murasoli thalayangam
“பாஜக பெண்களை போற்றும் லட்சணம் இதுதான்”: பிரிஜ் பூஷன், ரேவண்ணா, ஆனந்த் போஸ் விவகாரத்தில் முரசொலி ஆவேசம்!
பெண் சக்தியைப் பற்றி மாநிலம் மாநிலமாகப் போய் முழங்கும் பிரதமர் மோடி, பாலியல் விவகாரத்தில் சிக்கியவர்கள் விவகாரங்களில் எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பார்த்து இந்தியாவே தலை கவிழ்கிறது என தெரிவித்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பா.ஜ.க. எம்.பி., பிரிஜ் பூஷனுக்கு அறிமுகம் தேவையில்லை. மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் தொல்லை செய்ததன் மூலமாக இந்தியாவுக்கே மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்தியவர். 2023 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ்பூஷன் ஷரன் சிங்மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். பிரிஜ் பூஷனும், பயிற்சியாளரும், தேசிய முகாமில் பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக வினேஷ் போகட் அழுதுகொண்டே கூறினார்.
இந்த விவகாரம் பெரிதாக ஆனதும் உடனடியாக அவர்மீது வழக்குப் பதிந்திருக்க வேண்டும். அதனைச் செய்யவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஏப்ரல் 21 ஆம் தேதி, பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக கனாட் பிளேஸ் காவல் நிலையத்திற்குப் புகார் செய்ய மல்யுத்த வீராங்கனைகள் சென்றார்கள். ஆனால் போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. ஏன் வழக்குப் பதியவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
அதன்பிறகுதான் இவர் மீது டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் பிரிஜ் பூஷன் மகனுக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு கொடுத்துள்ளது. பிரிஜ் பூஷன் மகன் கரன் பூஷன் சிங், உ.பி. மாநிலம் கைசர்கஜ் தொகுதியில் போட்டியிடுகிறார்.
நாங்கள் அனைவரும் எங்கள் தொழிலை பணயம் வைத்து வெயிலிலும் மழையிலும் பல நாட்கள் தெருக்களில் தூங்கினோம். இன்று வரை பிரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. நாங்கள் நீதியை மட்டுமே கேட்கிறோம். இன்று பிரிஜ் பூஷனின் மகனுக்கு தேர்தலில் சீட் கொடுத்து நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள் என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் சொல்லி இருப்பது மோடி காதில் விழவில்லையா?
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் மலையளவு குவிந்துள்ளன. தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து கர்நாடகாவில் போட்டியிடுகின்றன. குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரஜ்வல் ரேவண்ணா இப்போது எம்.பி.யாக இருக்கிறார். இப்போதும் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மாபெரும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
பாலியல் வீடியோக்கள் வெளியானதும் பிரஜ்வல் ரேவண்ணா, வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டார். இதைத் தொடர்ந்து தேவகவுடாவின் மகன் ரேவண்ணா எம்.எல்.ஏ. மீதே பாலியல் புகாரை ஒரு பெண் கொடுத்தார். இதன்படி ரேவண்ணா கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு மட்டுமல்ல; பா.ஜ.க.வுக்கும் இது பெரிய நெருக்கடியை உருவாக்கி விட்டது. கர்நாடகாவில் பா.ஜ.க. கவிழப்போவதற்கு மிக முக்கியக் காரணமாக இது அமைந்துவிட்டது.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும். இந்தக் குற்றத்தைத் தடுத்திருக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. அவருக்குக் கடுமையான தண்டனை தர வேண்டும் என்று தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார் பிரதமர் மோடி. உண்மையில் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பா.ஜ.க.வின் ஆதரவு இல்லை, வாபஸ் பெறுகிறோம் என்று அறிவித்திருக்க வேண்டாமா? அதைச் செய்யாமல் பிரதமர் பூசி மெழுகினார்.
பணி நிரந்தரம் செய்வதாகச் சொல்லி அவரது அறைக்கு என்னை அழைத்தார். நானும் சென்றேன். பாலியல் அத்துமீறலில் நடந்து கொண்டார் என்று மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ் மீது பெண் ஊழியர் புகார் அளித்தார். 2022 ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்க ஆளுநராக இருப்பவர் இவர். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கும், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் குடைச்சல் கொடுப்பதற்காகவே இவரை வைத்திருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மதிக்காமல் தன்னிச்சையாக நடந்து கொள்வதில் கைதேர்ந்தவர் இந்த ஆளுநர். ஆனால் தனிப்பட்ட நடத்தையில் நாற்றம் அடிக்கிறது.
ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றும் பெண் ஒருவர், கொல்கத்தாவில் ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதியன்று ஒரு புகாரை அளித்தார். ஏப்ரல் 24 ஆம் தேதி ஆளுநர் அவரது அறைக்கு என்னை அழைத்தார். பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இன்றும் அழைத்துச் சீண்டினார் என்று அந்தப் புகாரில் அந்தப் பெண் சொல்லி இருக்கிறார்.
இதற்கு நேரடியாகப் பதில் சொல்லாத ஆளுநர், இது எனக்கு எதிரான அரசியல் சதி என்று சொன்னார். மேற்கு வங்கத்தில் இருக்கப் பயந்து கேரளாவுக்குப் போய்விட்டார். காவல்துறை துணை ஆணையர் இந்திரா முகர்ஜி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது மேற்கு வங்க அரசு. ஆனால் காவல் துறையினர் ஆளுநர் மாளிகைக்குள் வரக் கூடாது என்று தடை போட்டு விட்டார் ஆளுநர்.
மேற்கு வங்கத்துக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த பிரதமர் மோடி, இது பற்றிப் பேசவே இல்லை. ஆளுநர் மாளிகையில்தான் தங்கியிருந்தார். இதுவரை இந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனந்த் போஸ் ஆளுநராகவே இன்னும் தொடர்கிறார். பா.ஜ.க., பெண் சக்தியைப் போற்றும் லட்சணம் இதுதான். பா என்பதன் அர்த்தத்தையே மாற்றிவிட்டார்கள் என குற்றம்சாட்டியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!