murasoli thalayangam

”உலக உத்தமர் மகாத்மா காந்தி” : பிரதமர் மோடிக்கு பாடம் எடுத்த முரசொலி தலையங்கம்!

முரசொலி தலையங்கம் (31-05-2024)

உலக உத்தமர் காந்தி

‘உலக உத்தமர்’ என்ற அடைமொழியுடன்தான் காந்தியை அழைத்தவர் பேரறிஞர் அண்ணா!

இந்தியாவில் புகழடைவதற்கு முன்னதாகவே உலக நாடுகளில் புகழ்க்கொடி நாட்டியவர்தான் காந்தி. தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்காக காந்தி நடத்தியதுதான் முதல் போராட்டம். இந்தியா எல்லாம் அதன்பிறகுதான். காந்தியின் சத்தியாகிரகம், தென்னாப்பிரிக்காவில் எட்டாண்டு காலம் நடந்தது. தென்னாப்பிரிக்காவில் வெளியான பெரும்பாலான பத்திரிக்கைகளில் காந்தி தொடர்ந்து எழுதினார். 1909 ஆம் ஆண்டே தென்னாப்பிரிக்க மக்களின் பிரதிநிதியாக லண்டன் சென்றவர் காந்தி. ஆனால் புதிதாக கதை விடுகிறார் மோடி.

“உலகின் ஒரு பெரிய ஆன்மா மகாத்மா காந்தி. இந்த 75 ஆண்டுகளில் மகாத்மா காந்தியை உலகுக்குத் தெரிவிக்க வேண்டியது நம் பொறுப்பு. அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. ‘காந்தி’ திரைப்படம் எடுக்கப்பட்டபோது தான் முதல் முறையாக அவரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உலகில் ஏற்பட்டது. அந்தப் படத்தையும் நாம் எடுக்கவில்லை. உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகு இதனை நான் சொல்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார் மோடி.

இவருக்கு மட்டும் இப்படி அலாதியான கற்பனைகள் எப்படித்தான் தோன்றுகிறதோ? எதையாவது சொல்லி அண்ணல் காந்தியடிகளை (தமிழ்த்தென்றல் திரு.வி.க. கொடுத்த அடைமொழி இது) அவமானப்படுத்துவதுதான் மோடியின் நோக்கம். தான் வாழ்ந்த காலத்திலேயே உலகத் தலைவராக வலம் வந்தவர்தான் அண்ணல் காந்தி.

1937ஆம் ஆண்டே காந்தியைப் பற்றி படமெடுக்கத் திட்டமிட்டவர் ஏ.கே.செட்டியார். இரண்டரை ஆண்டு காலம் உலகத்தின் பல நாடுகளை வலம் வந்தவர் ஏ.கே.செட்டியார். (ஏ.கருப்பன் செட்டியார்). ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் அவர். தனது முப்பது ஆண்டுகால உழைப்பால் 50 ஆயிரம் அடி கொண்ட படங்களை உலகம் முழுவதும் கண்டெடுத்தார். மூன்று ஆண்டுகள் உழைத்தார். 12 ஆயிரம் அடியாக அதனைச் சுருக்கி வெளியிட்டார். 1940 ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியாகி விட்டது. இவரிடம் இந்தப் படத்தை வாங்கி வெளியிட ‘டிவெண்டியத் செஞ்சுரி பாக்ஸ்’ நிறுவனம் அப்போதே பேச்சுவார்த்தை நடத்தியது.

‘காந்தி’ குறித்த காட்சிகளைத் திரட்ட உலகம் முழுவதும் பயணித்தார். 1937 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டுள்ளது. லண்டனில் 200 அடி கொண்ட தென்னாப்பிரிக்க காட்சிகள் கிடைத்தது. லண்டனுக்கு காந்தி வந்த போது பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தன. அப்போது பல ஐரோப்பியர்கள் காந்தி பற்றி எழுதிய 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை நியூயார் நூலகர் பிரிஹாவர், ஏ.கே.செட்டியாரிடம் கொடுத்துள்ளார். வாசிங்டனில் உள்ள காங்கிரஸ் நூல் நிலையத்திலும் காந்தி குறித்து ஏராளமான புத்தகங்கள் உள்ளன.

