murasoli thalayangam
திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு மூன்று சாட்சிகள் : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?
முரசொலி தலையங்கம் (20-04-2024)
திராவிட மாடலுக்கு மூன்று சாட்சிகள்
‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு ஒரே நாளில் மூன்று இடங்களில் இருந்து பாராட்டுகள் கிடைத்துள்ளன. திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு இவை மிக முக்கியமான சாட்சியங்களாக அமைந்துள்ளன.
எங்களையும் முதல்வர் ஆக்கினார் !
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டங்களில் ஒன்று ‘நான் முதல்வன்’ திட்டம். இந்தத் திட்டம் எத்தகைய வெற்றியைப் பெற்று வருகிறது என்பதை நடந்து முடிந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு மெய்ப்பித்துக் காட்டி இருக்கிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் 42 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 41 ஆவது இடமும் பெற்ற மாணவர் புவனேஷ்ராம் சொல்லி இருக்கிறார்:
“கடுமையான அழுத்தத்திற்கு இடையே போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்த சூழலில், ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் தமிழ்நாடு அரசு எனக்கு உதவியது. இது பயனுள்ளதாக இருந்தது. பெற்றோரைச் சார்ந்து நீண்ட ஆண்டுகளாக UPSC தேர்வுக்குத் தயாராகி வந்த எனக்கு ‘நான் முதல்வன்’ திட்டம் மிக உதவியாக இருந்தது. என்னைப் போன்று போட்டித் தேர்வுகளில் சாதிக்கும் மாணவர்களுக்கு அரசின் உதவி சரியான தருணத்தில் கிடைப்பதால் ‘நான் முதல்வன்’ திட்டம் மிகச்சிறந்த திட்டம். தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி” என்று புவனேஷ்ராம் சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாடு அளவில் இரண்டாவது இடத்தையும், இந்திய அளவில் 78 ஆவது இடத்தையும் பெற்ற மாணவர் பிரசாந்த். அவரும் ‘நான் முதல்வன்’ திட்டத்தைப் புகழ்ந்துள்ளார்.
“வாழ்க்கையில் பொருளாதாரம் என்பது முக்கியமானது. என் அப்பா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார். யு.பி.எஸ்.சி. தேர்வு செய்து படிக்க வேண்டும் என்றால் புத்தகம் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்காக பணம் தேவைப்படும். அப்போது நான்தான் என் குடும்பத்தைச் சமாளிக்க வேண்டும் என்ற நிலைமை வந்தது. ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் எனக்குக் கொடுக்கப்பட்ட ஊக்கத்தொகை பெரிய உதவியாக இருந்தது. 7500 ரூபாய் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். என் வெற்றிக்கு அரசின் பங்கு பெரிய உதவியாக இருந்தது. பலரின் கனவை நிஜமாக்குவதற்கு முதலமைச்சர் பாடுபட்டு இருக்கிறார். அமைச்சர் உதயநிதி அவர்கள்தான் எனக்குப் பதக்கம் வழங்கினார்” என்று பிரசாந்த் சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெற்ற 42 பேரில் 35 பேர் ‘நான் முதல்வன்’ திட்டப் பயனாளிகள் ஆவார்கள். இந்திய அளவில் தேர்வான 100 பேரில் இரண்டு பேர் ‘நான் முதல்வன்’ திட்டப் பயனாளிகள். கடந்த ஆண்டு இந்திய அளவில் 100 பேரில் யாரும் இல்லை. இதுதான் முதலமைச்சரின் வெற்றியாகும்.
அனைத்துத் துறையிலும் வளர்ச்சி
‘அனைத்துத் துறையிலும் வளர்ச்சி’ என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறார் முதலமைச்சர் அவர்கள். ‘திராவிட மாடல்’ அரசின் திட்டங்களால் சமுதாய, பொருளாதாரம் மற்றும் சுகாதாரத் துறையில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக, ‘தி இந்து’ ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.
தேசிய சுகாதாரத்துறை, நிதி ஆயோக் ஆகியவற்றின் புள்ளி விவரங்களுடன் இதனை அந்த நாளேடு எழுதி இருக்கிறது.
பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் தர வரிசையில் தமிழ்நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. உயர் கல்வியில் அதிக மாணவர் சேர்க்கை விகிதத்துடன் தமிழ்நாடு
2–வது இடத்தில் உள்ளதாகவும் மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தமிழ்நாடு 3–வது இடத்தில் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் மனிதவள மேம்பாட்டில் 16–வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, திராவிட மாடல் ஆட்சியில் 11–வது இடத்திற்கு உயர்ந்துள்ளதாகவும் பாராட்டியுள்ளது.
தனிநபர் வருமான வளர்ச்சியில் தமிழ்நாடு 8–வது இடத்திலிருந்து 6–வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தனிநபர் வருமான வளர்ச்சியில் பெரிய மாநிலங்களில தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. உற்பத்தித் துறையில் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பங்களிப்பில் தமிழ்நாடு 20.58 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 18.74 புள்ளிகளுடன் தமிழ்நாடு 4–வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் அந்த சிறப்புக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களால், குழந்தைகள் – சுகாதாரம், தனிநபர் வருமானம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வளர்ந்துள்ளதை அறிய முடிகிறது.
வேலைக்கு ஏன் ஆள் கிடைக்கவில்லை?
திருப்பூரைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் சொல்லி இருக்கிறார்.
“ஒவ்வொரு வருடமும் திருப்பூரில் உள்ள கம்பெனிகள் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங்களுக்குச் சென்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த பெண்களிடம் நேர்முகத் தேர்வு நடத்துவோம். திருப்பூருக்கு கூட்டி வந்து மிக நல்ல சம்பளம், இருக்க இடம் என்று எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து வேலைக்கு அமர்த்துவோம். ஒவ்வொரு வருடமும் இது அதிகரிக்கும். ஆனால் கடந்த இரு வருடங்களாக, அதுவும் இந்த வருடம், பெரும்பான்மையான பெண்கள் வேலைக்கு வர விருப்பம் இல்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டார்கள்.
நேர்முகத் தேர்வு நடத்தப் போனவர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள். ‘நாங்கள் கல்லூரி படிக்கப் போகிறோம். அதனால் வேலைக்கு வர முடியாது’ என்று அந்த மாணவிகள் சொல்லி இருக்கிறார்கள். ‘கல்லூரிக்குப் படிக்கப் போனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அய்யா 1000 ரூபாய் தருகிறார், பேருந்துக் கட்டணமும் இல்லை, அதுனால மேற்கொண்டு படிக்கப் போகிறோம்’ என்று மாணவிகள் சொல்லி இருக்கிறார்கள்.
எந்த நோக்கத்துக்காக முதலமைச்சர் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாரோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. பல்லாயிரக் கணக்கான மாணவிகளை கல்லூரிக்குள் கொண்டு வந்துவிட்டார் முதலமைச்சர்” என்று அந்தத் தொழில் அதிபர் சொல்லி இருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வெற்றி என்பது இதில்தான் அடங்கி இருக்கிறது. அவரது எதிரிகளை முனைமழுங்க வைப்பவர்களாக மக்களே செயல்பட்டு வருகிறார்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!