murasoli thalayangam
“ஒன்றிய அரசின் திட்டத்தையே நாம்தான் செயல்படுத்துகிறோம்”: மோடி அரசின் அவலங்களை தோலுரித்து காட்டிய முரசொலி!
முரசொலி தலையங்கம் (04.03.2024)
எந்த திட்டத்துக்கு தடை போட்டோம்? - 1
தமிழ்நாட்டுக்கு திட்டங்களுக்கு மேல் திட்டங்களை கொண்டு வந்து திணித்தது போலவும் - அதற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கவில்லை என்பதைப் போலவும் பிரதமர் மோடி திருநெல்வேலியில் பேசி இருக்கிறார். ‘’எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார். எதற்கு நாங்கள் தடையாக இருந்தோம்’’ என்று கேட்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதற்கு இதுவரை பதில் இல்லை. அவர்கள் அறிவித்த திட்டத்துக்கு அவர்களே தடையாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
1. மதுரை எய்ம்ஸ்
‘தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யுங்கள்’ என்று முதன்முதலாக 19.6.2014 அன்று தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது. இரண்டு இடங்களைத் தேர்வு செய்து 31.0.2014 அன்று தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது. 28.2.2015 அன்று ஒன்றிய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்’ என்று சொன்னார். 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய நான்கு மாத காலக்கெடுவை நீதிமன்றம் விதித்தது.
2018 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என்று தேதியே குறித்தார்கள். அடிக்கல் நாட்டப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார் பிரதமர்.
மாநில அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. திட்ட மதிப்பீடு ஆயிரத்து 977 கோடி ரூபாயாக அதிகரித்த நிலையில், ஓராண்டு கழித்து ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன் பெறும் ஒப்பந்தம் கையெழுத்தானது. 82 சதவீதம் நிதியான ஆயிரத்து 627 கோடி ரூபாய் ஜப்பானின் ஜைய்கா நிறுவனத்திடம் இருந்து கடன் பெறப்படும். எஞ்சிய 18 சதவிகிதம் மட்டுமே ஒன்றிய அரசு வழங்கும் என கூறப்பட்டது.
மற்ற மாநிலங்களில் அமைக்கும் மருத்துவமனைகள் எல்லாம் பா.ஜ.க. அரசின் நிதியில் இருந்து அமைக்கப்பட, தமிழ்நாட்டுக்கு மட்டும் அந்நிய நாட்டின் நிதியை எதிர்பார்த்தார்கள். இப்போது ராமநாதபுரத்தில் வாடகை கட்டடத்தில் இருக்கிறது எய்ம்ஸ். மதுரையில் ஒரு வாடகை கட்டடம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் பிரதமரின் எய்ம்ஸ் திட்டத்தின் லட்சணம் ஆகும்.
2. சென்னை மெட்ரோ
8.4.2023 அன்று பல்லாவரத்தில் நடந்த விழாவில் பிரதமர் முன்னிலையில் பேசும் போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ‘‘சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் பங்கினை வழங்குவதற்கான ஒப்புதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றிய அரசில் நிலுவையில் உள்ளது” என்றார். அதற்கு பிரதமரின் பதில் என்ன?
சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்காததால், நிதி கிடைக்கவில்லை. இதனால் திட்டப்பணிகள் நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டன. இதனடிப்படையில், 63,246 கோடி ரூபாய் செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித் தடங்களைக் கொண்ட 2ம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 ஜனவரி மாதத்தில் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது.
ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் பரிந்துரையுடன், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதி ஒப்புதல்களும் இறுதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. இதற்குப் பிறகு, ஒன்றிய உள்துறை அமைச்சர் 21-.11.-2020 அன்று சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் இதுவரை ஒன்றிய அரசு திட்ட அனுமதியைத் தரவில்லை. பிரதமரை பல்முறை நேரில் சந்தித்தும் முதலமைச்சர் அவர்கள் இது பற்றி விளக்கி இருக்கிறார். ஆனாலும் அனுமதி கிடைக்கவில்லை.
இந்தத் திட்டத்திற்கான முன் மொழிவு பொருளாதார விவகாரங் களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கிறோம்.இரண்டாம் கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தனியாகத் தொடங்கி இருக்கிறது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் இல்லாத நிலையில், ஒன்றிய அரசின் பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மாநில நிதியில் இருந்து செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது பணிகளின் வேகத்தைக் குறைத்துள்ளதோடு, மாநில அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு மட்டும் செலவு செய்தாக வேண்டிய நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம்? பிரதமர் மோடி தான். ஒன்றிய அரசின் திட்டத்துக்கு நாம் தடையாக இல்லை. ஒன்றிய அரசின் திட்டத்தையே நாம் தான் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
-– தொடரும் -
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!