murasoli thalayangam
”சீர்மரபினர் கோரிக்கையை சீர் செய்த திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி பெருமிதம்!
முரசொலி தலையங்கம் (20-03-2024)
சீர்மரபினர் கோரிக்கை சீரானது!
சீர்மரபினர் இன மக்களுக்கு ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்கு வதற்கு உத்தரவிட்ட மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அம்மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் சீர்மரபினர் நல வாரியத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சீரமைத்தார்கள். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரைத் தலைவராக கொண்டு சீர்மரபினர் நலவாரியத்தை திருத்தியமைத்து முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
சீர்மரபினர் வகுப்பினரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக 'சீர்மரபினர் நல வாரியம்', 2007-ம் ஆண்டில் தலைவர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நல உதவித் திட்டங்கள் போன்று விபத்து நிவாரணம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த வாரியத்தை கடந்த நவம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றி அமைத்தார்கள்.
சீர்மரபினர் நல வாரியத்துக்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தலைவராகவும், ராசா அருண்மொழியைத் துணைத் தலைவராகவும் நியமித்தார் முதலமைச்சர் அவர்கள். அத்துடன் கே.எஸ்.ராஜ்கவுண்டர், சேகர், பசுவை சக்திவேல், முனுசாமி, எஸ்.கணேசன், கே.எஸ்.கண்ணன், கதிர்வேல், பண்ணப்பட்டி கோவிந்தராஜ், ப.சந்திரன், சூர்யா பி.தங்கராஜா, பெரி.துரைராசு, பாண்டீஸ்வரி மற்றும் பெரியசாமி ஆகிய 13 பேரை அரசுசாரா உறுப்பினர்களாக நியமித்து 3 ஆண்டு காலத்துக்கு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீர்மரபினர்களின் மிக முக்கியக் கோரிக்கையான இரட்டைச் சான்றிதழ் குழப்பத்துக்கும் முதலமைச்சர் அவர்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.
சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப்பரம்பரை சட்டத்தினால் (Criminal Tribes Act) பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்பு என வகைப்படுத்தப் பட்டார்கள். மொத்தம் 68 வகையான பிரிவு
மக்கள் இப்படி அழைக்கப்பட்டார்கள். இவர்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவர்களுக்கு தரப்பட்ட சான்றிதழ் குழப்பமானதாக இருந்தது.
சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இது பல்வேறு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. 'இதனை அகற்றுவதற்கான முயற்சியை எடுப்போம்' என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்வாக்குறுதி அளித்திருந்தார்கள். அந்த இரட்டை சான்றிதழ் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.
மாநில அரசின் உதவிகள் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (DNC) என அழைக்கப்படுவர் எனவும், ஒன்றிய அரசின் நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (DNT) என அழைக்கப்படுவர் என 2019 ஆம் ஆண்டு குழப்பமான ஆணை வெளியிடப்பட்டது. இரண்டு சான்றிதழ் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities/ Denotified Tribes என ஒரே சான்றிதழ் வழங்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இனி வருவாய் அலுவலர்கள் சீர்மரபின வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்குவார்கள் என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
முதன்முதலாக முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான் ஏ.என்.சட்டநாதன் தலைமையில் 13.11.1969 ஆம் நாள் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுவை அமைத்தார்கள்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக இதனை அமைத்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை உருவாக்கினார்கள். அந்தப் பரிந்துரைப் படி சமூகநீதியை அமல்படுத்தினார்கள். பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவிகித இடஒதுக்கீடு வழங்கினார்கள். பிற்படுத்தப்பட்டோருக்கு தனியே ஒரு அமைச்சரை 1971 ஆம் ஆண்டு நியமித்ததும் கலைஞர் அவர்கள்தான்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு தனி ஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கை எழுந்தபோது, பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்த 50 விழுக்காட்டில் 20 விழுக்காட்டை மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு வழங்கியவரும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான். 1989 ஆம் ஆண்டு புது இடஒதுக்கீடு உரிமையை உருவாக்கி கல்வி, வேலை வாய்ப்பில் இந்த சமூக மக்கள் முன்னேற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர் முதல்வர் கலைஞர் அவர்கள். மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இயக்குநரகம் 1989 ஆம் ஆண்டு கலைஞர் அரசால் உருவாக்கித் தரப்பட்டது.
சீர்மரபினருக்கு இளங்கலை வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க உத்தரவிட்டதும் கழக அரசே. இதே வகுப்பைச் சேர்ந்த மாணவியர் கல்வி மேம்பாட்டுக்காக ஆண்டு தோறும் நிதி வழங்கியதும் கழக அரசே. மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் மேல் நிலைத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் நிதி உதவி வழங்கியதும் கழக அரசே. பாலிடெக்னிக் படிக்கவும், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கான தேர்வுக்கு தயாராகவும் நிதி உதவி வழங்கப்பட்டது. கனரக வாகனங்கள் இயக்கக் கற்றுக் கொள்ளவும் நிதி வழங்கப்பட்டன. வீட்டுமனை வழங்கும் திட்டத்தில் இணைக்கப்பட்டார்கள்.
அரசு பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரதிநிதித்துவம் சரியாக இருக்கிறதா என ஆராய 1998 ஆம் ஆண்டு குழு அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர். அக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுச் செயல்படுத்திக் கொடுத்தவர் முதல்வர் கலைஞர். உரிய பணியிடங்களை ஐந்தாண்டு காலத்துக்குள் நிரப்ப வேண்டும் என்று சொன்னார் கலைஞர். இது தொடர்பான வெள்ளை அறிக்கையை 11.5.2000 அன்று சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் அவர்கள் தாக்கல் செய்தார்.
அரசு பணியிடங்களில் முதல் பத்து இடத்தில் ஒரு பிற்படுத்தப்பட்டவருக்கு என்பதை, இரண்டு இடமாக 2001 ஆம் ஆண்டில் மாற்றி அமைத்தவர்முதலமைச்சர் கலைஞர். ஒவ்வொரு பத்து இடத்திலும் இரண்டு பிற்படுத்தப்பட்டவர் இடம் பெற பாதை அமைத்தவர் கலைஞர்.
இதன் தொடர்ச்சியாகத்தான் சீர்மரபினரின் கோரிக்கையை சீர் செய்துள்ளார் திராவிட மாடல் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!