murasoli thalayangam
”தேர்தல் பத்திரம் தவறு என்பதையே உணராத பிரதமர்” : முரசொலி கடும் சாடல்!
முரசொலி தலையங்கம் (22-04-2024)
மோடியின் கவலைகள்
உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தேர்தல் பத்திரம் மீண்டும் வரும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். இதை விட ஆணவமான அறிவிப்பு இருக்க முடியாது.
“பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஊழலை ஒழிப்பதற்கான அனைத்து வழிகளையும் மேற்கொள்வோம். இதில், அரசியல் குறுக்கீடு இருந்தால் முறியடிப்போம்” - 2014 ஏப்ரல் 18-ம் தேதி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் ஆவதற்கு முன்பு இருந்த மோடி சொன்னார். தேர்தல் பத்திரம் மூலம் அவர் ஊழலை ஒழித்த லட்சணம் உச்ச நீதிமன்றத்தில் சந்தி சிரித்தது. ‘தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது’ என உச்சநீதிமன்றம் ஓங்கி குட்டியது.
கட்சிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதி வழங்குபவர்களின் பெயர், தொகை விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் அளிக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் முன்பு குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை தேர்தல் பத்திரங்கள் திட்டம் மூலம் திருத்திய பா.ஜ.க அரசு, கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்களின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை என மாற்றியது. இந்தத் திட்டத்தில் எங்கிருந்து பணம் வருகிறது? என்பதை தெரிந்துகொள்ளவே முடியாது. கமிஷன், லஞ்சம், கறுப்புப் பணத்தைத் தேர்தல் பத்திரம் திட்டத்தில் மூடி மறைத்து முறை கேடுகளை அரங்கேற்றியது மோடி அரசு.
இந்தியாவில் அதிகத் தொழில்களைச் செய்யும் ஒரு நிறுவனம், இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டது ஆகும். அந்த நிறுவனம், பா.ஜ.க.வுக்கு ரூ.15 கோடி கொடுத்தது. வெளிநாட்டு நிறுவனம், இந்தியாவில் இயங்கும் ஒரு கட்சிக்கு நன்கொடை தரலாமா என்பதை ஒரு அமைப்பு கேள்வி எழுப்பி வழக்கு தாக்கல் செய்தது. ‘Foreign Contribution (Regulation) Act - FCRA சட்டப்படி இத்தகைய நன்கொடை தவறுதான் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உடனே, இதை சட்டபூர்வமாக்க கொண்டு வரப்பட்ட சட்டம்தான் தேர்தல் பத்திரங்கள் ஆகும். இந்த சட்டவிதிகளையே முன் தேதியிட்டு மாற்றிவிட்டது பா.ஜ.க. அரசு.
இப்படித்தான் 8 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்டியது பா.ஜ.க. அது வித்தியாசமான கட்சி அல்லவா? நிதி கொடுக்காத நிறுவனங்களை மிரட்டியும், அல்லது மிரட்டப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து அவர்களைத் தப்பிக்க வைக்கவும் நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெற்றுள்ளார்கள். அரசின் ஒப்பந்தங்களைத் தருவதற்கு முன், தேர்தல் பத்திரங்கள் மூலமாக தனது கட்சிக்கு நன்கொடைகள் பெற்றுள்ளார்கள். அப்படி நன்கொடைகள் கொடுத்தவர்க்கு மட்டுமே ஒப்பந்தங்களையும் தந்துள்ளார்கள்.
15.2.2024 அன்று இந்தத் தேர்தல் பத்திரம் திட்டத்தையே தடை செய்து விட்டது உச்சநீதிமன்றம். தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு இத்தகைய மகத்தான தீர்ப்பை அளித்தது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்துவிட்டது. ‘ஊழல் மோடி’ என்ற பட்டப்பெயரைப் பெற்று அவரது முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது. இதன்பிறகும், ‘பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் திட்டம் அமல்படுத்தப்படும்’ என்று ஆணவமாக அறிவித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது அவரது சொந்தக் கருத்தல்ல, மோடியின் கருத்துதான்.
சில நாட்களுக்கு முன்னால் ஏ.என்.ஐ. நிறுவனத்துக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடியும், இதுபோன்ற மோசடிப் பத்திரங்களை நியாயப்படுத்தியே பேசி இருந்தார். அவரது அனைத்துக் கவலைகளும், தேர்தல் பத்திரங்களை தடை செய்து விட்டார்களே என்பதாக மட்டுமே உள்ளது.
தேர்தலில் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் திட்டத்தை அவர் கொண்டு வந்தாராம். தேர்தலில் பணம் புழங்குவதை எவராலும் மறுக்க முடியாதாம். இதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதற்காக அவரே சிந்தித்து தேர்தல் பத்திரங்கள் திட்டத்தைக் கொண்டு வந்தாராம். ‘அதற்காக இந்தத் திட்டம் முற்றிலும் சிறந்த வழி என நான் சொல்லவில்லை’ என்றும் மோடியே சொல்லிக் கொள்கிறார்.
“முன்பெல்லாம் காசோலைகள் மூலமாக பா.ஜ.க. நன்கொடை பெற்றது. அந்த வழியில் நன்கொடைகள் தர முடியாது என்று வர்த்தகர்கள் சொல்லி விட்டார்கள். யாருக்கு எவ்வளவு தந்தோம் என்பது வெளியில் தெரிந்துவிடும் என்று அவர்கள் பயந்தார்கள். பா.ஜ.க.வுக்கு நன்கொடை கொடுக்க தயாராக இருந்தவர்களுக்கு அந்த துணிச்சல் இல்லை. அதனால் தேர்தல் பத்திரம் திட்டத்தை கொண்டு வந்தோம்.” என்று பட்டவர்த்தனமாக அந்தப் பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட ஒரு திட்டம் குறித்து பொதுவெளியில் ஒரு பிரதமர் இப்படி பேசியதே மிகப் பெரிய தவறு ஆகும். ‘இந்தத் திட்டம் ரத்தானால் இதனை எதிர்த்தவர்களும் பின்னர் வருந்துவார்கள்’ என்றும் வருந்தி இருக்கிறார் மோடி.
புலனாய்வு அமைப்புகளால் நெருக்கடிக்கு உள்ளான நிறுவனங்கள், பா.ஜ.க.வுக்கு நன்கொடை தந்துள்ளதை இந்தப் பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார் மோடி. ‘புலனாய்வு அமைப்புகளால் நெருக்கடிக்கு உள்ளான 26 நிறுவனங்களில் 16 நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை அளித்துள்ளன’ என்பதை அவரே ஒப்புக் கொண்டு ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார். எனவே, இவை அனைத்தும் தவறு என்பதையே பிரதமர் உணரவில்லை. எனவேதான் தனது வருத்தத்தை நிர்மலா சீதாராமன் மூலமாகச் சொல்ல வைத்திருக்கிறார் பிரதமர்.
தேர்தல் பத்திரம் மீண்டும் வரும் என்று நிர்மலா சீதாராமன் சொல்வதை தடை செய்யாத தேர்தல் ஆணையம், அந்தத் திட்டத்தை ஆதரித்து மணிக்கணக்கில் பிரதமர் பேட்டி அளிப்பதைக் கேள்வி கேட்காத தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சித் தலைவர்களின் பதிவுகளை மட்டும் நீக்கச் சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்?
மிரட்டி பணம் பறித்ததை நியாயப்படுத்த மோடிக்கு உரிமை இருக்கும் போது, அதை விமர்சிக்கும் உரிமை எதிர்க் கட்சிகளுக்கு இல்லையா?
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!