murasoli thalayangam

“மோடி மறக்கக் கூடாத ஒரு முழக்கம் - ‘மோடியா? லேடியா?’” : முரசொலி தாக்கு !

அந்த மோடியா ? இந்த லேடியா ? - 2

பிரதமர் மோடிக்கு கடந்த காலத்தை விரிவாக விளக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஷக்தி சின்கா என்பவர் வாஜ்பாய் பற்றி ஒரு புத்தகம் எழுதினார். ‘ஒரு பிரதமரான வாஜ்பாய்க்கு தேனிலவுக் காலம் என்பதே கிடைக்காமல் போனது. ஜெயலலிதா முதல் நாளில் இருந்தே கண்ணில் விரலை விட்டு ஆட்டினார். ஜெயலலிதா தனக்கு எதிரான வழக்குகளில் இருந்து தப்பிக்க வாஜ்பாய் தனக்கு உதவ வேண்டும் என்று விரும்பினார். அரசாங்கமும் அவர்களுக்கு முடிந்த வரை சட்டபூர்வமாக உதவியது.’ என்று எழுதினார்.

‘அவுட்லுக்’ ஆசிரியர் வினோத் மேத்தா, பிரதமரைச் சந்திக்கச் சென்றதாகவும், அப்போது வாஜ்பாய் ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததாகவும், என்ன இப்படி இருக்கிறீர்களே என்று வினோத் மேத்தா கேட்டதாகவும், ‘அடுத்து என்னைச் சந்திக்க ஜெயலலிதா வரப்போகிறார்’ என்று வாஜ்பாய் சொன்னதாகவும் அந்தப் புத்தகத்தில் இருக்கிறது. அந்த ஜெயலலிதாவைத்தான் புகழத் தொடங்கி இருக்கிறார் மோடி.

பா.ஜ.க. ஆட்சி கவிழ்க்கப்பட்ட அன்று, ‘நான் இன்று நிம்மதியாக உறங்குவேன்’ என்றார் வாஜ்பாய். ‘எனது வாழ்க்கையில் மனநிம்மதி இல்லாத காலம் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்திருந்த காலம்’ என்றார் வாஜ்பாய். வாஜ்பாய் நிம்மதியைக் கெடுத்த ஜெயலலிதாவைத்தான் புகழ்கிறார் மோடி.

இவை அனைத்துக்கும் மேலாக, மோடி மறக்கக் கூடாத ஒரு முழக்கம் இருக்கிறது. “மோடியா? லேடியா” என்று கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தவர் ஜெயலலிதா. ‘இந்தியாவின் சிறந்த நிர்வாகி மோடி அல்ல, இந்த லேடிதான்’ என்று பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா. குஜராத் வளரவே இல்லை, தமிழ்நாடுதான் வளர்ந்துள்ளது என்று சொன்னவர் ஜெயலலிதா.

2014 ஏப்ரல் 21 அன்று சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகிறார்... “ஒரு மாநிலம் வளர்ச்சி பெற்றிருக்கிறதா? அந்த வளர்ச்சி ஏழை எளிய நடுத்தர மக்களைச் சென்றடைந்து இருக்கிறதா? ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்ச்சி அடைந்திருக்கிறார்களா என்பதைத் தெளிவுபடுத்தும் கண்ணாடியாக விளங்குபவை, மனிதவளக் குறியீடுகள். விளம்பர வளர்ச்சி எது என்பதையும், உண்மையான வளர்ச்சி எது என்பதையும் இந்த மனிதவளக் குறியீடுகள் தெளிவுபடுத்தும்.

குஜராத்தில் 16.6 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். ஆனால் தமிழகத்தில் 11.3 சதவிகித மக்கள் தான் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். உயிருடன் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஒரு வயதை அடைவதற்குள் 38 குழந்தைகள் குஜராத்தில் இறந்து விடுகின்றன. ஆனால் தமிழகத்தில் ஒரு வயதை அடைவதற்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 21 மட்டுமே. ஒரு லட்சம் குழந்தைப் பிறப்பில் தாய் இறப்பு விகிதம் குஜராத்தில் 122. தமிழகத்தில் இது 90 தான்.

