murasoli thalayangam
மீனவர்கள் விவகாரம்: “திமுக, காங்கிரசை குறைச் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?”- பிரதமர் மோடியை சாடிய முரசொலி!
இலங்கையைக் காக்கும் இந்தியப் பிரதமர்
ஓட்டத் தெரியாமல் வண்டியை ஓட்டி மோதியவரிடம் காரணம் கேட்டதும், 'தெரு கோணலாக இருக்கிறது' என்றாராம். அவருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவரது ஆட்சியைப் பற்றி எந்தக் குறையைச் சொன்னாலும், 'பிரதமர் நேருதான் இதற்கு காரணம்' என்பார். நேருவா இப்போது பிரதமர்? எந்தக் குறையைச் சொன்னாலும் காங்கிரஸ்தான் காரணம் என்பார். காங்கிரசா ஆட்சியில் இருக்கிறது?
கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர், 'இலங்கை நாட்டால் இந்திய மீனவர்கள் கடத்தப்படுவதற்கு தி.மு.க.வும் காங்கிரசும்தான் காரணம்' என்று சொல்லி இருக்கிறார். தி.மு.க.வும் காங்கிரசும் இந்தியாவிலும் ஆட்சியில் இல்லை. இலங்கையிலும் ஆட்சியில் இல்லை.
"தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் தமிழ் மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் தமிழ் மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களை காப்பாற்றி நான் அழைத்து வந்துவிட்டேன். மீனவர்கள் எதற்காக இலங்கை எல்லைப் பகுதிக்கு போக வேண்டும். இது யார் செய்த குற்றம்? யார் செய்த தவறுக்காக அவர்கள் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள். தி.மு.க.வும் காங்கிரசும் சேர்ந்து செய்த குற்றம்தான் இதற்குக் காரணம்" - என்று பேசி இருக்கிறார் பிரதமர்.
என்ன பேசுகிறார் பிரதமர்? தான் பேசும் கருத்துக்கு பொருள் புரிந்துதான் பேசுகிறாரா? அல்லது பா.ஜ.க.வின் வாட்ஸ் அப் யுனிவர்சிட்டியில் தயாரிக்கப்படுவதை வாசிக்கிறாரா?
இலங்கைக் கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்திய மீனவர்களை காக்கும் பொறுப்பும் கடமையும் இந்தியாவின் பிரதமருக்கு, இந்திய அரசுக்குத்தான் உண்டு. அதைச் செய்வதற்கு யோக்கியமற்று, தி.மு.க. -காங்கிரசை குறைச் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? கன்னியாகுமரியில் பிரதமர் பேசியது மார்ச் 15 ஆம் தேதி. மார்ச் 17 ஆம் தேதி 21 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இவர்கள். பிப்ரவரி 4 ஆம் தேதி 23 பேரைக் கைது செய்தார்கள். பிப்ரவரி 8 ஆம் தேதி 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சனவரி 15 அன்று 32 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
மோடி அரசாண்ட பத்தாண்டு காலத்தில் இலங்கைக் கடற்படையினரால் 3 ஆயிரத்து 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களின் 534 படகுகள் சிங்கள அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டு என்பது தமிழக மீனவர்களுக்கு மிக மோசமான ஆண்டு ஆகும். அந்த ஆண்டு மட்டும், இலங்கைக் கடற்படையினர் 243 மீனவர்களைக் கைது செய்துள்ளார்கள். 37 படகுகளை பறிமுதல் செய்துள்ளார்கள். ஏன் தைரியமாக கைது செய்கிறது இலங்கைக் கடற்படை? இந்தியப் பிரதமர் மீது பயமில்லை. அதனால்தான். இலங்கை அரசாங்கத்துக்கு பல்லாயிரம் கோடி பணம் கொடுத்துள்ளதே பா.ஜ.க. அரசு? அந்தளவுக்கு நட்பு பாராட்டும் பா.ஜ.க. அரசு, 'தமிழ் மீனவரைக் கைது செய்யாதே' என்று சொல்வதற்கு ஏன் வலிக்கிறதா?
