murasoli thalayangam
அரசு ஊழியர்களை அவமானப்படுத்திய அதிமுக அரசு : இதனை யாரும் மறக்கமாட்டார்கள் - முரசொலி தாக்கு !
முரசொலி தலையங்கள் (11-04-2024)
அரசு ஊழியர்களை அவமானப்படுத்தியது யார் ?
இன்றைக்கு அரசு ஊழியர்கள் மீது கரிசனம் உள்ளவரைப் போலக் காட்டிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமிதான், தன் கையில் அதிகாரம் இருந்தபோது அரசு ஊழியர்களை அவமானப்படுத்தியவர் என்பதை அரசு ஊழியர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
‘‘அரசு ஊழியர்கள் நல்லா சிந்தித்துப் பாருங்க. இன்று ஆரம்பப் பள்ளியில் ஹெட் மாஸ்டர்களாக இருப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? 82 ஆயிரம் ரூபாய். ஐந்தாம் கிளாஸ் ஹெட் மாஸ்டருக்கு 82 ஆயிரம் ரூபாய். நம்ம பையன் பி.இ, கஷ்டப்பட்டு படித்து, பத்து வருடம் கழிந்தாலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தாண்ட மாட்டான். அதேபோல் ஆசிரியர்களுக்கு 160 நாள் லீவு கிடைக்கிறது. எட்டாம் வகுப்பு வரை படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, பாஸ், பெயிலே கிடையாது. அப்படியே விட்ருவான். இவ்வளவு பணத்தையும் வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துகின்றனர்’’ என்று முதலமைச்சராக இருக்கும்போது பேசியவர்தான் பழனிசாமி.
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது, அதை வாங்கிக் கொண்டு ஒழுங்காக வேலை செய்யாமல், போராட்டத்துக்கு மேல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் -– என்று முதலமைச்சராக இருக்கும் போது சொன்னவர்தான் பழனிசாமி.
பேசியது மட்டுமல்ல, விளம்பரம் வெளியிட்டு அரசு ஊழியர் போராட்டத்தைக் கேவலப்படுத்தியவர் பழனிசாமி. 2019-–-ல் ஜாக்டோ – ஜியோ நடத்திய போராட்டத்தை ஒடுக்க அரசுப் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தார்கள்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 பிப்ரவரியில் தமிழகம் முழுவதும் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் அரசுப் பள்ளிகள் இயங்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தப் போராட்டத்தை ஒடுக்க எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. அரசு பல முயற்சிகளை எடுத்தது. பல இடங்களில் போராட்டத்தை ஒடுக்க மறைமுகமாக பழனிசாமி அரசு களமிறங்கியது.
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தரப்படும் சம்பளம் எவ்வளவு என்கிற விவரத்தை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் கட் அவுட் போல வைத்து அரசு ஊழியர்களை அசிங்கப்படுத்தினார்கள். இதற்காகக் கோடிக் கணக்கில் அரசு பணம் செலவழிக்கப்பட்டது. போராட்டம் உச்சத்தில் இருந்த ஜனவரி 27–-ம் தேதி அனைத்து நாளிதழ்களிலும் முக்கால் பக்கத்துக்கு விளம்பரம் வெளியிட்டது பழனிசாமி அரசு.
‘அரசால் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்’ எனவும், ‘உடனடியாக பணிக்குத் திரும்பவும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு மீன் வளம் மற்றும் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் அவர்களின் வேண்டுகோள்’ என்ற தலைப்பிட்டு நீண்ட விளக்கத்தை அந்த விளம்பரத்தில் அளித்தார்கள். ‘பிற தனியார் நிறுவனத்தைக் காட்டிலும் அதிகச் சம்பளத்தை அரசு ஊழியர்கள் பெறுகின்றனர்’ எனச் சொல்லி அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள்.
‘அலுவலக உதவியாளருக்கு 28,560 ரூபாய் சம்பளமும் ஓட்டுநருக்கு 35,400 ரூபாய் சம்பளமும் கண்காணிப்பாளருக்கு 66,840 ரூபாய் சம்பளமும் தரப்படுவதாகச் சொன்னது அரசு. தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உதவியாளருக்கு 36,360 ரூபாயும் இணைச் செயலாளருக்கு 2,23,920 சம்பளமும் தரப்படுகிறது எனச் சொன்னது அந்த விளம்பரம். முதுநிலை ஆசிரியருக்கு 66,840 ரூபாயும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு 1,03,320 ரூபாயும் சம்பளம் அளிக்கப்படுகிறது’ என அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள்.
அந்த விளம்பரம் வெளியிட்டதின் நோக்கம் தனியாரைவிட அரசு ஊழியர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள், அவர்களுக்கு எதற்குப் போராட்டம் என்பதுதான். இந்த விளம்பரத்தை அனைத்து நாளிதழ்களிலும் அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிடுவதற்காக 50 லட்சம் ரூபாயைச்செலவழித்தனர். இப்படித்தான் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது இதேபோல விளம்பரம் வெளியிட்டது பழனிசாமி அரசு. அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 13-–வது ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஊதிய உயர்வு விவரங்களைத் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுவதற்காக 46,54,361 ரூபாய் தரப்பட்டது.
“மாணவர்களின் கல்விக்கும், மக்கள் பணிக்கும் இடையூறு ஏற்படுத்தும் போராட்டங்களைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும், தொடர்ந்து பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விளம்பரம் கொடுத்து மிரட்டியது பழனிசாமி அரசு. இதை எல்லாம் இன்றைய தினம் அரசு ஊழியர்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நடைமுறைப்படுத்தி செயல்படுத்தியது அப்போதைய அ.தி.மு.க. அரசு தான். அப்போதும் அரசு ஊழியர்கள் போராடினார்கள். அவர்களை அழைத்துப் பேசாமல் மிரட்டியது அ.தி.மு.க. அரசு. அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு காவல்துறையை ஏவி 1லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடர்ந்து சிறையில் அடைத்தது அ.தி.மு.க. அரசு. துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு அனைவரையும் பணி இடைநீக்கம் செய்தது அ.தி.மு.க. அரசு. தொகுப்பூதியத்துக்கு ஆட்களை நியமித்தார்கள். இவர்களுக்கு காலமுறை ஊதியத்தைக் கொடுத்தவர் 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர் அவர்கள்.
2019ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது வழக்குத் தொடர்ந்து சிறையில் அடைத்து துறை ரீதியான நடவடிக்கை எடுத்தார் பழனிசாமி. பணியிடை நீக்கம் செய்தும் பணியிட மாற்றம் செய்தும் பந்தாடினார் பழனிசாமி. இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்தவர் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். இவை அனைத்தையும் அரசு ஊழியர்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புலம்பிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி.
எம்.ஜி.ஆர். ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி, பழனிசாமி ஆகிய மூன்று அ.தி.மு.க. ஆட்சிகளும் அரசு ஊழியர்களை அடக்குமுறையால் துன்புறுத்திய ஆட்சிகள் என்பதை அவர்கள் மறக்க மாட்டார்கள்.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?