murasoli thalayangam

வலுக்கும் மக்கள் எதிர்ப்புகள் : “மிகமிக மோசமாக போய்க் கொண்டிருக்கும் பாஜகவின் நிலைமை” : முரசொலி தாக்கு !

நொறுங்கும் பா.ஜ.க.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பா.ஜ.க.வுக்கு பிரச்சினைகளும் அதிகமாகிவிட்டது. பா.ஜ.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் பலரும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்கினார்கள். அவர்களுக்குப் பதிலாக தலைமை புது வேட்பாளரை அறிவிக்க வேண்டியதாக ஆகிவிட்டது.

ஏற்கனவே எம்.பி.யாக இருந்தவர்கள், மீண்டும் நின்றால் வெற்றி பெற முடியாது என்று போட்டியில் இருந்து நழுவினார்கள். மேலும், இதுவரை எம்.பி.யாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்குவதை தவிர்த்தது பா.ஜ.க. தலைமை.

அடுத்து பல்வேறு கட்சிகளில் இருந்தும் ஆட்களை இழுத்து அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்கியது பா.ஜ.க. இதுவும் பா.ஜ.க.வுக்குள் உள்கட்சி குழப்பங்களை உருவாக்கி விட்டது. பல்வேறு மாநிலங்களில் உட்கட்சி பிரச்சினைகள் ஏற்பட்டு பஞ்சாயத்து செய்து கொண்டு இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. தேர்தல் பணிகளைக் கவனிக்க முடியாத அளவுக்கு கோஷ்டி பூசலுக்குள் தலையை விட்டுக் கொண்டு மாட்டிக் கொண்டு முழிக்கிறார் அமித்ஷா. பா.ஜ.க. இதுவரை அறிவித்துள்ள வேட்பாளர்களில் 116 பேர் மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களாம். அதாவது நான்கில் ஒருவர் வேறு கட்சியில் இருந்து வந்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த 37 பேருக்கு இடம் கொடுத்துள்ளார்களாம். வேறு கட்சியில் செல்வாக்காக இருப்பவர்களை பா.ஜ.க.வுக்கு இழுத்து தொகுதிகளை ஒதுக்குவதால் சொந்தக் கட்சியில் ஏற்கனவே இருந்தவர்கள் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். இது கட்சியைக் கல- கலக்க வைத்துள்ளது.

இந்த பிரச்சினையானது உ.பி., மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா ஆகிய பல்வேறு மாநிலங்களில் இருக்கிறது.

இதற்கு மத்தியில் சாதிப் பிரச்சினைகளும் பல மாநிலங்களில் தொடங்கி விட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட தாகூர் சமுதாயத்தினருக்கு பா.ஜ.க. போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து தாகூர், சத்திரிய பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜ.க.வுக்கு எதிராக சஹாரன்பூர் பகுதியில் மகா பஞ்சாயத்துக் கூட்டம் நடத்தப்பட்டது. 'பா.ஜ.க.வுக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது' என்கிற உறுதிமொழி இந்த மகா பஞ்சாயத்துக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. வேறு கட்சியில் தாகூர் சமுதாயத்தினர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு இருந்தால் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் இயற்றப்பட்டன. சாகாரன்பூரைத் தொடர்ந்து மீரட்டிலும் வரும் 16ஆம் தேதி மகா பஞ்சாயத்துக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவுகிறது. அங்கு பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மோடியின் கோட்டையான குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. நிலைமை மிக மோசமாக உள்ளது. பா.ஜ.க.வின் ராஜ்காட் தொகுதி வேட்பாளர் புருஷோத்தம் ரூபாலா, நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது ராஜ்புத் சமூகத்தினரை அவமதித்து விட்டதாக ராஜ்புத் சமூகத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் ஒட்டுமொத்த சௌராஷ்டிரா மக்களும் பா.ஜ.க.வுக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

பா.ஜ.க. வேட்பாளர் ரூபாலா பலமுறை மன்னிப்புக் கேட்டும் அதனை ஏற்க சத்திரிய சமூகத்தினர் மறுத்து விட்டனர். வேட்பாளரை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. புருஷோத்தம் ரூபாலா வீட்டின் அருகே உருவ பொம்மை எரித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தது கொந்தளிப்பை அதிகமாக்கி உள்ளது. சௌராஷ்ட்ரா மற்றும் கச் பகுதியில் 17 சதவீதம் ராஜ்புத் சமூகத்தினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஒட்டுமொத்தமாக தற்போது பா.ஜ.க.வுக்கு எதிராக திரும்பி உள்ளனர்.

வேட்பாளர்கள் அறிவித்த போதே குஜராத் பா.ஜ.க.வில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அம்ரேலி தொகுதியின் தற்போதைய எம்.பி.யான நரன் கச்சாடியாவுக்கு பதிலாக பாரத் சுத்தறியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. அதில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தற்போதைய எம்.பி.யான நரேன் கச்சடியாவும் காயமடைந்தார்.

