murasoli thalayangam
இந்தியாவுக்காகவே பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - முரசொலி விளக்கம்!
முரசொலி தலையங்கம்
நாம் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் கொச்சைப் படுத்துகிறோமாம். உத்தரப்பிரதேசத்தில் போய் பேசி இருக்கிறார் மோடி. என்ன கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள் என்பதைச் சொல்லி இருக்க வேண்டாமா?
உத்தரப்பிரதேசத்தில் வாக்கு கேட்பவர், அந்த மாநிலத்தின் மக்களுக்கு என்ன நன்மை செய்தார் என்பதைச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்திருந்தால்தானே சொல்வார்? அப்படி எந்தச் சாதனையும் சொல்வதற்கு இல்லாததால் தான் தி.மு.க.வையும், முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களையும் மறைமுகமாகத் தாக்கும் வகையிலும், ‘இந்தியா’ கூட்டணியைச் சிதைக்கும் வகையிலும் பொய்யான செய்திகளைச் சொல்லி வருகிறார் பிரதமர்.
தேர்தலுக்கு முன்னதாகவே ‘இந்தியாவுக்காகப் பேசுவோம்’ என்பதைத்தான் தனது முழக்கமாக முன் வைத்தார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதுவே பிரதமருக்கு இதுவரை தெரியவில்லை.
“தமிழ்நாட்டின் முதலமைச்சராக முக்கியக் கட்சியின் தலைவராக இருக்கும் நான் இப்போது இந்தியாவுக்காகப் பேச வந்திருக்கிறேன். இந்தியாவுக்காக அனைவரும் பேசியாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காகவே இந்தக் குரல் பதிவுத் தொடரை உங்களுக்கு வழங்க முன் வந்துள்ளேன். இனி இந்தியாவுக்காகத் தொடர்ந்து பேச இருக்கிறேன். இந்திய மக்களின் குரலை எழுப்ப இருக்கிறேன்” என்ற முன்னுரையோடுதான் ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ (Speaking For India) தொடரையே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கினார்கள்.
இந்திய நாடு இப்போது ஆபத்தில் இருக்கிறது. காலம் காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தைச் சிதைப்பதன் மூலமாக இந்தியாவையே சிதைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி முயற்சிக்கிறது என்பதையே முதலமைச்சர் அவர்கள் அழுத்த்மாக சொல்லியிருக்கிறார்கள்.
“குஜராத் மாடல் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி மாடல் பத்தாண்டு காலத்தில் மோசடி மாடலாக முடியப் போகிறது. இனியொரு முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியா இருக்காது, இந்தியாவுக்கு எதிர்காலமே இருக்காது என்று எச்சரிக்க விரும்புகிறேன்” என்றுதான் முதலமைச்சர் அவர்கள் எச்சரித்தார்கள்.
இந்தியாவின் பன்முகத்தன்மையை பாசிச பா.ஜ.க.வின் செயல்கள் எப்படி சிதைக்கும் என்பதைதான் முதலமைச்சர் அவர்கள் விரிவாக விவாதித்தார்கள். பா.ஜ.க. என்பது மாநிலங்களை, தேசிய இனங்களை, மாநில மொழிகளை, மக்களது பண்பாடுகளை எந்த வகையில் எல்லாம் சிதைத்து வருகிறது என்பதையும் விரிவாகச் சொன்னார் முதலமைச்சர் அவர்கள்.
“2014 முதல் கடந்த ஆண்டு வரை நம் மாநிலம் ஒன்றிய அரசுக்கு கொடுத்த வரி 5.16 லட்சம் கோடி ரூபாய். ஆனால், வரிப் பகிர்வாக நாம் திரும்பப் பெற்றது 2.08 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. மற்றவர்களுக்கு கூடுதலாக ஏன் தருகிறீர்கள் என்று நான் கேட்கவில்லை. எங்களுக்கும் ஏன் தரவில்லை என்றுதான் நான் கேட்கிறேன்” என்று மிகச் சரியாகவே தனது வாதங்களை வைத்தார் முதலமைச்சர் அவர்கள்.
கொரோனா காலத்தில் வடமாநிலத் தொழிலாளர் பட்ட துயரங்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்தான் பேசினார்கள்.
“நம்மை விட வடமாநில மக்களை தான் கொரோனா அதிகம் பாதித்தது. ஊரடங்கு போட்ட மோடி, அந்த மக்களுக்கு வாகனப் போக்குவரத்து கூட ஏற்பாடு செய்யவில்லை. பல நூறு கிலோ மீட்டர் தூரம் தலையில் பொருட்களையும், இடுப்பில் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு லட்சக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் ஊருக்குப் போனார்கள். இரயில் பாதையில் நடந்து சென்றவர்கள் களைப்பால் அதிலேயே படுத்து தூங்க, ரயில் ஏறி 16 பேர் பரிதாபமாகச் செத்தார்கள். இதை விடக் கொடூரமான சம்பவம் வேண்டுமா?” என்று தென்சென்னை - மத்திய சென்னை பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் அவர்கள் கேட்ட கேள்வி என்பது உத்தரப்பிரதேச மக்களுக்கும், பீகார் மக்களுக்கும் சேர்த்துத்தானே?
தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்களை தயாரித்து வெளியிட்டது யார்? பா.ஜ.க.வின் தகவல் தொழில் நுட்ப பிரிவினர். அதை உடனடியாக மறுத்தது மட்டுமல்ல; அந்த வதந்தியை யாரும் நம்பி மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பீகார் அதிகாரிகளை இங்கே வரவழைத்து பார்க்க வைத்து, அந்த தகவலை அங்கே போய் சொல்ல வைத்து, குழப்பம் ஏற்பட்டு விடாமல் துரிதமாகவும் விவேகமாகவும் தடுத்தவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
போலிகளை உருவாக்கி, பொய்ச் செய்திகளை பரப்பி அமைதியான இந்தியாவை அமளி இந்தியாவாக மாற்ற நினைப்பது பா.ஜ.க.வா? தி.மு.க.வா?
மக்களைப் பிரித்து, அரசியல் கட்சிகளைப் பிரித்து, யாரையும் ஒன்று சேர விடாமல் தடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்தது மோடி கூட்டம். அதில் மண் அள்ளிப் போட்டு விட்டது ‘இந்தியா’ கூட்டணி.
‘மோடியை வீழ்த்துவோம்’ என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் இத்தனை கட்சிகள் ஒன்று சேர்வார்கள் என்று பா.ஜ.க. நினைக்கவில்லை. அதனால்தான், இது போன்ற பொய்களின் மூலமாக திசை திருப்பப் பார்க்கிறார்கள்.
“மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியை கையில் எடுத்திருக்கிறார் மோடி” என்று முதலமைச்சர் செய்துள்ள விமர்சனம்தான் முழுக்க முழுக்கச் சரியானதும் ஆகும்.
“இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்” என்பதுதான் தி.மு.க.வின் தேர்தல் பரப்புரையே! தி.மு.க., ‘இந்தியா’வுக்காகத்தான் பேசியது.
மோடி தனக்கு மட்டுமே பேசிக் கொண்டு இருக்கிறார். தன்னைக் காக்க இந்தியாவைப் பலியிடத் துடிக்கிறார். ஒரு தேர்தல் வெற்றிக்காக தேசத்தின் அமைதியையே சிதைக்கப் பார்க்கிறார் மோடி. இதுதான் கீழ்த்தரமான அரசியல்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!