murasoli thalayangam
”மக்களைக் கைவிட்ட மோடியை மக்கள் கைவிட வேண்டும்” : முரசொலி தலையங்கம்!
முரசொலி தலையங்கம் (19-04-2024)
மோடிக்கு விடை கொடுப்போம் 3
ஒட்டு மொத்த இந்தியாவும் பிரதமர் மோடியின் தவறான நடவடிக்கைகளால் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது.
காஷ்மீரில் மாநிலத்தைப் பிரித்து -– யூனியன் பிரதேசம் ஆக்கி –- சட்ட சபைத் தேர்தலையே இல்லாமல் ஆக்கினார். இது ஜம்மு காஷ்மீர் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
பாகிஸ்தான் ஊடுருவலையும் கட்டுப்படுத்த முடியவில்லை, பயங்கரவாதச் செயல்களும் முழுமையாக நிற்கவில்லை.
தலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதால் டெல்லியில் கொந்தளிப்பு.
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனைக் கைது செய்ததால் அந்த மாநிலத்தில் கொந்தளிப்பு.
மணிப்பூர் கலவரத்தில் ஓராண்டு காலமாக மாநிலமே பற்றி எரிகிறது. அங்கு மீண்டும் கலவரம் தொடங்கி உள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகவும், பட்டியலினத்தவர்க்கு எதிராகவும் தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது.
அருணாசலப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமிக்கிறது. அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சீனா தனது மொழிப் பெயரை வைத்து விட்டது. இதைப் பார்த்து மெளன குருவாகத்தான் இருக்கிறார் மோடி.
டெல்லி, பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் –- மிகக்கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக சிறுபான்மை இசுலாமியர் போராட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றன.
வடகிழக்கு மாகாண மக்களும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடுகிறார்கள்.
மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடு கேட்டு போராட்டங்கள்.
உத்திரப்பிரதேசத்திலும், குஜராத் மாநிலத்திலும் ராஜ்புத் இனப் பெண்களை பா.ஜ.க. அமைச்சர் இழிவுபடுத்தி சாதிப் பிரச்சினையைத் தூண்டி விட்டார். அங்கு பல்வேறு சமுதாய மக்கள் தினந்தோறும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அசாமில் சி.ஏ.ஏ.வு.க்கு எதிரான போராட்டங்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தியதால் அங்கும் பிரச்சினை.
அசாம், டெல்லி, குஜராத், அரியானா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிராக வெறுப்பு வன்முறைகள் அதிகம் நடக்கத் தொடங்கி இருப்பதை உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளது.
ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், மணிப்பூர், குஜராத், அரியானா, பீகார், மேற்குவங்கம், உத்திரப்பிரதேசம் –- ஆகிய பத்து மாநிலங்களில் போதை மருந்து நடமாட்டம் அதிகம் இருப்பதாக ஒன்றிய பா.ஜ.க. அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கையால் தொடர்ந்து தொல்லைகள் நடைபெறுகிறது. இந்த பத்தாண்டு காலத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள், 500க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாகக் கைதானால் ஜாமீன் கிடையாது என்றும், படகுகள் பறிமுதல் ஆகும் என்றும் இலங்கை அரசாங்கம் சட்டம் போட்டதே, மோடி காலத்தில்தான். இதனால் ஒட்டுமொத்த மீனவர் சமுதாயமும் கொந்தளிக்கிறது.
- இப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் பிரச்சினை. இதுதான் மோடியின் ஆட்சிக் காலம்.
ஒட்டுமொத்தமாக சமூக – பொருளாதார – அரசியல் - –நல்லிணக்கப் பிரச்சினை யைத் தீர்க்க முடியாத அரசாக மோடியின் பா.ஜ.க. அரசு இருக்கிறது. ஒரு பிரதமராக, நரேந்திர மோடி தோற்றுவிட்டார். உட்கட்டமைப்புகள் எதையும் செய்யாமல் தோற்றுவிட்டார். வெளிநாட்டு அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்த முடியாமல் தோற்று விட்டார். அவருக்குக் கிடைத்த பத்தாண்டு காலத்தை மக்களுக்குப் பயன்படுத்தாமல் வீணடித்து விட்டார்.
