murasoli thalayangam

பா.ஜ.க. ஆட்சி அமைச்சரவையில் நிரம்பி வழியும் வாரிசுகள் : பட்டியலிட்ட முரசொலி!

முரசொலி தலையங்கம் (13-06-2024)

71 இல் 20 வாரிசுகள்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியும் அமித்ஷாவும் எதிர்க்கட்சிகள் மீது வைத்த விமர்சனமே, ‘வாரிசு அரசியல் செய்கிறார்கள்’ என்பதுதான். ஆனால், ‘மைனாரிட்டி’ பா.ஜ.க. ஆட்சி அமைச்சரவையில் ‘மெஜாரிட்டி’ என்று சொல்லும் அளவுக்கு வாரிசுகள் நிரம்பி வழிகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் எதற்காக அமைச்சரவையில் இடம் கொடுத்தார்கள்?

1. பியூஸ் கோயல் - இவரது தந்தை வேதபிரகாஷ் கோயல், பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். பியூஸ் கோயலின் அம்மா சந்திரகாந்த் கோயல், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர்களது வாரிசுதான் அமைச்சர் ஆகி இருக்கிறார்.

2. தர்மேந்திர பிரதான் - இவரது தந்தை தேவேந்திர பிரதான், பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்.

3. ராம் மோகன் - இவரது தந்தை எர்ரான் நாயுடு, மத்திய அமைச்சராக இருந்தவர். பிரதமர் தேவகவுடா அமைச்சரவையிலும், பிரதமர் குஜ்ரால் அமைச்சரவையிலும் கிராமப்புற அமைச்சராக இருந்தார். 13 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தார் எர்ரான் நாயுடு.

4. ஜோதி ராதித்ய சிந்தியா - இவரது தந்தை மாதவராவ் சிந்தியா, ஒன்றிய அமைச்சராக இருந்தவர்.

5. ஜிதின் பிரசாத் - இவரது தந்தை ஜிதேந்திர பிரசாத், உத்தரப்பிரதேச எம்.பி.யாக இருந்தார்.

6. அனுப்பிரியா பட்டேல் - இவரது தந்தை சோன் லால் படேல், அப்னா தள் கட்சியின் தலைவர் ஆவார். இவரது அம்மா கிருஷ்ணா படேலும் தேர்தலில் போட்டியிட்டவர் தான்.

7. கிர்த்தி வரதன் சிங்– இவரது தந்தை ராஜா ஆனந்த் சிங் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைச்சராக இருந்தார்.

8. வீரேந்திரகுமார் - இவர் மத்தியப்பிரதேச முன்னாள் அமைச்சர் கெளரிசங்கருக்கு உறவினர்.

9. சாந்தனு தாகூர் – மேற்குவங்க முன்னாள் அமைச்சர் கிருஷ்ணதாகூரின் மகன்.

10. சிரக் பாஸ்வான் – இவரது தந்தை ராம் விலாஸ் பாஸ்வான் பல தடவை ஒன்றிய அமைச்சராக இருந்தார். தந்தை மறைவுக்குப் பிறகு அவரது வாரிசாக சிரக் பாஸ்வான் அரசியலுக்குள் நுழைந்தார். வெற்றி பெற்றார். அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார்.

11. ராம்நாத் தாகூர்- இவரது தந்தை கர்பூரி தாகூர், பீகார் மாநில முதலமைச்சராக இருந்தார்.

12. ஜெயந்த் செளத்ரி- இவரது தந்தைதான் முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங்.

13. ரக்ஷா கட்ஸே - மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்ஸேவின் உறவினர்.

14. கிரன் ரிஜிஜூ - இவரது தந்தை ரிஜிதன் கரு, அருணாசலப்பிரதேச மாநில சபாநாயகராக இருந்தவர்.

15. ராவ் இந்திரஜித் சிங்- இவரது தந்தை மகாராஜா ராவ் பைரேந்திர சிங் அரியானா மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தார்.

