murasoli thalayangam
தமிழ்நாடு வந்த மோடி தேர்தலுக்காக கூட நிவாரணத்தொகை தருவதாக சொல்லவில்லை - முரசொலி விமர்சனம் !
முரசொலி தலையங்கம் (05.03.2024)
3. வெள்ள நிவாரணம்
சென்னையைச் சுற்றிய மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பெய்த மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. டிசம்பர் 17,18 ஆம் தேதிகளில் தென் மாவட்டத்தில் மழை, வெள்ளம் சூழ்ந்தது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத்தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் முதலமைச்சர் அவர்கள் முதலில் கேட்டார்கள்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக அளவிடப்படவில்லை. எனவே, அவசர நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி தரவேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் பிரதமரிடம் கேட்டார்கள். ஆனால் அவை தரப்படவில்லை. பிரதமர் அவர்களிடம் டெல்லிச் சென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரடியாகவே கோரிக்கை வைத்தார்கள். அதாவது, டிசம்பர் 19 ஆம் தேதி அன்றே இந்தக் கோரிக்கையை வைத்தார்கள். ஒன்றிய நிதி அமைச்சர் இங்கு வந்து பார்த்துச் சென்றார். அவரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஒன்றியக் குழு மூன்று நாட்கள் தங்கி ஆய்வை நடத்தியது. அவர்களிடமும் முதலமைச்சர் அவர்கள் இந்த கோரிக்கைகளை வைத்தார். பின்னர் சேதங்கள் முழுமையாக அளவிடப்பட்டு 37 ஆயிரம் கோடி நிதி கேட்டது தமிழ்நாடு அரசு. இதுவரை இந்த நிதி தரப்படவில்லை.தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் வெள்ளச் சேதப் பகுதிகளை பார்த்தாரா? இல்லை. நெல்லைக்கு வந்த பிரதமர், பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்தாரா? இல்லை. தேர்தல் ஸ்டண்டாகக் கூட, அங்கே பேசும் போது, நிதி தருகிறேன் என்று அறிவித்தாரா என்றால் அதுவும் இல்லை. ஆனால் தமிழ்நாடு ஒத்துழைக்க மறுக்கிறது என்று எதை வைத்துச் சொல்கிறார்?
4. நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்
ஒரு ரூபாயை தமிழ்நாட்டில் இருந்து பெற்றால் அதில் இருந்து 29 பைசாவைத்தான் திரும்பத் தருகிறது பா.ஜ.க.
வரி வருவாய் நிதியானது மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதில் முடிந்தவரை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
ஒவ்வொரு முறை நிதி ஒதுக்கீடு செய்யும் போதும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு அள்ளித் தரப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு கிள்ளித் தரப்படுகிறது. இதுதான் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த காலம் முதல் நடக்கிறது.
26.2.2022 ஆம் நாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பிரதமர் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசும் போது, “தமிழ்நாடு பலவகைகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு. ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. ஆனால் ஒன்றிய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவது 1.21 விழுக்காடு மட்டுமே. எனவே தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் அளிக்கக் கூடிய பங்குக்கு ஏற்ப நிதி வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன்னால் 1.42 லட்சம் கோடி ரூபாயை
மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இதில் அதிகபட்சமாக பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்துக்கு 25 ஆயிரத்து 495 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை 5 ஆயிரத்து 797 கோடி மட்டும்தான்.
பீகார் மாநிலத்துக்கு தரப்பட்டுள்ள தொகை 14 ஆயிரத்து 295 கோடி ரூபாய். மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு 11 ஆயிரத்து 157 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 8 ஆயிரத்து 978 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு எல்லாம் ஏன் கொடுக்கிறீர்கள் என்று நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டுக்கு ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறோம். ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் 5 ஆயிரம் கோடி வரை தந்துள்ளார்கள். கேரளாவுக்கு 2 ஆயிரத்து 736 கோடிதான் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். கேரள முதலமைச்சர், டெல்லிச் சென்று ஏன் போராடினார் என்பதை இதன் மூலம் அறியலாம். ஒன்றிய அரசின் சார்பில் தொடங்கப்படும் திட்டங்களில் செய்யப்படும் ஓரவஞ்சனையை பிரதமர் முன்னிலையில் ஒரு முறை முதலமைச்சர் விவரித்தார்.
“ஒன்றிய அரசு தனது திட்டங்களுக்கான நிதிப்பங்கை தொடக்கத்தில் அதிகமாக அளித்தாலும், காலப்போக்கில் தனது பங்கினைக் குறைத்து. மாநில அரசு செலவிட வேண்டிய நிதிப் பங்கை உயர்த்தும் நிலையைப் பார்க்கிறோம். ஒன்றிய மாநில அரசுகளின் பங்களிப்போடு, பயனாளிகளின் பங்கையும் முன்னிறுத்தி, பல திட்டங்கள் ஒன்றிய அரசால் செயல்படுத்தப் படுகிறது. இதில் அந்தத் தொகையை பயனாளிகள் செலுத்த முடியாதபோது, மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிற மாநில அரசுகள்தான் பயனாளிகளின் பங்களிப்பையும், சேர்த்து செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மாநில அரசின் நிதிச் சுமை அதிகரிக்கிறது” என்று சுட்டிக்காட்டினார் முதலமைச்சர் அவர்கள். அதுதான் சென்னை மெட்ரோ திட்டத்தில் நடக்கிறது.
ஜி.எஸ்.டி.க்குப் பிறகு ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் வரிப்பகிர்வுதான் மாநில நிதிக்கு மிகமிக முக்கியமானது ஆகும். அதனை முறையாக ஒழுங்காக தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு வழங்குவது இல்லை. நிதிப்பகிர்வை முறையாக ஒழுங்காகச் செய்கிறோம் என்று பிரதமர் பேசினாரா? இல்லை. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிதி கொடுத்துள்ளோம் என்பதை அவர் பேச வேண்டியதுதானே?
–- தொடரும் –
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!