murasoli thalayangam
பசிப்பிணி போக்கும் விவசாயிகள் காலில் ஆணியை குத்தும் மோடி அரசு : முரசொலி கடும் தாக்கு!
முரசொலி தலையங்கம் (16-02-2024)
ஆணியை விதைப்பவர்
சில நாட்களுக்கு முன் மாநிலங்கள் அவையில் பிரதமர் மோடி அவர்கள் பேசிய பேச்சை நினைவுபடுத்திப் பாருங்கள்... “எங்களைப் பொறுத்தவரையில் நாடு என்பது வெறும் நிலமல்ல. அது மனித உடலைப் போன்றது. காலில் முள் குத்தி வலி ஏற்பட்டால் அந்த முள்ளை கை உடனே எடுக்கும். ‘காலில்தானே முள் இருக்கிறது. எனக்குக் கவலையில்லை’ என கை நினைக்காது. அதுபோலவே நமது தேசமும்” என்று சொல்லி இருந்தார் பிரதமர்.
அவர்தான் இன்று முள் அல்ல, ஆணியை விதைத்துக் கொண்டு இருக்கிறார். தலைநகர் டெல்லியின் சாலைகள் தோண்டப்பட்டு, அங்கு ஆணிகள் நட்டு வைக்கப்படுகின்றன. ‘காலில் முள் குத்தினால் கை எடுக்கும்’ என்று சொன்ன பிரதமரின் கரங்கள்தான் ஆணியை நடுகின்றன.
யார் காலில் குத்தட்டும் என்று நடுகின்றன? நிலத்தில் பயிர் விளைவித்து பசிப்பிணி போக்கும் மருத்துவர்களாம் வேளாண் விவசாயப் பெருங்குடி மக்கள் காலில், அவர்கள் வரும் வாகனத்தில் குத்தட்டும் என்று ஆணிகள் நடப்படுகின்றன.
டெல்லியை நோக்கி அணிவகுத்துக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். விவசாயிகளிடம் இருந்து நிலத்தைப் பறிக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒன்றரை ஆண்டுகள் போராடி அந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வைத்த விவசாயிகள்தான் இவர்கள். ‘வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து அதனைச் சட்டப்பூர்வமாக ஆக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வைத்துள்ளார்கள்.
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்கிக் காட்டுவோம்” என்பது, பிரதமர் ஆவதற்கு முன்னால் மோடி கொடுத்த முக்கியமான வாக்குறுதி ஆகும். ‘இரண்டு மடங்கு வருமானத்தைக் கேட்கவில்லை. குறைந்தபட்ச ஆதார விலையைத்தான் கேட்கிறோம்’ என்கிறார்கள் விவசாயிகள். சம்யுக்த கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோச்சா ஆகிய இரண்டு அரசியல் சார்பற்ற விவசாய அமைப்புகள்தான் டெல்லியை நோக்கி அணிவகுத்துள்ளன.
டெல்லியின் ஒன்றிய பா.ஜ.க.வின் போலீஸ் கொடுத்த வரவேற்புதான் ஆணிப் படுக்கைகள் ஆகும். டெல்லிக்குள் அவர்கள் வரமுடியாதபடி தடுப்புகள் போடப்பட்டுள்ளன. சாதாரணத் தடுப்புகள் அல்ல. இரும்புத் தடுப்புகள், சிமெண்ட் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. சிமெண்ட் சுவரையே சாலையில் கட்டி விட்டார்கள். சாலைகளைப் பெயர்த்து, ஆணிகளைப் பதித்து விட்டார்கள். அரியானாவில் இருந்து டெல்லிக்குள், பஞ்சாப்பில் இருந்து டெல்லிக்குள் வரும் அனைத்துச் சாலைகளும் அடைக்கப்பட்டு விட்டன. மீறி உள்ளே வரும் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை வீசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. புகைக் குண்டுகளில் இருந்து பாதுகாக்க ஈரமான சாக்குப் பைகளை கைகளில் வைத்துள்ளார்கள் விவசாயிகள்.விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகை வீசும் கொடுமையும் நடக்கிறது.
விவசாயிகளுக்கு டீசல் கொடுக்கக் கூடாது என்று அனைத்து பெட்ரோல் பங்குகளும் மிரட்டப்படுகின்றன. விவசாயிகள் மீதான தாக்குதல் காட்சிகளைக் காட்டக் கூடாது என்று சமூக வலைத்தளங்கள் முடக்கப்படுகின்றன. அரியானா காகர் ஆற்றின் பாலத்தை மூடிவிட்டார்கள். ஆறு வறண்டு கிடக்கிறது. வறண்ட பகுதியில் விவசாயிகளின் டிராக்டர் போய்விடக் கூடாது என்பதற்காக ஜே.சி.பி.மூலம் மண்ணைத் தோண்டிப் போட்டுள்ளது அரசு.
“குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க அவசர கதியில் சட்டம் இயற்ற முடியாது” என்கிறார் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா. ஏன் இவர்கள் அவசர கதியில் எதையுமே செய்தது இல்லையா? பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதியினருக்கு கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 103 ஆவது திருத்தத்தை 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு இயற்றியது. இரு அவைகளிலும் வைத்து நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, அரசிதழில் வெளியிட்டது அனைத்தும் ஒரு சில நாட்களுக்குள் நடந்து முடிந்தன. அவசர அவசரமாக 5 நாள்களில் 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், அடுத்த 5 நாள்களில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றார்கள். அது எல்லாம் எப்படி சாத்தியம் ஆனது? விவசாயிகளுக்கு மட்டும் இப்போது சாத்தியம் இல்லாமல் போகிறது.
இன்னொன்றையும் சொல்லி இருக்கிறார் ஒன்றிய அமைச்சர். ‘மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமாம்’. இதைக் கேட்கும் போது சிரிப்புதான் வருகிறது. இதுவரை இவர்கள் மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தித்தான் சட்டங்கள் கொண்டு வந்தார்களா? மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தார்களே, அப்போது மாநில அரசுகளிடம் கேட்டார்களா? ஒன்றரை ஆண்டு காலம் இந்த மூன்று சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தியபோதாவது, மாநில அரசுகளிடம் கருத்துக் கேட்டு, பின் வாங்குவதற்கான முயற்சியை எடுத்ததா ஒன்றிய அரசு?
இனி வேறு வழியில்லை என்ற சூழலில் அந்த மூன்று சட்டங்களையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்களே, அப்போதாவது மாநில அரசுகளிடம் கருத்துக் கேட்கப்பட்டதா?இதுவரை எதற்காவது மாநில அரசுகளிடம் கருத்துக் கேட்டுள்ளதா ஒன்றிய அரசு? மாநிலப் பட்டியலில் இருக்கிற பகுதிகளுக்கும் சேர்த்து தன்னிச்சையாக சட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. அரசு, இப்போது ‘மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று சொல்வது பசப்பு வார்த்தைகள் அல்லவா?
சில நாட்களுக்கு முன்னாள் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கியது பா.ஜ.க. அரசு. அவர்தான், ‘குறைந்த பட்ச ஆதார விலையை விவசாயிகளுக்கு அறிவிக்க வேண்டும்’ என்று அறிக்கை கொடுத்தவர். ஆனால் விவசாயிகளுக்கு ஆணிப் படுக்கைகளையே பா.ஜ.க. அரசு தருகிறது? இதை விட போலித்தனம் இருக்க முடியுமா?
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!