ‘ஜெகநாதனுக்கு நானே துணை’ என்பதைப் போல இருந்தது ஆளுநரின் நடவடிக்கைகள். மூன்றாண்டு பதவிக்காலம் முடிந்த பிறகாவது அவரை அனுப்பி வைத்திருக்கவேண்டும். முறைகேடுகளைச் செய்பவர்களுக்கு உடந்தையாக இருப்பதை தைரியமாக இந்த நாட்டுக்குச் சொல்ல நினைக்கிறார் ஆளுநர். ‘என்னை யார் கேள்வி கேட்க முடியும்?’ என்ற அதிகாரத் தோரணையில் நடந்து கொள்கிறார் ஆளுநர்.
துணைவேந்தர் ஜெகநாதனின் மூன்றாண்டுகால பதவிக் காலம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. அடுத்து புதிய துணைவேந்தரை, அதற்கான குழு மூலமாக தேர்ந்தெடுக்க வேண்டும். பல்கலைக் கழக ஆட்சிக் குழுவின் பிரதிநிதி ஒருவரும், ஆட்சிப் பேரவையின் பிரதிநிதி ஒருவரும் தேர்வு
செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அக்குழுவின் அமைப்பாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி நிலையிலான ஒருவர் பெயர் ஆளுநருக்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அந்த மூன்று பெயர்கள் அடங்கிய பட்டியல் ஆளுநர் மாளிகையால் வெளியிடப்பட்டு அந்த அறிவிப்பு அரசிதழில் வெளியான பின்பு புதிய துணைவேந்தர் தேர்வுக்கான பணிகள் தொடங்கும்.
ஆட்சிக்குழு, ஆட்சிப்பேரவையின் உறுப்பினர்களான இரண்டு பேரின் பெயர், பல்கலைக் கழகத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டு 20 நாளைக்கு மேல் ஆகிறது. குழுவின் அமைப்பாளர் பெயர் உயர்கல்வித்துறையில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய துணைவேந்தர் தேடுதல்
தேர்வுக் குழுவுக்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிடவில்லை. ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய ஜெகநாதனுக்கே பணி நீட்டிப்பை வழங்கி இருக்கிறார் ஆளுநர் ரவி.
ஜெகநாதன் மீது, நடத்தப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை அரசால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. அதன் மீதும் ஆளுநர் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனம், கணினி உபகரணங்கள்
கொள்முதல், இணையதள தளவாடங்கள் கொள்முதல், இணையதள சேவை கட்டமைப்புகள் உருவாக்குதல், பட்டியலின மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் முறைகேடு, அமேசான் இணைய முறைகேடு, வளாக பராமரிப்பில் முறைகேடு என எழுந்த புகார்களை விசாரிக்க பழனிச்சாமி ஐ.ஏ.எஸ். தலைமையில் இரு நபர் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு, ஓராண்டில் விரிவான விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை கொடுத்தது. அதில், துணைவேந்தர் ஜெகநாதன் மீது 6 குற்றச்சாட்டுகளும், பதிவாளர் தங்கவேல் மீது 8 குற்றச்சாட்டுகளும், தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி மீது 5 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கணினி அறிவியல் பேராசிரியரும், பதிவாளருமான தங்கவேல் மீது 8 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவரை உயர்கல்வித் துறை உடனடியாக பணிநீக்கம் செய்தது.
சேலம் கருப்பூர் காவல்நிலையத்தில் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீதான குற்ற வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தால் தடை தான் விதிக்கப் பட்டுள்ளது. வழக்கு ரத்து செய்யப்படவில்லை. அவர் மீதான ஜாமீன் ரத்து வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீனதயாள் உபாத்தியாயா பெயரிலான நிதியை வைத்தே ஊழல் செய்துள்ளார்கள். அதையே கண்டுகொள்ளவில்லை ஆளுநர். பட்டியலின மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். அதைப் பற்றியும் கவலை இல்லை. ஜெகநாதனுக்கு பணிநீட்டிப்பு வழங்கி இருப்பதன் மூலமாக யாரும் எதையும் செய்யலாம் என்ற லைசென்ஸை ஆளுநர் வழங்கி இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களை கடந்த இரண்டு ஆண்டு காலமாக நாசம் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ரவி. இந்த தவறுகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காகத் தான் காவி வகுப்புகளை நடத்தி திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!