கடந்த 2011-12 ஆம் ஆண்டு உணவு தானிய உற்பத்தி குஜராத்தில் 88.74 லட்சம் மெட்ரிக் டன்தான். ஆனால் தமிழ்நாட்டில் இது 101.51 லட்சம் மெட்ரிக் டன் என்ற உயரளவு ஆகும். 2011 முதல் 2013 வரை குஜராத்தில் தொடங்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் எண்ணிக்கை 1,20,016. ஆனால், தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட தொழில்களின் எண்ணிக்கை 1,61,732. அதாவது 41 ஆயிரத்து 716 தொழில்கள் கூடுதலாக தமிழ்நாட்டில் துவங்கப்பட்டுள்ளன.

2012-13 ஆம் ஆண்டு குஜராத்தில் பெறப்பட்ட அன்னிய முதலீடு வெறும் 2,676 கோடி ரூபாய். ஆனால், தமிழ்நாட்டில் பெறப்பட்டதோ 15,252 கோடி ரூபாய். ஊரகப் பகுதிகளில் தனிநபர் சராசரியாக செலவு செய்வது குஜராத்தில் 1,430 ரூபாய் ஆகும். தமிழகத்தில் இது 1,571 ரூபாய் ஆகும். நகர்ப்புறப் பகுதிகளில் தனிநபர் சராசரி செலவு குஜராத்தில் 2,472 ரூபாய்தான். தமிழ்நாட்டில் இது 2,534 ரூபாய் ஆகும்.

குஜராத்தில் உள்ள தொழிற்சாலைகள் 22 ஆயிரத்து 220. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 996. குஜராத்தில் உள்ள தொழிலாளர் எண்ணிக்கை 10 லட்சத்து 50 ஆயிரம். தமிழ்நாட்டில் தொழிலாளர் எண்ணிக்கை 15 லட்சத்து 90 ஆயிரம். கடந்த பத்து ஆண்டுகளில் குஜராத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் 65 சதவிகிதம் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் 29 சதவிகிதம் குறைந்துள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அதிக மக்கள் பயன்பெறும் மாநிலம் தமிழகம். குஜராத்தில் இதற்கு நேர்மாறான நிலைமையே உள்ளது. பொது விநியோகத் திட்டத்திலிருந்து உணவுப் பொருள்களை கள்ளச் சந்தையில் விற்பது குஜராத்தில் 63 சதவிகிதம் ஆகும். இது தமிழ்நாட்டில் 4 சதவிகிதம்தான்.

வாக்காளர்களே இப்போது சொல்லுங்கள்... சிறந்த நிர்வாகி யார்? குஜராத்தைச் சேர்ந்த மோடியா அல்லது தமிழகத்தைச் சேர்ந்த இந்த லேடியா?” – என்று கேட்டார் ஜெயலலிதா. இவற்றை மோடி மறந்திருக்கலாம். தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை.

பெங்களூரு நீதிமன்றத்தில் நான்காண்டு சிறைத்தண்டனையும் - 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகழை மோடி பாடுவதன் மூலமாக மோடியின் ஊழல் முகமும் அம்பலம் ஆகிறது. தமிழ்நாட்டில் சொல்வதற்கு அவருக்கு ஏதுமில்லை என்பதும் புரிகிறது.

- முரசொலி தலையங்கம்

02.03.2024

Also Read: “வாஜ்­பாயின் பாஜக ஆட்­சி­யை கவிழ்த்­ததே ஜெய­ல­லிதா என்­பது மோடிக்கு தெரி­யுமா?”-முரசொலி நெத்தியடி கேள்வி!