murasoli thalayangam
ராகுல் காந்தியின் ஒரே கூட்டம் ; பா.ஜ.கவின் அனைத்துக் கூட்டமும் குளோஸ் : முரசொலி தலையங்கம்
முரசொலி தலையங்கம் (15-04-2024)
கொள்கைப் போர்!
ஒரே நாளில் தமிழ்நாட்டு மனங்களை அள்ளிவிட்டார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டுக்கு வெளியில் தமிழையும், தமிழ்நாட்டையும் உண்மையாகப் புரிந்து கொண்ட ஒரு தலைவர் என்பதை அவரது சொற்கள் வெளிப்படுத்தியது. மிக எளிமையான சொற்களில் வலிமையான கருத்துக்களை வைத்துவிட்டார்.‘இது வழக்கமான தேர்தல் அல்ல, ஒரு கொள்கைப் போர்’என்பதைச் சொன்னதன் மூலமாக.தானும் வழக்கமான தலைவர் அல்ல என்பதையும் ராகுல் காந்தி உணர்த்தி விட்டார்.
தந்தை பெரியார் - பெருந்தலைவர் காமராசர் – பேரறிஞர் அண்ணா - தமிழினத் தலைவர் கலைஞர் – ஆகிய நால்வரால் வளர்க்கப்பட்டு, அவர்களால் பண்படுத்தப்பட்டது தமிழ்நாடு என்பதை நெல்லைக் கூட்டத்திலும் கோவைக் கூட்டத்திலும் பதிவு செய்தார். ‘இந்தத் தேர்தலானது தந்தை பெரியாரின் சமூக நீதிக்கும் - ஆர்.எஸ்.எஸ். மோடியின் வெறுப்பரசியலுக்கும் இடையே நடக்கும் கொள்கைப் போர். இதில் இறுதி வெற்றி நமக்குத்தான்’ என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
‘உங்கள் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் காக்க உங்களோடு எப்போதும் இருப்போம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்கும் போரில் நாம் வெற்றி பெறுவோம்’ என்பதையும் தெளிவாகச் சொன்னார் ராகுல். ‘இந்தியாவைத் தமிழ்நாட்டின் வழியாகப் பார்க்கிறேன். தமிழ்நாடு மீது அன்பு செலுத்துகிறேன். தமிழ்நாட்டு மக்களைக் குடும்ப உறவாக நினைக்கிறேன். என்னை நாடாளுமன்றத்துக்குள் வரக்கூடாது என்று தடுத்தார்கள்.என்னை எங்கே தடுத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தங்களது வீடுகளின் அனைத்துக் கதவுகளையும் திறந்து வைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை’ என்று உருக்கமாகச் சொன்னார். ‘தமிழ் மொழியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பது தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்’ என்றார்.
‘பல்வேறு மொழிகள் பேசப்படும் இந்தியாதான் உண்மையான இந்தியா, அத்தகைய இந்தியா இன்று சமச்சீரற்றதாக உள்ளது. இது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை விட சீரற்ற தன்மையாக உள்ளது’ என்றார். அதானிக்காகவே அனைத்துத் தொழில்களையும் மோடி தாரை வார்த்து விட்டார் என்பதை மிகச் சரியாகச் சொன்னார். ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்ட ஆட்களால் ஒன்றிய அரசின் அதிகாரமிக்க அனைத்து அமைப்புகளும் நிரப்பப்பட்டு விட்டன என்பதையும் மிகமிகச் சரியாகச் சொன்னார்.
காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க. என்ற கட்சிக்குமான தேர்தல் மோதலாக இல்லாமல் இதனை இரண்டு வேறுபட்ட சிந்தனைகளுக்கு மத்தியிலான மோதலாக மாற்றியதுதான் ராகுல் காந்தியின் பாணியாகும். இதில்தான் ராகுல் காந்தியின் வெற்றியும் அடங்கி இருக்கிறது. அவரது ஒற்றுமைப் பயணம் என்பதும் இந்தக் கொள்கையை விதைப்பதாகத்தான் அமைந்திருந்தது.
