murasoli thalayangam
வேளாண் நிதிநிலை அறிக்கை : “மண்ணைக் காப்பதாகவும், மக்களைக் காப்பதாகவும் அமைந்துள்ளது” - முரசொலி பாராட்டு !
மண் வளமும் மக்கள் நலனும்
நான்காவது வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் வேளாண்மை -உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள். அந்த அறிக்கையானது மண் வளம் காப்பதாக மட்டுமல்ல; மக்கள் நலனையும் காப்பதாக அமைந்துள்ளது.
ஆட்சிக்கு வந்தால் வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையைக் கொண்டு வருவோம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். சொன்னதைச் செய்தார்கள். ஆண்டு தோறும் வேளாண்மை நிதி நிலை அறிக்கை வெளியாகி வருகிறது. இது நான்காவது ஆண்டு ஆகும்.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம், நீர்ப்பாசன நவீன மயமாக்கல் திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, மண்வள மேலாண்மை, இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்குதல் - ஆகிய திட்டங்கள் கடந்த காலத்தில் செயல்படுத்தப்பட்டதன் மூலமாக பலன்களை நேரடியாகப் பார்த்தோம். இதனால் பாசனப் பரப்பு அதிகமாகி உள்ளது. உற்பத்தியும் அதிகமாகி உள்ளது.
உணவு தானிய உற்பத்தியில் மகத்தான சாதனை நடந்தது. 119.98 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை விட 11 சதவிகிதம் இது அதிகம் ஆகும். 79.66 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தியும், 35.92 இலட்சம் மெட்ரிக் டன் சிறுதானிய உற்பத்தியும் 4.99 லட்சம் மெட்ரிக் டன் பயறு உற்பத்தியும் செய்யப்பட்டுள்ளது. இவை முந்தைய ஆண்டை விட 4 சதவிகிதம் அதிகம் ஆகும். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்ய ஜூன் 12 ஆம் தேதியோ --அதற்கு முன்போ மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. காவிரி டெல்டா உழவர்களுக்காக ரூ.61 கோடிக்கு குறுவை தொகுப்பு உதவித் திட்டம் வழங்கப்பட்டது. அரிசி மட்டுமல்லாமல் சிறுதானிய உற்பத்தியிலும், பயறு உற்பத்தியிலும் சாதனை படைக்கப்பட்டது. பருத்தி, தென்னை என அனைத்திலும் கவனம் குவிக்கப்பட்டது.
காவிரிப் பாசனப்பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வாருவதற்காக 2021-22 ஆம் ஆண்டில் 62.91 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3 ஆயிரத்து 859 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் செய்யப்பட்டதால் 4.90 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும், 13.341 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு 39.73 இலட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இவை அனைத்தும் கடந்த காலச் சாதனையாகும். இதனால்தான் பாசனப் பரப்பும் அதிகம் ஆனது. உற்பத்தியும் அதிகம் ஆனது. இதேபோன்ற சிறப்பான முன்னெடுப்புகள் கொண்டதாக 2024--25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது. இந்த அறிக்கையில் முக்கியமான இரண்டு பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. ஒன்று மண் வளத்தை காப்பது.
இரண்டு, மக்களின் மனவளத்தை காப்பது. இவை இரண்டையும் மனதில் வைத்து திட்டங்களைத் தீட்டி உள்ளார்கள். CM MK MKS - என்பது ஒரு திட்டத்தின் பெயர். ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்' என்பது மகத்தான திட்டம் ஆகும். பயிர்களின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளை அதிகம் பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் இறந்து போகின்றன. இதனால் மண் வளம் குறைந்து போகிறது. இதைத் தடுப்பதற்கான திட்டம் தான் CM MK MKS என்பது ஆகும்.
ரசாயன மருந்துகளைக் குறைப்பதில் அக்கறை காட்டப்பட்டுள்ளது. பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேப்ப மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்பட இருக்கின்றன. பசுந்தாள் உர விதைகளை அதிகம் கொடுத்தும், மண்புழு உரத்தை தயாரித்தும், களர் அமில நிலங்களைச் சீர்திருத்தம் செய்வதன் மூலமாகவும் மண் வளத்தை காக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.
அடுத்து மக்கள் நலன் ஆகும். பாரம்பரிய காய்கறி ரகங்கள் உற்பத்திக்கு ஊக்கமளிக்கப்பட உள்ளது. மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட உள்ளன. ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களை அதிகமாக பயிரிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரபு சார் நெல்ரகங்களைப் பாதுகாக்க பாரம்பரிய நெல் ரகங்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட உள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற செறிவூட்டப்பட்ட நெல் ரகங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்கள். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிவன் சம்பா என்ற நெல் ரகம் 1000 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்ய விதைப் பைகள் வழங்கப்பட உள்ளன.
இப்படி மண்ணைக் காப்பதாகவும், மக்களைக் காப்பதாகவும் அமைந்துள்ளது வேளாண் நிதிநிலை அறிக்கை.
- முரசொலி தலையங்கம்
22.02.2024
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!