murasoli thalayangam
10 ஆண்டுகளில் கருப்புப் பணத்தை ஒழித்துவிட்டார்களா? : முரசொலி கேள்வி!
முரசொலி தலையங்கம் (03-04-2024)
நாட்டுக்கே மதிப்பிழப்பு அது!
பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் நள்ளிரவில் செய்த பணமதிப்பிழப்பு குறித்து உச்சநீதிமன்ற நீதியரசர் ஒருவர் செய்துள்ள விமர்சனம் அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. பணமதிப்பிழப்பு என்ற பெயரால் செய்துள்ள செயல், இந்த நாட்டுக்கே மதிப்பை இழக்க வைத்து தலைகுனிய வைப்பதாக அமைந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் மதிப்புமிகு நீதியரசர்களில் ஒருவர் பி.வி.நாகரத்னா அவர்கள். அய்தராபாத்தில் உள்ள சட்டப் பல்கலைக் கழக கருத்தரங்கில் நீதியரசர் பேசி இருக்கிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி இவர்தான். மாறுபட்ட தீர்ப்பை ஏன் வழங்கினேன் என்பதற்கான காரணத்தை இந்தக் கருத்தரங்கில் அவர் வெளியிட்டுள்ளார்.
“2016 ஆம் ஆண்டில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 86 சதவிகிதம் 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஆகும். அவசர அவசரமாகச் செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அப்போதைய நிதி அமைச்சருக்குக் கூட தெரியாது என்கிறார்கள் சிலர். புழக்கத்தில் இருந்த 86 சதவிகித நோட்டுகளைச் செல்லாது என்று அரசு அறிவித்தது கண்மூடித்தனமான நடவடிக்கை ஆகும். புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் 98 சதவிகித நோட்டுகள் திரும்பி வந்த பிறகு வருமான வரித்துறை நடவடிக்கைகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை. கருப்புப் பணத்தை, வெள்ளைப் பணமாக மாற்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு நல்ல வழி என்று முன்பு நானே நினைத்திருந்தேன். பணமதிப்பிழப்பு சாதாரண மக்களையே நெருக்கடிக்கு உள்ளாக்கியதால் அது தொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பைத் தந்தேன்” என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா பேசி இருக்கிறார்.
பணமதிப்பிழப்புக்கு பின்னால் இருக்கும் மர்மங்களை தெளிவாக விளக்கி விட்டார். கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பிலும் இதனைத் தெளிவாகச் சொன்னார்.பணமதிப்பிழப்பு தொடர்பாக ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் வழங்கிய தீர்ப்புக்கு நீதிபதிகள் அப்துல் நசீர், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் ஆதரவு தெரிவித்து விட்டார்கள். அதேநேரத்தில் நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார்.
“பணமதிப்பிழப்பால் பொதுமக்கள் பெரும் பொருளாதார இன்னல்களுக்கு ஆளாகினர்” என்றும் அப்போதே நீதிபதி கூறினார். பணமுடக்கத்தின் நோக்கம் நிறைவேறவில்லை என்ற அவர், பணமதிப்பிழப்பு விளைவுகளை ரிசர்வ் வங்கி கவனத்தில் கொண்டதா என்று கேள்வி எழுப்பினார். ஒரு
அரசாணை மூலம் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்ததை ஏற்க முடியாது என்றும், பண மதிப்பிழப்பு அரசாணை சட்ட விரோதமானது என்றும் நீதிபதி பி.வி.நாகரத்தினா அப்போதே தெரிவித்தார்.ஒன்றிய அரசுக்கு இந்த நடவடிக்கையை செய்வதற்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்று மற்ற நீதிபதிகளின் தீர்ப்பு சொல்கிறது. ஆனால் மக்கள் பட்ட துன்பத்தை விவரிப்பதாக அமைந்திருந்தது நீதிபதி பி.வி.நாகரத்னாவின் தீர்ப்பு.
“இந்த நடவடிக்கையால் மக்கள் பெரும் பொருளாதார இன்னல்களுக்கு ஆளாகினர். இந்த சட்டம் எந்த நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டது என்று சொல்லப்பட்டதோ, அந்த நோக்கத்தை பணமுடக்கம் நிறைவேற்ற வில்லை. சட்டத்தின் நோக்கமும், பயன்பாடும் முக்கியம். நாடு முழுக்க ஏராளமான கள்ளநோட்டுகள் இருப்பதாகச் சொல்லப் பட்டுத்தான், அதனை ஒழிக்கத்தான் இதனைச் செய்தார்கள். ஆனால் 98 சதவிகிதம் பேர் முறையாக ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொண்டுவிட்டார்களே? அப்படியானால் கள்ளநோட்டுகள் எங்கே இருக்கிறது? அரசாங்கம் சொல்வதும் ரிசர்வ் வங்கி சொல்வதும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெற்ற மறுநாளே 24 மணி நேரத்தில் எப்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது?” என்று தனது தீர்ப்பில் அப்போதே குறிப்பிட்டு இருந்தார் நீதியரசர்.
இது தொடர்பாக ஏன் சட்டம் நிறைவேற்றவில்லை என்றும் நீதிபதி பி.வி.நாகரத்னா கேட்டார். “அவசர சட்டம் போட்டிருக்க வேண்டும். நாடாளுமன்றம் மூலம் சட்டம் இயற்றி அமல்படுத்தியிருக்க வேண்டும். இதற்கு முன்னால் இரண்டு முறை பணமதிப்பிழப்பு இந்தியாவில் நடந்துள்ளது. இரண்டு முறையும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடைமுறைப்படி பண முடக்கம் மேற்கொண்டிருந்தால்தான் அது ஜனநாயகத்துக்கு உட்பட்டதாக இருக்க முடியும். இது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கும் போது நாடாளுமன்றத்தை ஒதுக்கி வைக்க முடியாது. மக்கள் பிரதிநிதிகள் முன் விவாதம் நடந்திருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் சட்டப்பிரிவு 26(2) இன் படி பணமதிப்பு இழப்பு என்பது நாடாளுமன்றத்தால் மட்டுமே செய்ய முடியும்” என்பதையும் அவரது தீர்ப்பு அப்போதே ஆணித்தரமாக விளக்கியது.
“நீதிமன்றம் என்பது பொருளாதாரம் அல்லது நிதி தீர்ப்புகளின் அடிப்படையில் பண மதிப்பிழப்பை அணுகக் கூடாது”- என்று மற்ற நீதிபதிகளின் தீர்ப்புக்கும் சேர்த்து விளக்கம் அளித்தார் நீதியரசர்.
2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் நள்ளிரவில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாவது சுதந்திர தினமாகச் சொல்லப்பட்டது. கருப்புப் பணத்தை ஒழிக்கவும் , ஹவாலாவை ஒழிக்கவும், கள்ள நோட்டுகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை என்று சொல்லப் பட்டது. இந்தப் பணம்தான் போதை மருந்து வியாபாரத்துக்கும் தீவிரவாதத்துக்கும் பயன்படுத்தப் படுவதாகச் சொல்லப்பட்டது. பத்து ஆண்டுகளில் கருப்புப் பணத்தை, ஹவாலாவை, கள்ள நோட்டுகளை, போதை மருந்துகளை ஒழித்துவிட்டார்களா? இல்லை! எதையும் தான்தோன்றித்தனமாகச் செய்யலாம் என்பது மட்டும்தான் நிரூபணம் ஆனது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?