பா.ஜ.க.வின் கொள்கை வடிவமைப்பாளர்களான ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அரசியல் மேடைகளில் கேள்வி கேட்பவராக ராகுல் காந்தி எப்போதும் இருந்துள்ளார். “இந்தியாவில் இரண்டு விதமான பார்வைகள் உண்டு. அதில் ஒன்றுதான் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்ற பார்வை ஆகும். கூட்டாட்சி என்பது அதன் பொருள் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள என் சகோதரரிடம் நான் சென்று, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பேன். அவர் அவர் தேவையை என்னிடம் சொல்வார். அதேபோல் எனக்குத் தேவையானதைக் கேட்டுப் பெறுவேன். இதுதான் கூட்டாட்சி. இதுதான் இந்தியா” என்று நாடாளுமன்ற மக்களவையில் பேசியவர் ராகுல்காந்தி.
“இந்தியா ஒரே இந்தியாவாக இல்லை. இரண்டாகப் பிரிந்து உள்ளது. ஒரு இந்தியா பணம் படைத்தவர்களுக்காகவும், ஒரு இந்தியா பணம் இல்லாத ஏழைகளுக்காகவும் இருக்கிறது. மக்களாட்சி நடக்க வேண்டிய இந்தியாவில் மன்னராட்சி நடக்கிறது” என்று மக்களவையில் பேசியவர் ராகுல்காந்தி.
மோடியின் அனைத்து நகர்வுகளாலும் லாபம் அடைவது அதானி மட்டும்தான் என்பதை அகில இந்திய அரசியலில் அம்பலப்படுத்தினார் ராகுல். ‘2 இந்தியர்கள்’ என்ற ஹேஷ்டேக்குடன் ஒரு பதிவினை ராகுல்காந்தி இரண்டு ஆண்டுக்கு முன் வெளியிட்டு இருந்தார். “ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தினசரி கூலிக்கு வேலை செய்யும் 5 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பிரதமர் மோடியின் விருப்பத்திற்குரிய நண்பர் கணக்கில் ரூ.85 கோடி பணம் சேர்கிறது.சாமானியர்களிடம் இருந்து எடுத்து தனது நண்பர்களை பணக்காரர்களாக ஆக்குவதே பிரதமரின் ஒரே பணியாகும். ஆளும் பா.ஜ. கட்சி இரண்டு இந்தியாவை உருவாக்குகிறது. ஒன்று பணக்காரர்களுக்கானது, மற்றொன்று ஏழைகளுக்கானது. தனது நண்பர்கள் பணக்காரர்களாக மாறுவதற்கு பிரதமர் உதவி செய்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல்காந்தி.
இந்திய நாடாளுமன்றத்திலேயே பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களின் உள்நோக்கங்களை அம்பலப்படுத்தினார்.
“ஜூன் 2022–ல் இலங்கை காற்றாலை மின்உற்பத்தி உரிமத்தை அதானிக்கு வழங்க வேண்டும் என மோடி அழுத்தம் கொடுப்பதாக ராஜபட்சே சொன்னார். இதுதான் உங்கள் வெளியுறவுக் கொள்கை. இது இந்திய வெளியுறவுக் கொள்கை அல்ல. அதானியின் வெளியுறவுக் கொள்கை”- என்று குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக வைத்தார் ராகுல்காந்தி. அதனால்தான் அவரது பதவியையே பறித்தார்கள். இன்று வரை மோடியால் பதில் சொல்லப்படாத கேள்வி அது. பா.ஜ.க.வினரால் பதில் சொல்ல முடியாத கேள்வி அது. மோடி பேசும் மதவாதத்துக்குள் மறைக்கப்படுவது அவரது நண்பர்களின் வர்த்தக முகம்தான் என்பதை ராகுல் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார்.
கோவை வந்த ராகுல், ஒரு கடையில் இறங்கி இனிப்பு வகைகளை வாங்கி வந்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். ‘என் சகோதரர்’ என்று மாண்புமிகு முதலமைச்சரை அழைத்தார் ராகுல். ‘இதுவரை யாரையும் நான் என் சகோதரர் என்று அழைத்ததில்லை’ என்றும் சொன்னார். இது அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, கொள்கைப் பாசமாகவும் அமைந்தது ராகுலின் பேச்சு. ‘ஒரே கூட்டம் நடத்தினோம், பி.ஜே.பி.யின் அனைத்துக் கூட்டமும் குளோஸ்’ என்று மாண்புமிகு முதலமைச்சர் சொல்லிய வகையில்தான் ராகுலின் தமிழ்நாட்டுப் பயணம் அனைத்திலும் சிறப்பாக அமைந்து விட்டது.
அனைத்துத் தொகுதியிலும் வெற்றி என்ற இனிப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!