murasoli thalayangam
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காதவர்கள்!
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்று ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் சொல்வதற்கு இதுவரை பதில் சொல்லாத பிரதமர் மோடி, இப்போதுதான் வாய் திறந்து பதில் சொல்லி இருக்கிறார். ‘அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைக்கவில்லை’ என்றும் பிரதமர் மோடி இப்போது சொல்லி இருக்கிறார்.
“400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி ஏன் சொல்கிறார் என்றால், அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான்” என்று பா.ஜ.க. எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான அனந்த குமார் சொன்னார். ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணம்’ என்று தமிழ்நாட்டு ஆளுநர் ரவியும் அவ்வப்போது சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தை இவர்கள் மதிக்காதவர்கள் மட்டுமல்ல, மாற்ற நினைப்பவர்கள் என்பதை இவர்களது பழைய கால வரலாறுகளே சொல்லும். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் மிக மூத்தவரான குருஜி என அழைக்கப்படும் கோல்வார்க்கர், ‘ஆர்கனைசர்’ இதழில் ( 30.11.1949) என்ன எழுதினார் என்றால்...
“நமது அரசியல் அமைப்பில் பழம் பாரதத்தில் இருந்த தனித்துவமான சட்ட ஒழுங்குகள் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. மனுவின் நீதிச் சட்டங்கள் காலத்தால் ஸ்பார்ட்டாவின் லைக்கர்ஸ், பெர்ஷியாவின் சோலோன் என்பவர்களுக்கெல்லாம் முந்தியது. இன்னும் மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளவை மீது உலகமே புகழ் மாலை சூட்டுகிறது. அவை வெகு இயல்பாகக் கீழ்ப்படியும் தன்மையையும், ஒத்து வாழ்வதையும் உயர்த்திப் பிடிக்கின்றன. ஆனால் நம் அரசியலமைப்பை எழுதிய மேதாவிகளுக்கு இந்த சிறப்பு பெரிதாகத் தெரியவில்லை” என்று சொன்னார் கோல்வார்க்கர்.
அதாவது மனுஸ்மிருதியை இந்திய நாட்டின் சட்டமாக ஆக்க வேண்டும் என்று சொன்னவர்கள் இவர்கள். மனுவில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் உள்ள பகுதிகளை இங்கு விவரிக்கத் தேவையில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை 1993 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் நாள் சங் பரிவார அமைப்புகள் வெளியிட்டது. “நாட்டின் கலாச்சாரமும், குணநலன்கள், சூழ்நிலைகள் ஆகிய எல்லாவற்றுக்கும் விரோதமான முறையில் தற்போதைய அரசியலமைப்புச் சட்டம் உள்ளது. அது அன்னியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது” என்று அந்த அறிக்கை சொன்னது.
“இந்த அரசியலமைப்புச் சட்டம் விளைவித்துள்ள தீங்குடன் ஒப்பிடும் போது 200 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி நாட்டுக்கு ஏற்படுத்திய சேதாரங்கள் மிகவும் குறைவானதே” என்று அந்த அறிக்கை சொன்னது. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை இந்த அறிக்கை எதிர்க்கிறது. சிறுபான்மையினர் நலனை புறக்கணிக்கிறது. இத்தகைய சட்டத்தைதான் அவர்கள் புதிய அரசியலமைப்பு சட்டம் என்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த ராஜேந்திர சிங், “இந்தியா பன்முகத் தன்மை கொண்டது என்று அரசியல் சட்டம் சொல்கிறது. நமது கலாச்சாரம் பன்முகத்தன்மை கொண்டது அல்ல. இந்த நாட்டின் உயர் பண்புகளுக்கும் அறிவுத் திறனுக்கும் ஏற்ற ஒரு அரசியலமைப்புச் சட்டம் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும்” என்று சொன்னார். இதையே அன்றைய பா.ஜ.க. தலைவரான முரளிமனோகர் ஜோஷியும் சொன்னார். ‘அரசியலமைப்புச் சட்டத்தை புதிதாக பரிசீலிக்க வேண்டும்’ என்று ஆந்திர மாநிலம் அனந்தபூர் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தினார் ஜோஷி.
“மனு தர்ம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியலமைப்பு சட்டம் வகுக்கப்பட வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான சுதர்சன் தெளிவாகவே சொன்னார்.
2017 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த இந்திய வழக்கறிஞர்கள் கூட்டத்தில் பேசிய இன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “நமது அரசியலமைப்புச் சட்டம், அயல்நாட்டுத் தரவுகளை வைத்து எழுதப்பட்டது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமது அரசியலமைப்பு நமது நாட்டின் விழுமியங்களைக் கொண்டே அமைய வேண்டும்” என்று சொல்லி இருந்தார்.
இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையானது மூவர்ணக் கொடியை இந்தியாவின் தேசியக் கொடியாக அறிவித்த போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதனை ஏற்கவில்லை. இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற போது வேடிக்கை பார்த்தவர்கள் இவர்கள். இந்துக்களும் இசுலாமியர்களும் இணைந்து பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடுவதை - இது போன்ற கூட்டு தேசிய நடவடிக்கைகளை எதிர்த்தவர்கள் இவர்கள். ‘வேர் வரை செல்லும் வேறுபாடுகள் கொண்ட இனங்களும் கலாச்சாரங்களும் ஒன்றுபட்ட முழுமையாக
ஒன்றிணைக்கப்படுவது முற்றிலும் இயலாத ஒன்று என்பதை ஜெர்மனி நமக்குக் காட்டியுள்ளது” என்று கோல்வார்க்கர் சொன்னது இதனைத் தான்.
ஜனநாயகம் என்பதையே மேலை நாட்டுக் கருத்தாக்கம் என்று நினைக்கக் கூடியவர்கள் இவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்களது சிந்தனையில் உருவாக்கப்படும் சட்டங்கள் ஆகியவற்றுக்கு மரியாதை தராமல் ‘ஏகசாலக் அனுவர்தித்வா' என்று சொல்லப்படும் ஒற்றைத் தலைவரின் அதிகாரத்துக்கு கேள்விக்கு இடமின்றி அடிபணியும் கொள்கையை அரசியல் – - ஆட்சியல் கோட்பாடாக மாற்றுவதுதான் இவர்களது நடைமுறையாகும். இன்றைக்கு பா.ஜ.க. அப்படித்தான் இருக்கிறது. மோடிக்கு அடிபணிந்து கிடக்கிறது ஜனநாயகமற்று. இதேபோல இந்திய நிர்வாகத்தையும் மாற்ற நினைக்கிறார்கள். மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்தால் இதனைத்தான் செய்வார்கள்.
மொழி வழி மாநிலங்களைக் கலைத்து விடுவார்கள். மத்தியில் ஒரே ஒரு ஆட்சி இருக்கும். இந்தியாவை பல்வேறு ‘சனபாதங்க’ளாகப் பிரித்துவிடுவார்கள். சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டு விடும். அனைத்து தேசிய இனங்களின் மொழியும், பண்பாடும் அழிக்கப்பட்டு விடும். இத்தகைய அழிவை உருவாக்கத் துடிக்கிறது பா.ஜ.க.. ஆனால் அது நடக்காது.
அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் வலிமையானது, அதனை யாராலும் மாற்ற முடியாது என்பதை இந்திய நாட்டு மக்கள் இந்த தேர்தலில் மெய்ப்பிப்பார்கள். சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மாற்றுவார்கள் மக்கள்!
முரசொலி தலையங்கம்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்