‘பி.எம்.கேர்’ மூலமாக தனக்குப் பணம் சேர்த்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலமாக தனது கட்சிக்குப் பணம் சேர்த்துக் கொடுத்தார். பொதுத்துறை நிறுவனங்களை தனது நண்பர்களுக்கு தாரைவார்த்துள்ளார். வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக தனது நண்பர்களை உலகப் பணக்காரர்கள் ஆக்கி உள்ளார். வாராக் கடன்களை ரத்து செய்ததன் மூலமாக கார்ப்பரேட்டுகளை மகிழ்ச்சியாக வைத்துள்ளார். 26க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களை இந்தியாவை விட்டு வெளியேற அனுமதிப்பதன் மூலமாக பணக்காரர்களுக்கு மட்டுமே பிரதமராக பத்தாண்டு காலம் இருந்திருக்கிறார். மற்றபடி இந்திய நாடு இதுவரை காப்பாற்றி வந்த அத்தனை விழுமியங்களுக்கும் எதிராக இருந்துள்ளார்.
பிரதமர் ஆவதற்கு முன்னால் மூன்று வாக்குறுதிகளை மோடி கொடுத்தார்.
1. மக்களுக்காகக் கடினமாக உழைப்பது.
2. தனக்காக எதுவும் செய்து கொள்ளாமல் இருப்பது,
3. தீய நோக்குடன் செயல்படாமல் இருப்பது. - இந்த மூன்று வாக்குறுதிகளை நாட்டு மக்களுக்கு நான் வழங்குகிறேன் என்று சொன்னார் மோடி.
இந்த மூன்றையும் கடைப்பிடிக்கவில்லை மோடி. மக்களுக்கு அவர் உழைக்க வில்லை, அவரது ஒரு சில நண்பர்களுக்காக மட்டுமே உழைத்தார். ‘பி.எம்.கேர்’ நிதி மோசடியும், தேர்தல் பத்திர ஊழலும் அவர் தனது சுயநலத்திற்காக மட்டுமே செய்து கொண்டது ஆகும். தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க தீய நோக்கத் துடன் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறையைப் பயன்படுத்தினார். அவர் என்ன சொன்னாரோ, அதை அவரே கடைப்பிடிக்கவில்லை. மக்களைக் கைவிட்ட மோடியை மக்கள் கைவிட வேண்டும்.
வேண்டாம் ஜனநாயகம் என்கிறார் மோடி.
வேண்டாம் சமூகநீதி என்கிறார் மோடி.
வேண்டாம் சமதர்மம் என்கிறார் மோடி.
வேண்டாம் சகோதரத்துவம் என்கிறார் மோடி.
வேண்டாம் நல்லிணக்கம் என்கிறார் மோடி.
வேண்டாம் மதச்சார்பின்மை என்கிறார் மோடி.
வேண்டாம் கூட்டாட்சி என்கிறார் மோடி.
வேண்டாம் ஏழைகள் என்கிறார் மோடி.
வேண்டாம் ஒடுக்கப்பட்ட மக்கள் என்கிறார் மோடி.
வேண்டாம் சிறுபான்மையினர் என்கிறார் மோடி.
நல்லவை அனைத்தையும்
வேண்டாம் – வேண்டாம் - வேண்டாம் என்று சொல்லும் மோடியைப் பார்த்து நாம் சொல்ல வேண்டியது;
வேண்டாம் மோடி.
வேண்டாம் மோடி.
வேண்டாம் மோடி.
வேண்டாம் மோடி.
வேண்டாம் மோடி என்பதுதான்.
அன்பான வாக்காளப் பெருமக்களே!
இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பீர்!
புதிய இந்தியாவுக்கு வாக்களிப்பீர்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!