murasoli thalayangam
“நான்காம் ஆண்டில் திராவிட மாடல் அரசு - சாதனை முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!
நான்காம் ஆண்டில் நமது அரசு - நம் முதல்வர்!
இருப்பதை அப்படியே வைத்துக் கொண்டு ஓட்டுபவர் சாதாரண முதலமைச்சராக இருப்பார். ஆனால் புதியவற்றை உருவாக்குபவரே சாதனை முதலமைச்சராக மலர்வார், வளர்வார். அத்தகைய சாதனை முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...” என்று சொல்லி விட்டு இதே மே 7 ஆம் நாள் தலைநிமிர்ந்து பார்த்தார். தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. "வாக்களிக்க மறந்தவர்கள், இவருக்கு வாக்களிக்காமல் போனோமே என்று வருந்தும் அளவுக்கு நல்லாட்சியைத் தருவேன்" - என்று சொன்னார் தலைவர் கலைஞர் மகன். இன்று தமிழ் மக்களின் மனங்களில் உயிர்மகனாக உயர்ந்து நிற்கிறார்.
தனது ஆட்சிக்கு ‘திராவிட மாடல் ஆட்சி' என்று அடையாளம் சொன்னார். ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளச் சொல்லாக தந்தை பெரியார் அறிவித்த சொல் ‘திராவிடம்' என்பது. திராவிடம் - தமிழம் என்பதை ஒரு பொருள் தரும் இருதனிச் சொல் என்றே பெரியாரும் சொன்னார். பெரும் புலவர்களும் சொன்னார்கள். புல்லுருவிகள் புலம்பிக் கிடந்தார்கள். அத்தகைய 'திராவிடக் கருத்தியலை தனது ஆட்சியின் இலக்கணமாகச் சொன்னார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
‘எல்லார்க்கும் எல்லாம்' என்பதே இதன் உள்ளடக்கம் என அறிவித்தார்கள். மூன்றாண்டு கால ஆட்சியானது எல்லார்க்கும் எல்லாம் வழங்கும் ஆட்சியாக அமைந்துள்ளது. அனைத்துத் துறை வளர்ச்சி - அனைத்து மாவட்ட வளர்ச்சி - அனைத்து சமூக வளர்ச்சி -- என்று இலக்கை குறித்தார் முதலமைச்சர். சில அரசுகளில் குறிப்பிட்ட துறைகள் மட்டுமே சிறப்பு கவனம் பெறும். சில மாவட்டங்களுக்கு மட்டுமே பெரிய திட்டங்கள் போய்ச் சேரும். அப்படி இல்லாமல் அனைத்துத் துறையும் - அனைத்து மாவட்டங்களும் ஒரே சீரான வளர்ச்சியை அடையும் வகையில் தனது ஆட்சியைக் கொண்டு செலுத்தியதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தனிச் சிறப்பு ஆகும்.
‘அனைத்து சமூக வளர்ச்சி' - என்று அவர் சொன்னதுதான் முதலமைச்சரின் பெரும் சிறப்பு ஆகும். பட்டியலினத்தவர் -- பழங்குடி யினர் - அருந்ததியர் - பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர்- விளிம்பு நிலை மக்கள் -- ஏழை எளியோர் -- கோவில் அர்ச்சகர்கள் -- சிறுபான்மையினர் - பெண்கள் -- இளைஞர்கள்- திருநங்கைகள் -- மாற்றுத்திறனாளிகள் - அயலகத் தமிழர் -- இங்கு வந்து வாழும் ஈழத் தமிழ் மக்கள் - - ஆகிய அனைத்து சமூகங்களின் வளர்ச்சியையும் ஒருசேரக் கவனித்த கனிவுக் குணத்தில்தான் 'திராவிட மாடல்' என்ற சொல்லின் உண்மைப் பொருள் ஒளிர்கிறது.
அதேநேரத்தில் மாநிலத்தின் முழு வளர்ச்சிக்கான பெருந்தொழில் களையும் உருவாக்கிக் காட்டிவிட்டார் முதலமைச்சர். புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உருவாகிக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டை நோக்கி இந்திய நிறுவனங்கள், உலக நிறுவனங்கள் வருகின்றன. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 10.69 விழுக்காடாக இருக்கும் என்று ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. இது அகில இந்திய அளவை விட மிகமிக அதிகம்.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 6,115 புத்தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. இதில் மகளிர் புத்தாக்கத் தொழில்களும் உண்டு. பட்டியலின பழங்குடியினர் மேம்பாட்டு தொழில்களும் உண்டு. இதன் மூலமாக லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பது அனைத்தையும் விட முக்கியம் ஆகும். இவர்களுக்குத் தேவையான மனித சக்தியை உருவாக்கித் தந்துள்ளார் முதலமைச்சர்.
'நான் முதல்வன்' என்ற முதலமைச்சரின் கனவுத் திட்டமானது தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்களை அனைத்துத் திறமைகளும் கொண்டவர்களாக உருவாக்கி வருகிறது. ஒரு மாநிலத்தின் மிக முக்கியமான வளம் என்பது அறிவு வளம் ஆகும். அதனை உருவாக்கும் நோக்கில்தான் நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களை உருவாக்கித் தந்துள்ளார் முதலமைச்சர். இது ஐந்தாண்டு திட்டம் அல்ல, தலைமுறை தலைமுறையாக உதவப்போகும் வாழ்நாள் திட்டம் ஆகும்.
‘பெருந்தலைவர் காமராசர் கண் கொடுத்தார், கலைஞர் கருணாநிதி எழுந்து நடக்க வைக்க வேண்டும்' என்று கட்டளையிட்டார் தந்தை பெரியார். நடக்க - ஓட மட்டுமல்ல -- உயரத்தை அடைந்து சாதனைகள் செய்து பரிசுகளை அள்ளவும் வைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . பெண்கள் முகத்தில் தெரியும் பூரிப்புக்கு அளவே இல்லை. 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாதம்தோறும் கொடுத்த ஆயிரம் ரூபாயில் படித்து, முன்னேறினேன்' என்று ஒரு பெண், ஐம்பது ஆண்டுகள் கழித்துச் சொல்லும் போது தான் முதலமைச்சரின் முழுநன்மை வெளிப்படும்.
சமூகத்தின் சரிபாதியான பெண்களுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக வழங்கும் ஆயிரம் ரூபாயும், கட்டணமில்லா விடியல் பயணமும் சமூக - பொருளாதார-- குடும்ப, மனித வளர்ச்சிக்கு உரமாக அமைந்துள்ளது. 'எங்க அண்ணன் தரும் தாய் வீட்டுச் சீர்' என்று மகளிர் மனம் நெகிழ்ந்து வருகிறார்கள்.
மூன்று ஆண்டுகள் தான் முடிந்துள்ளது. ஆனால் முப்பது ஆண்டு சாதனைகள் முகிழ்ந்துள்ளது. நான்காவது ஆண்டு தொடங்க உள்ளது. நானிலம் சிறக்க உள்ளது. பல்லாண்டு வாழ்க என திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்துவோம்! கோன் வாழ்க! கொற்றம் வாழ்க!
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!