இதேபோன்று சபர்கந்தா தொகுதியில் பிரச்சினை காரணமாக முன்பு அறிவித்த வேட்பாளர் பிகாஜி தாக்கூர் போட்டியிட மறுத்து விலகினார். புதிய வேட்பாளராக முன்னாள் காங்கிரஸ் எம். எல்.ஏ.வின் மனைவி ஷோபனா நிறுத்தப்பட்டார். இதனை ஏற்க உள்ளூர் பா.ஜ.க.வினர் மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பா.ஜ.க. வேட்பாளருக்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆரவல்லி மாவட்டத்தில் பந்த் நடத்தியுள்ளனர்.

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பாட்டில் தொடர் பேச்சு வார்த்தைகள் நடத்தியும் எந்த பலனும் இல்லை. முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மனைவி ஷோபனாவை மாற்ற வேண்டும் என்று உள்ளூர் பா.ஜ.க.வினர் தொடர்ந்து பிரச்சினை எழுப்பி வருகிறார்கள். அதேபோன்று வதோதரா தொகுதியிலும் பிரச்சினை. முதலில் அறிவிக்கப்பட்ட ரஞ்சன் பட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது புதிய வேட்பாளரை பா.ஜ.க. அறிவித்துள்ளது.

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பாட்டில் தொடர் பேச்சு வார்த்தைகள் நடத்தியும் எந்த பலனும் இல்லை. முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மனைவி ஷோபனாவை மாற்ற வேண்டும் என்று உள்ளூர் பா.ஜ.க.வினர் தொடர்ந்து பிரச்சினை எழுப்பி வருகிறார்கள். அதேபோன்று வதோதரா தொகுதியிலும் பிரச்சினை. முதலில் அறிவிக்கப்பட்ட ரஞ்சன் பட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது புதிய வேட்பாளரை பா.ஜ.க. அறிவித்துள்ளது. இதேபோன்று பா.ஜ.க. ஆளும் ஹரியானா மாநிலத்திலும் தொடர்ந்து பிரச்சினைகள். தனது ஆதரவாளர்களுக்கு சீட்டு வழங்காததால் முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் பதவி விலகினார்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சரையே மாற்ற வேண்டிய நிலைமை பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டது. ஆனாலும் பிரச்சினைகள் ஓய்ந்த பாடில்லை. பொதுமக்களும் அங்கு பா.ஜ.க.வை துரத்தி அடிக்கிறார்கள். பல கிராமங்களில் பா.ஜ.க.வின் பிரச்சார வாகனங்களை துரத்தி அடித்துள்ளனர். பீகாரிலும் நிலைமை மிக மோசமாக உள்ளது. பா.ஜ.க.வின் கூட்டணியை ஏற்காத சிராக் பாஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சியிலிருந்து 22 பேர் ராஜினாமா செய்து உள்ளனர். அதில் ரேணு குஷ்வாகா உள்ளிட்ட முக்கியமான நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பா.ஜ.க. கலக்கத்தில் உள்ளது.

பஞ்சாபிலும் பா.ஜ.க.வின் நிலைமை மோசமாக உள்ளது. அகாலிதளம் கட்சி கூட்டணி சேர மறுத்து விட்டதால் 13 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. இதுவரை ஆறு தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் பெரும்பாலானோர் காங்கிரசிலிருந்து வந்தவர்கள். இரண்டாவது பட்டியலை அறிவிப்பதில் பா.ஜ.க. அங்கு திணறி வருகிறது.

நாடு முழுதும் பா.ஜ.க. இதுவரை அறிவித்த வேட்பாளர் பட்டியல் கணக்குப்படி நூற்றுக்கு மேற்பட்ட எம்.பி.களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒன்றிய அமைச்சர்கள் பலரும் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அந்தத் தொகுதிகளில் ஏற்கனவே இருந்த மக்களின் கடும் அதிருப்தியோடு தற்போது சீட் கிடைக்காத பா.ஜ.க.வினரின் எதிர்ப்பும் சேர்ந்துள்ளது.

இதனால்தான் 400, 370 என்று இப்போதெல்லாம் மோடி பேசுவது இல்லை போலும்! பா.ஜ.க. ஆதரவு அமைப்பு ஒன்று எடுத்த கருத்துக் கணிப்பானது 204 இடங்களைத்தான் பா.ஜ.க.வுக்கு கொடுத்துள்ளதை வைத்துப் பார்க்கும் போது நிலைமைகள் மிகமிக மோசமாகவே பா.ஜ.க.வுக்கு போய்க் கொண்டிருக்கின்றன.

- முரசொலி தலையங்கம்

09.04.2024

Also Read: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : “இந்தியாவுக்கான திராவிட மாடல்...” - முரசொலி புகழாரம் !