murasoli thalayangam
இதுதான் பாஜகவின் சமூகநீதியா ? - பாஜகவின் இடஒதுக்கீடு மோசடியை அம்பலப்படுத்திய முரசொலி !
முரசொலி தலையங்கம் (01.05.2024)
சமூகநீதியை யார் பேசுவது?
தினந்தோறும் ஏதாவது ஒரு பீதியைக் கிளப்பி விடுவது பிரதமர் மோடியின் பணியாக உள்ளது. ‘உங்கள் தாலி போகப் போகிறது?’ என்று சொன்னவர் இப்போது சமூகநீதியைப் பற்றி பேசத் தொடங்கி இருக்கிறார். சமூக அநீதியின் நாயகரான அவரெல்லாம் சமூகநீதியைப் பற்றி பேசத் தொடங்கி இருக்கிறார். ‘பட்டியலின –- பழங்குடி மக்களின் இடஒதுக்கீட்டை எல்லாம் சிறுபான்மை யினருக்கு கொடுத்துவிடப் போகிறது இந்தியா கூட்டணி ஆட்சி’ என்று சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ... இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்... என்று தினந்தோறும் ஏதாவது ஒரு மாநிலத்தில் பேசிக் கொண்டிருப்பவர் அவர்தான். இந்தியா கூட்டணியின் ஆட்சிதான் வரும் என்பதை இக்கூட்டணித் தலைவர்களை விட மோடிதான் அதிகமான நம்பிக்கையில் இருக்கிறார். அதனால்தான் அவர்கள் ஆட்சியில் என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள் என்பதை அவர் விளக்குவதில் தனது நேரத்தைச் செலவு செய்கிறார். தனது ஆட்சிக் காலத்தில் பட்டியலின -– பழங்குடி மக்களின் சமூகநீதி உரிமைகளைப் பற்றி கவலையேபடாதவர் தான் பத்தாண்டு காலம் பிரதமராக இருந்த மோடி. சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரையறை ஆகும். இதில் பொருளாதார அளவுகோலை புகுத்தும் முயற்சியை பலரும் பலகாலமாகச் செய்ய முயற்சித்தார்கள். முடியவில்லை. ஆனால் பா.ஜ.க. ஆட்சி அதனை செயல்படுத்தி விட்டது. உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க – உயர் ஜாதி ஏழைகள் என்று போட்டு - – மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளம் வாங்குபவரை ஏழையாகக் காட்டி சமூகநீதி மோசடி செய்தது மோடி ஆட்சி.
மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டவர்க்கு 27 சதவிகிதம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் சொன்ன போது 27 சதவிகிதமும் தர மாட்டோம், 50 சதவிகிதமும் தர மாட்டோம் என்று நீதி மன்றத்தில் முதலில் வாதிட்டது மோடி அரசு.உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இடங்களுக்குப் பொருத்தமான விண்ணப்பதாரர்கள் கிடைக்கவில்லை என்றால் பொதுப் பிரிவினருக்கு அவற்றைத் கொடுக்கலாம் என்று SC, ST மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீடு நீக்குவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது மோடி ஆட்சி யு.ஜி.சி. இவர்கள்தான் இன்று சமூக நீதியைப் பற்றி பேசுகிறார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள், ‘இடஒதுக்கீட்டை அழிக்கும் மோடி அரசு’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் பல்வேறு உதாரணங்களைச் சொல்லி இருந்தார்.
* மோடி அரசு ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டை சரியாகப் பின்பற்றுவதில்லை. 2021-–22 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் ஆய்வறிக்கையைப் (AISHE Report) பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளலாம். இந்தியா முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மொத்தம் 15,97,688 ஆசிரியர்கள் பணி புரிவதாக அந்த அறிக்கை கூறுகிறது ( பக்கம் 161). அதில் எஸ்.சி. பிரிவினருக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தால் 2,39,653 பேர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 1,48,635 பேர்தான் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக உள்ளனர். 91,018 இடங்கள் மறுக்கப்பட்டு பின்னடைவாக உள்ளன.
* எஸ்.டி. பிரிவினருக்கு 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும். அதன்படி 1,19,826 பேர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 41,607 பேர் மட்டுமே எஸ்.டி. பிரிவிலிருந்து ஆசிரியர் பணியில் உள்ளனர். 78159 இடங்கள் மறுக்கப்பட்டு பின்னடைவாக உள்ளன.
* ஆசிரியர் அல்லாத பணியிடங்களிலும் இதே போன்று இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக 12,08,446 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உள்ளன. அதில் எஸ்.சி. வகுப்பினர் 1,81,876 பேர் உள்ளனர்; எஸ்.டி. வகுப்பினர் 56,569 பேர் உள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் 4 ஆம் நிலை பதவிகளிலேயே உள்ளனர்.
* மத்திய பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற நிறுவனங்கள்தான் ஒன்றிய அரசால் நடத்தப்படுபவை. அவற்றிலும் ஆயிரக்கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன.
* மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்.சி. பிரிவினருக்கென ரிசர்வ் செய்யப்பட்ட 307 பேராசிரியர் பதவிகளில் 231ம்; 620 இணைப் பேராசிரியர் பதவிகளில் 401 ம்; 1357 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 276 ம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. எஸ்.டி. பிரிவினருக்கு அதுபோலவே 123 பேராசிரியர், 232 இணைப் பேராசிரியர் மற்றும் 188 உதவிப் பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளன. ஓ.பி.சி. பிரிவினருக்கு 367 பேராசிரியர் பதவிகளில் 311 பதவிகளும்; 752 இணைப் பேராசிரியர் பதவிகளில் 576ம்; 2332 உதவிப் பேராசிரியர் பதவி களில் 672 ம் நிரப்பப்படவில்லை.
* ஐ.ஐ.டி.களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட 11,170 ஆசிரியர் பதவிகளில் 4,502 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. ஐ.ஐ.எம்.களில் எஸ்.சி. பிரிவினருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட 97 பதவிகளில் 53 இடங்களும் எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 40 பதவிகளில் 34 இடங்கள் நிரப்பப்படவில்லை. ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை.
இதுதான் பா.ஜ.க. மோடி அரசின் சமூக நீதியாகும். இவர்தான் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பட்டியலின - பழங்குடி இடஒதுக்கீடு சிறுபான்மையினருக்கு போய்விடும் என்று பீதியைக் கிளப்புகிறார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!