தனது பதவி ஏற்பு விழாவுக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி ராஜபக்சேவை அழைத்தவர் தானே, இன்று நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி?அகதிகளாக யார் வேண்டுமானாலும் வரலாம், 'இலங்கைத் தமிழர் வந்தால் ஏற்க மாட்டோம்' என்று ராஜபக்ஷேவுக்கு நோகாத வகையில் சட்டம் போட்டவர் தானே நரேந்திர மோடி? "இலங்கையால் தமிழ்நாட்டு மீனவர்க்கு பிரச்சினை. பாகிஸ்தானால் குஜராத் மீனவர்க்கு பிரச்சினை. இரண்டையும் தீர்க்க கூட்டு முயற்சியை மேற்கொள்வேன்" என்றும் பிரதமர் வேட்பாளராக இருந்த போது மோடி சொன்னார். பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு முறை ஆண்டு விட்டார். கூட்டு முயற்சி மட்டுமல்ல, எந்த முயற்சியும் இல்லை. மீனவர்கள் கைது தொடரவே செய்கிறது.
யாரையோ காப்பாற்றிவிட்டதாக மார் தட்டிக் கொள்கிறாரே? "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார்" என்றாரே பத்தாண்டுகளுக்கு முன் மோடி?
2017 ஆம் ஆண்டு தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டதற்கு யார் காரணம்?2021 ஆம் ஆண்டு மேசியா நாகராஜன், செந்தில்குமார், சாம்சன், டார்வின் ஆகிய நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே! அதற்கு பொறுப்பேற்க வேண்டியது யார்? இதைத் தடுத்திருக்க வேண்டாமா? முன்பெல்லாம் கைது செய்யப்படும் மீனவர்கள், பதினைந்து நாளில் விடுதலை ஆகி வந்துவிடுவார்கள். ஆனால் இப்போது சட்டத்தை கடுமையாக்கி விட்டது இலங்கை அரசு. விசைப்படகை இயக்கும் மீனவர்க்கு ஆறு மாதம் சிறையும், இரண்டாவது முறையும் கைதானால் ஓராண்டு சிறையும் விதிக்கப்படுகிறது.
விசைப்படகை மீட்பதே அதிக சிரமமாக உள்ளது. 2014 முதல் 2019 முதல் சிறைப்பிடிக்கப்பட்ட 135 படகுகளில் 25 படகுகள் மட்டும் தான் மீட்கப்பட்டன. மீனவர்களது வாழ்வாதாரமே இந்த படகுகள்தான். அதுவே பறிபோய்விடுகின்றன. இந்தக் கடுமையான சட்டங்கள் 2018ஆம் ஆண்டு தான் கொண்டு வரப்பட்டன இலங்கை அரசால். இதுதான் மீனவர்கள் கைதுக்கு அடிப்படை காரணம். இதைக் கண்டிக்கும் தைரியம் இல்லாத பிரதமர், தி.மு.க.- காங்கிரசை குறை சொல்வது தப்பித்தல் வாதம் ஆகும்.
தனது நண்பர் அதானிக்காக, இலங்கை அரசாங்கத்தை பிரதமர் மோடியால் குற்றம் சொல்ல முடியவில்லை. அதானிக்காக இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுகிறார் பிரதமர் மோடி. அதானியின் காற்றாலைத் திட்டம், சுற்றுச்சூழல் பிரச்சினையில் இலங்கையில் சிக்கி உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.3,650 கோடி முதலீடு செய்யப்படுகிறது. துறைமுகம், விமான நிலையங்கள் அவர்கள் கைக்குப் போகிறது. இலங்கை பத்திரிகைகள் இது பற்றி பக்கம் பக்கமாக எழுதி வருகின்றன. எனவே, இலங்கை அரசாங்கத்தை மோடியால் விமர்சிக்க முடியாது.
அந்த வகையில் மீனவர்களை கடத்தி சிறைபிடிக்கும் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றவே கன்னியாகுமரியில் இப்படி பேசி இருக்கிறார் மோடி. 'இந்திய மீனவர்களுக்காக பேசுங்கள்' என்பதுதான் மோடிக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள்!
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?