வட்டமேஜை மாநாட்டுக்காக இலண்டன் வந்த காந்தியை இரண்டு அமெரிக்கர்கள் வந்து சந்தித்தார்கள். ‘எங்கள் நாட்டுக்கு வரவேண்டும், புகழ் பெற்ற ஒரு உணவுவிடுதி நிர்வாகம் இதற்கான முழுச் செலவையும் ஏற்றுக் கொள்கிறது’ என்றார்கள். ‘அமெரிக்கா வர நேரமில்லை’ என்று சொன்ன காந்தி, அமெரிக்க மக்களுக்கான செய்தியை எழுதி அந்த இரண்டு பேரிடமும் கொடுத்தனுப்பினார். ‘pathe news’ என்ற பட நிர்வாகத்திடம் காந்தி பற்றிய 1080 அடி படம் சேகரிப்பாக இருந்துள்ளது. இப்படி காந்தியின் காட்சிகள் இல்லாத நாடுகள் இல்லை என்ற அளவுக்கு தகவல்களைத் திரட்டி 1940 ஆம் ஆண்டே சொன்னவர் ஏ.கே.செட்டியார்.

காந்திக்கும், ரஷ்ய டால்ஸ்டாய்க்கும் நேரடியான கடிதத் தொடர்பு இருந்தது. ‘நான் உங்களது சேவகன்’ என்று காந்தி எழுதினார். ‘நான் உங்களது சகோதரன்’ என்று எழுதினார் டால்ஸ்டாய். அப்போதே J.J.Doke எழுதிய காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியாகி விட்டது. அதனை டால்ஸ்டாய்க்கு அனுப்பி வைத்திருக்கிறார் காந்தி.

1931ஆம் ஆண்டு லண்டன் வந்திருந்த காந்தியை நேரில் சந்தித்து உரையாடியவர் சார்லி சாப்ளின். இந்த சந்திப்பு ஏதோ தனிப்பட்ட இருவரின் சந்திப்பு அல்ல. அன்றைய தினமே பிபிசி வானொலி இது பற்றி விரிவாகச் செய்தியை ஒலிபரப்பியது.

காந்தியின் வாழ்க்கையை அறிபவர்களால் அதிகம் கொண்டாடப்படும் புத்தகங்கள் என்பவை வின்சென்ட் ஷீன் என்ற அமெரிக்க பத்திரிக்கையாளர் எழுதியதும், ரோமன் ரோலண்ட் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதியதும்தான். 1942 ஆம் ஆண்டே காந்தியை ‘வார்தா’ ஆசிரமத்துக்கு வந்து சந்தித்து, அவரோடு தங்கி புத்தகம் எழுதியவர் லூயி பிஷர். ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் லண்டனிலும்பத்திரிக்கையாளராக இருந்தவர் இவர்.

காந்தியின் நெருக்கமான நண்பர் ஹென்றி போலக். அவரது மனைவி மிலி கிரகாம் போலக், இலண்டனில் பிறந்தவர். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தவர். 1931 ஆம் ஆண்டே ‘காந்தி எனும் மனிதர்’ என்ற நூலை எழுதிவிட்டார் மிலி.

ரிச்சர்ட் அட்டன்பரோ, காந்தி குறித்த திரைப்படத்தை இயக்குவதற்குப் பல ஆண்டுகள் முன்பாக காந்தி திரைப்படத்தை இயக்க விரும்பியவர் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர் டேவிட் லீன். எமரிக் பிரெஸ்பர்கர் என்பவரைத்தான் திரைக்கதை எழுத நியமித்தார். இருவரும் இந்தியா வந்து காந்தி தொடர்புடைய இடங்களை எல்லாம் பார்த்தார்கள். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

அட்டன்பரோ, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர். காந்தி குறித்த திரைக்கதையை அன்றைய இந்திய அரசிடம் கொடுத்து ஒப்புதல் கேட்டார் அட்டன்பரோ. அனுமதியும் கிடைத்தது, பொருளாதார உதவியும் செய்யப்பட்டது. (படத்திற்கான செலவு அன்றைய மதிப்பில் ரூ.20 கோடி என்றால் அதில் 6.87 கோடி ரூபாய் அன்றைய காங்கிரஸ் அரசு வழங்கியது)

இவை எதையும் தெரியாமல் ‘காந்தி’ என்ற ஒரு பெயரை மட்டும் தெரிந்தவராக இருந்தால் மட்டும்தான் மோடியைப் போல பேச முடியும். சினிமாவின் மூலமாகத்தான் காந்தி பிரபலமானார் என்று சொல்லவும் இந்திய நாட்டில் ஒருவர் இருக்கிறார் என்பதை காட்டிவிட்டார் மோடி.

Also Read: ஆர்.என். ரவி என்ன மாதிரியான ரகத்தைச் சேர்ந்தவராக இருப்பார்? : முரசொலி கடும் தாக்கு!