murasoli thalayangam
“மன்னரையும், குருமார்களையும் எதிர்த்த வைகுண்டருக்கும் சனாதன ஸ்டிக்கரை ஒட்டிய ஆளுநர்...” - முரசொலி!
அய்யா வழியை மடை மாற்றாதீர்!
சனாதன ஸ்டிக்கரை அச்சடித்து வைத்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதனை எல்லார் முதுகிலும் ஒட்டி வருகிறார். திருவள்ளுவர், வள்ளலார் வரிசையில் இப்போது அய்யா வைகுண்டருக்கும் சனாதன ஸ்டிக்கரை ஒட்டி இருக்கிறார் ஆளுநர்.
சனாதனத்துக்கு எதிராக புதுவழி காட்டியவர்தான் வைகுண்டர். இந்த அரிச்சுவடிகூட ஆளுநர் அறியவில்லை. “அய்யா வைகுண்டர் தோன்றிய காலக்கட்டம், சனாதன தர்மத்துக்கு பாதிப்பு ஏற்பட்ட காலம் ஆகும். சனாதன தர்மத்தைக் காக்கவே வைகுண்டர் தோன்றினார்” என்று பேசி இருக்கிறார் ஆளுநர். அவருக்கு வைகுண்டர் என்றால் யார் என்றே தெரியவில்லை. வைகுண்டம் என்று நினைத்துக் கொண்டு ஏதோ பேசி இருக்கிறார்.
சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி, “ஆளுநர் வெளியிட்ட புத்தகம், அய்யா வைகுண்டர் வரலாற்றைத் திரிக்கும் முயற்சி. சனாதனத்தின் வேராக மனுதர்மம் இருக்கிறது. சனாதனத்திற்கு எதிரான செயல்களைத்தான் அய்யா வைகுண்டர் செய்திருக்கிறார். பெண்ணடிமைத்தனம், சாதியத்திற்கு எதிரானவற்றைதான் செய்திருக்கிறார். இவை இரண்டுக்கும் ஆதரவானது சனாதனம். புராணமும் ஆகமங்களும் பொய்யானவை எனக் கூறியிருக்கிறார். வைகுண்டரை அறிந்துகொண்டுதான் பேச வேண்டும். அவர் பேசியது தவறானது” என்று சொல்லி இருக்கிறார்.
இது தோள் சீலைப் போராட்டத்தின் 200வது ஆண்டு ஆகும். சனாதனச் சாதிப் பாகுபாட்டுக்கு எதிரான மகத்தான போராட்டம் அது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றிருந்த தமிழ்ச் சமூகத்தில் இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளால் தமிழினத்தின் பண்பாடு சிதைக்கப்பட்டது.
மதத்தின் பேரால் - சாதியின் பேரால் - சாத்திர சம்பிரதாயங்களின் பேரால் - புராணங்களின் பேரால் - மனிதனை மனிதன் பாகுபடுத்திவிட்டார்கள். ஆணுக்குப் பெண் அடிமை என்றாக்கி விட்டார்கள். சூத்திரர்களையும் பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு. தீண்டாமையை புனிதம் ஆக்கினார்கள்.
மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது - கண்ணில் படக்கூடாது என்றளவுக்கு கொடுமைகள் தலைவிரித்தாடியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் குடை எடுத்துச் செல்லக் கூடாது, செருப்பு அணியக் கூடாது, பசு வளர்க்கக் கூடாது, வீட்டுக்கு ஓடு போடக் கூடாது, ஒரு மாடிக்கு மேல் கட்டக் கூடாது, முரட்டுத் துணிதான் அணிய வேண்டும் – என்றெல்லாம் இருந்தது. திருவிதாங்கூர் பகுதியில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்துப் பெண்கள் அனுபவித்த துன்ப துயரம் என்பது மற்ற பகுதிகளில் இல்லாதது.
குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், மார்பில் சேலை போடக் கூடாது. இதனை மீறி சேலை போட்டுக் கொள்ள முயற்சித்த பெண்கள் தாக்கப்பட்டார்கள். சித்தரவதை செய்யப்பட்டார்கள். இதை விடக் கொடூரமாக 'முலைவரி' என்ற வரியையே போட்டுள்ளார்கள். அப்படி வரிகட்டாத காரணத்தால் தனது மார்பை அறுத்து எறிந்தாள் ஒரு பெண். அதுதான் ‘முலைச்சி பறம்பு’ வழிபாட்டுத் தலமாக இன்றும் இருக்கிறது. இக்கொடுமைகளுக்கு எதிராக 1822 ஆம் ஆண்டு போராட்டம் தொடங்கியது. ‘அய்யா வழி’ என்ற புதிய வழியை உருவாக்கிய அய்யா வைகுண்ட சாமிகள் இந்த போராட்டத்தை நடத்தினார்கள். திறந்த மார்போடு பெண்கள் இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து பரப்புரை செய்தார் அய்யா வைகுண்டர்.பொதுக்கிணறுகள் உருவாக்கினார்.
அன்புக்கொடி என்ற மதப்பிரிவையே உருவாக்கினார். அடித்தள மக்கள் அனைவருக்கும் தலைப்பாகை கட்டி விட்டார். பெண்கள் இடுப்பில் குடம் எடுக்கக் கூடாது என்று அந்தக் காலத்தில் தடை இருந்தது. அதை உடைத்து இடுப்பில் தண்ணீர் குடம் கொண்டு வரக் கட்டளையிட்டவர் அய்யா. ‘தாழக்கிடப்போரை தற்காப்பதே தர்மம்’ என்று சொன்னவர் அவர். இதன்விளைவாகத் தான் 1859 ஆம் ஆண்டு உத்தரம் திருநாள் அரசர் உத்தரவு போட்டார். தோள் சீலை அணியலாம் என்ற உரிமை அதன்பிறகுதான் கிடைத்தது.
18 வகை சாதியினர் உயர் வகுப்பினரால் மிகக் கீழாக நடத்தப்பட்டனர். இதற்கு எதிராகக் குரல் கொடுத்தார் வைகுண்டர். ‘அகிலத் திரட்டு அம்மானை’ என்பது அவர் எழுதிய புகழ் பெற்ற நூல். பூஜை செய்யக் கூடாது, பூசாரி வைத்துக் கொள்ளக் கூடாது, யாகம் வளர்க்கக் கூடாது, ஹோமம் வளர்க்கக் கூடாது என்றெல்லாம் அறிவுரை வழங்கியவர் அவர். வேறு எதன் மீதும் அச்சம் கொள்ளாதீர்கள் என்று அனைத்து மூடநம்பிக்கைகளையும் நிராகரித்தார் அவர். தன்மானத்தோடு வாழ்ந்தால் கொடுமைகள் உங்களை அண்டாது என்றார் அய்யா.
யாரும் யாருக்கு முன்னும் அடிமையில்லை என்றும், சாதியைத் தூக்கி கடலில் எறியுங்கள் என்றும், சாதி தானாகவே அழியும் என்றும் சொன்னவர் அய்யா வைகுண்டர். புரோகிதர்களை மிகக் கடுமையாகக் கண்டித்தார். சிலை வழிபாட்டை மறுத்தார். மனிதர் ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வம் இருப்பதாகச் சொன்னார். ஒரே நேரத்தில் மன்னரையும், குருமார்களையும் எதிர்த்த புரட்சியாளர் அவர். அத்தகைய அய்யா வைகுண்டருக்குத் தான் சனாதன ஸ்டிக்கர் ஒட்டுகிறார் ஆளுநர்.
“நீ பெரிது நான் பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்ற வான்பெருதறியாமல் மாள்வார் வீண் வேத முள்ளோர்” என்ற அவருக்குத்தான் சனாதன ஸ்டிக்கர் ஒட்டுகிறார். அய்யா வழி தலைமை பதி பால பிரஜாபதி அடிகளார் சொல்கிறார்: “வைகுண்டர் சனாதனத்தைக் காக்க வரவில்லை. மக்களை சனாதனத்திடம் இருந்து காக்க வந்தார்” என்கிறார். இந்த ஒற்றை வரியில் அனைத்தும் அடங்கி இருக்கிறது.
- முரசொலி தலையங்கம்
11.03.2024
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!