16. ரவ்நீத் சிங் பிட்டு - இவரது தாத்தா பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தார்.

17. அன்னபூரணா தேவி - இவரது கணவர் ராம் பிரசாத் பீகார் மாநில முன்னாள் எம்.எல்.ஏ.

18. ஹெச். டி.குமாரசாமி - இவரது தந்தை ஹெச். டி.தேவகவுடா. இவருக்கு அறிமுகம் தேவையில்லை. இந்திய நாட்டின் பிரதமராக இருந்தவர் தேவகவுடா. அவரது மகனான குமாரசாமி, கர்நாடக முதலமைச்சராக இருந்தவர். அவர்களது குடும்பம் மொத்தமும் அரசியலில்தான் இருக்கிறது. பாலியல் வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கிறார்கள் தேவகவுடாவின் மகனும், பேரனும். இவர்களுக்கு இருகரம் கூப்பி வாக்குக் கேட்டவர்தான் மோடி. பாலியல் குற்றங்களில் சிக்கியதும் அவர்களை வெளிப்படையாகக் கண்டிக்கக் கூட மனமில்லாமல் இருந்தவர்கள்தான் பா.ஜ.க. தலைவர்கள்.

19. கமலேஸ் பாஸ்வான் – ஓம் பிரகாஷ் பாஸ்வானின் மகன். உத்தரப்பிரதேச பா.ஜ.க. பிரமுகர்களில் ஒருவர் இவர்.

20. இவை அனைத்துக்கும் மேலாக பா.ஜ.க. தலைவராகவும் இருந்து ஒன்றிய அமைச்சர் ஆகி இருக்கிறாரே ஜே.பி.நட்டா, இவர் மத்திய பிரதேச மாநில முன்னாள் அமைச்சர் ஜெயஶ்ரீ பானர்ஜியின் உறவினர்.

ஆக மொத்தம் 20 வாரிசு அமைச்சர்களுக்கு தனது அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. இவர்தான் தேர்தலில் வாய்கிழிய வாரிசு அரசியலுக்கு எதிராகக் கர்ஜித்தவர்.

இதில் 10 பேர் கேபினெட் அமைச்சர்கள். 2 பேர் தனிப்பொறுப்பு அமைச்சர்கள். 8 பேர் இணையமைச்சர்கள். வாரிசுகளுக்கும் கோட்டா அடிப்படையில் மூன்றிலும் இடம் கொடுத்துள்ளார் மோடி.

அரசியல் அனைவருக்கும் பொதுவானது. இந்த அரசியல் களத்தில் அனைவரும் பங்கேற்று தனக்கான அரசியலை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதும், அனைவரும் அனைத்து மக்களுக்காகவும் தொண்டாற்ற வேண்டும் என்பதுதான் அரசியல் நெறியாகும். இன்னார் வரலாம், இன்னார் வரக்கூடாது என்ற ‘வர்ணம்’ அரசியலுக்கு இல்லை.

ராகுல் காந்தியைப் பற்றி என்ன குறை சொல்வது என்று தெரியாமல் மோடி சொன்ன குற்றச்சாட்டு அது. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசைப் பற்றிக் குறை சொல்வதற்கு ஏதும் கிடைக்காததால் இங்கு வந்தும் அதே வாரிசு குற்றச்சாட்டை மோடி வைத்துப் போனார்.

கழகத் தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ‘இது கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன குற்றச்சாட்டு. வேறு ஏதாவது புதிதாக இருந்தால் சொல்லுங்கள்’ என்று கிண்டல் அடித்திருந்தார். அதே புளித்துப் போன மாவில் ஏன் வடை சுட வேண்டும்?

Also Read: இதெல்லாம் பூஜ்யங்களுக்கு ஒன்றுமே புரியாது : அ.தி.மு.க , பா.ஜ.கவை வெளுத்து வாங்கிய முரசொலி!