murasoli thalayangam

கள்ளக்குறிச்சி பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடும் எடப்பாடி பழனிசாமி - முரசொலி கண்டனம்!

சாத்தான்குளமும், கள்ளக்குறிச்சியும்!

நாற்பது தொகுதியிலும் நாக்கை பிடுங்கிக் கொள்ளும் அளவுக்கு தோல்வியைத் தழுவி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்குள் முடங்கியே கிடந்த பழனிசாமி, கள்ளக்குறிச்சி விஷச்சாராயச் சாவுப் பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே வருகிறார்.

“தூத்துக்குடி காவல் நிலையத்தில் இருவர் இறந்ததற்கு சி.பி.ஐ விசாரணை கேட்டார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இப்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறோம்” என்று மகாபுத்திசாலியைப் போல கேட்கிறார் பழனிசாமி.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்திருந்தால் சி.பி.ஐ. விசாரணை கூட கேட்கலாம்.

ஆனால், அனைத்து நடவடிக்கைகளும் எடுத்ததைப் பார்த்த பிறகும், சி.பி.ஐ. விசாரணைக்கு அதில் என்ன இருக்கிறது?

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய,

- நீதியரசர் கோகுல் தாஸ் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

- சி.பி.சி.ஐ.டி. வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப் பட்டுள்ளது.

- உள்துறை செயலாளரையும், டி.ஜி.பி.யையும் அறிக்கை தரச் சொல்லி இருக்கிறார்கள்.

- குற்றவாளிகளில் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள், பலர் தேடப்பட்டு வருகிறார்கள்.

- கள்ளச்சாராயம், விஷச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்கிறது.

- இறந்தோர் குடும்பத்துக்கு ரூபாய் பத்து லட்சம் தரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

- பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கை பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

- மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டுள்ளார்.

- மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

- மதுவிலக்குத் துறை ஏ.டி.ஜி.பி.யே கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார் என அனைத்து நடவடிக்கைகளும் 24 மணிநேரத்துக்குள் எடுக்கப்பட்ட பிறகு சி.பி.ஐ.க்கு இங்கே என்ன வேலை இருக்கிறது?

அன்றைக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இரண்டு பேர் அடித்தே கொல்லப்பட்டார்கள்.

காவலர்கள் சிலர் திட்டமிட்டுச் செய்த படுகொலை அது. அதனை அன்றைய அ.தி.மு.க. அரசு மறைத்தது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தையே மரண பலிபீடமாக அ.தி.மு.க. ஆட்சியில் மாற்றினார்கள். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் 20–க்கும் மேற்பட்ட காவலர்கள் அடித்தே கொன்றார்கள்.

இதுகுறித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய பிறகும், ‘பென்னிக்ஸ் மூச்சுத் திணறலால் இறந்தார், ஜெயராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்’ என்றும் அறிக்கை வெளியிட்டார், அன்றைய முதலமைச்சர் பழனிசாமி.

‘சி.பி.ஐ. விசாரணை கேட்டு தி.மு.க. நீதிமன்றத்தை நாடும்’ என்று தி.மு.க. தலைவர் அவர்கள் சொன்ன பிறகு தான், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார் பழனிசாமி.

‘காவலர்கள் மீது கொலை வழக்காக பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது’ என்று சொன்னது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை.

உயர்நீதிமன்ற நீதியரசர்களால் வரலாற்றில் முதல் முறையாக சாத்தான்குளம் காவல்நிலையம், காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து எடுக்கப்பட்டு வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது.

இது, அ.தி.மு.க. ஆட்சிக்கு ஏற்பட்ட மாபெரும் அவமானம் அல்லவா?

உயர்நீதிமன்ற நீதியரசர்களால் விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டவர் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன். அவரை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்கள் மிரட்டினார்கள்.

‘உன்னால் ஒன்றும்.. முடியாது’ என்று காவலர் ஒருவர் மிரட்டியதாக மாஜிஸ்திரேட்டே நீதிமன்ற பதிவாளரிடம் புகார் செய்தார்.

இரண்டு நாள் வைத்திருந்து சாகும் அளவுக்கு தாக்கப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்ட இரண்டு பேரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, சாத்தான்குளம் நீதிமன்றம், கோவில்பட்டி கிளை சிறை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை ஆகிய அரசு எந்திரம் அனைத்தும் மறைக்கப் பார்த்தார்கள்.

உடல்நலம் பாதிக்கப்பட்டுதான் அவர்கள் இருவரும் இறந்தார்கள் என்று ஜடத்தைப் போல முடிவெடுத்து அறிவித்தது பழனிசாமியின் நிர்வாகம்.

“கடையை மூடச் சொன்ன எங்களை மிரட்டிய ஜெயராஜும், பென்னீக்ஸும் தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது” என்று முதல் தகவல் அறிக்கை எழுதியது பழனிசாமியின் போலீஸ்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தமிழக அரசின் வழக்கறிஞர் இதனைப் பூசிமெழுகப் பார்த்தார். ‘இது லாக்அப் மரணமே அல்ல’ என்று அன்றைய அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்னார்.

கண்ணால் பார்த்ததை வாக்குமூலமாகக் கொடுத்த தலைமைக் காவலர் ரேவதி மிரட்டப்பட்டார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகள் அழிக்கப்பட்டன. ஆதாரங்கள் மறைக்கப்பட்டன.

இவ்வளவும் ஆட்சி மேலிடத்தின் உதவி இல்லாமல், உயர் காவல்துறை அதிகாரிகளின் தயவு இல்லாமல் சாதாரண காவலர்களால் செய்திருக்க முடியாது. ஊடகங்களில் ஏராளமான வீடியோ ஆதாரங்கள் வெளியான பிறகு சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு பழனிசாமி நெருக்கடிக்குள்ளானார்.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் தனது கடமையைத் தவறியுள்ளார் என்றும், முறையாக அவர் பரிசோதனை செய்யவில்லை என்றும் சி.பி.ஐ. விசாரணை சொல்கிறது.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனை தொடக்க பதிவேடுகள், அடுத்தடுத்த மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள், கோவில்பட்டி சிறையில் அடைத்தபோது எழுதப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றுக்குள் முரண்பாடுகள் இருப்பதாகவும் சி.பி.ஐ. சொன்னது.

இதுதான் பழனிசாமி ஆட்சியின் லட்சணம் ஆகும். இப்படி அ.தி.மு.க. ஆட்சியில் மூடி மறைக்கப் பார்த்த வழக்குதான் சாத்தான்குளம் வழக்கு. அதனால்தான் சி.பி.ஐ. கேட்க வேண்டிய அவசியம் அன்று ஏற்பட்டது.

ஆனால். இன்று கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை. மறைக்கவில்லை!

- முரசொலி தலையங்கம்

24.6.2024

Also Read: நீட் PG தேர்வு ரத்து: மையப்படுத்தப்பட்ட தேர்வுமுறை சவப்பெட்டியின் இறுதி ஆணிகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்