murasoli thalayangam

‘Dravidian Algorithm’ - இந்தியாவிற்கே வழிகாட்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இந்தியாவே வழிமொழியட்டும்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ஒரு கருத்தியல் அடையாளச் சொல்லைப் பயன்படுத்தி இருந்தார். ‘Dravidian Algorithm’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இருந்தார்கள். ‘நோய் நாடி, நோய் முதல் நாடி’ இயக்கமாக திராவிட இயக்கம் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை அதன் மூலமாக விளக்கி இருந்தார் அமைச்சர் உதயநிதி.

“தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையை பரப்பியதற்காக அடித்துக் கொல்லப்பட்ட உடையார்பாளையம் வேலாயுதம் தொடங்கி, நீட் தேர்வுக்குப் பலியான தங்கை அனிதா வரை கண்டது இந்த ‘Dravidian Algorithm’. அதனால் தான் நீட் தேர்வு நல்லதா – கெட்டதா என ஒட்டுமொத்த நாடும் புரிந்து கொள்வதற்கு முன்பே, இந்தித் திணிப்பை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என மற்ற மாநிலங்கள் புரிந்து கொள்வதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் புரிந்து கொண்டார்கள்” என்று ஒரு இயக்கத்தின் வரலாற்றையும் கருத்தியலையும் மிகச் சரியாக வரையறுத்துச் சொல்லி இருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

‘மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசந்து, பின்னே இனிக்கும்’ என்பது தமிழ்ப்பழமொழிகளில் ஒன்று. ‘Dravidian Algorithm’ என்பதும் அப்படிப்பட்டது தான் என்பதற்கான இக்கால எடுத்துக்காட்டு ‘நீட்’ தேர்வு ஆகும். இது ஒரு மோசடித்தனமான தேர்வு என்பதை தமிழ்நாடு தான் முதலில் சொன்னது. அதனை இந்தியாவே இன்று வழிமொழிந்து கொண்டு இருக்கிறது.

பல லட்சம் கோடி பணம் புரளும் பயிற்சி நிறுவனங்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஒரு தொழில் தான் இந்தத் தேர்வு என்பதை தமிழ்நாடு தான் முதலில் சொன்னது. இன்றைய தினம் மோசடி கும்பல், கும்பல் கும்பலாகக் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

நீட் தேர்வு மோசடி தொடர்பாக குஜராத் மாநிலத்தில் கோத்ரா, அகமதாபாத், கேடா, ஆனந்த் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் சி.பி.ஐ. கடுமையான சோதனைகளை நடத்தி வருகிறது. குஜராத் மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நீட் வினாத்தாள் முறைகேட்டில் ஆசிரியர்கள், இடைத்தரகர்கள் பலருக்கும் தொடர்பு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளமே தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்தியாவின் பெரும்பான்மை கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடர்பாக விவாதிக்க திராவிட முன்னேற்றக் கழகம் கருத்துரு வழங்கி உள்ளது. ‘நாடாளுமன்றத்தில் நீட் தொடர்பாக பேச வேண்டும்’ என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குரல் கொடுத்துள்ளார். ‘நீட் தேர்வு குறித்த விவாதத்தை பிரதமர் மோடி தான் முன்னெடுக்க வேண்டும்’ என்றும் ராகுல்காந்தி சொல்லி இருக்கிறார்.

முன்னதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்து நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார்கள்.

“கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் வகையிலும், பள்ளிக் கல்வியை அவசியமற்றதாக்கும் வகையிலும், மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையிலும் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். இந்தத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து, பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12-–வது வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்தச் சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டுமென்றும், தொடர்ந்து பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும் இந்தத் தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.” - என்பதுதான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 28 ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும்.

டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலங்கானா , மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டமன்றங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசினை வலியுறுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்குறிப்பிட்ட மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

அனைத்து தொழிற்கல்வி படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை மேல்நிலைத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் செய்யப்படவேண்டும் என்றும் தனி நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மேற்கொள்ளக்கூடாது என்றும் அந்தக் கடிதங்களில் தெளிவுபட முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் முதலமைச்சர் அவர்கள் அனுப்பி இருக்கிறார்கள்.

இதுதொடர்பான சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், இதுநாள் வரையில் அக்கோப்பு நிலுவையில் உள்ளதாக தமது கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். 2017 முதல் மருத்துவ மாணவர் சேர்க்கை நியாயமாக நடைபெறவில்லை. 13.9.2021 முதல் முறையும், 8.2.2022 அன்று இரண்டாவது முறையும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு சட்டமுன்வடிவை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். இப்போது மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்போது தான் நீட் மோசடியை இந்தியா முழுமையாக உணர்ந்துவருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை இந்தியாவே வழிமொழியட்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட ‘Dravidian Algorithm’ இந்தியாவுக்கு வழிகாட்டட்டும்.

Also Read: மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - சமூக நீதி மிகமிக அவசியமாகும்: முரசொலி !