murasoli thalayangam
மீனவர் உயிர் மலிவா? : ஒன்றிய மோடி அரசுக்கு முரசொலி தலையங்கம் சரமாரி கேள்வி!
முரசொலி தலையங்கம் (15-02-2024)
மீனவர் உயிர் மலிவா ?
“பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட பாதிக்கப்பட மாட்டார்கள்” - என்று 2014 தேர்தலுக்கு முன்னால் ராமநாதபுரத்தில் பேசினார் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி. ஆனால் அவர் ஆண்ட பத்தாண்டு காலத்தில் இலங்கைக் கடற்படையினரால் 3 ஆயிரத்து 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களின் 534 படகுகள் சிங்கள அரசாங்கத்தால் கடத்தப்பட்டுள்ளன.
“அண்டை நாடுகள் இப்படி நடந்து கொள்ளக் காரணம், இந்தியாவை பலவீனமான பிரதமர் ஆள்வதால்தான்” - என்று அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கை குற்றம் சாட்டினார் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி அவர்கள். அவரது பத்தாண்டு கால ஆட்சியிலும் நிலைமை மாறவில்லை. இலங்கை சிறையில் மட்டுமல்ல, 3.12.2023 அன்று பாகிஸ்தான் அதிகாரிகளாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் சிலர் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளார்கள். 5.12.2023 அன்று குவைத் கடலோரக் காவல் படையினராலும் தமிழ்நாட்டு மீனவர்கள் நான்கு பேர் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளார்கள். ‘பலமான’ பிரதமர் ஆட்சியில் இருக்கும் போதுதான் இது நடந்துள்ளது. பிரதமர் மோடியை பலவீனமானவர் என்று சொல்ல முடியாது. அவர் பலமானவர்தான். ஆனால் அவருக்கு தமிழ்நாட்டவர் மீது துளி அக்கறையும் இல்லை என்பதுதான் இதற்குக் காரணம். தமிழ்நாட்டுக்காரர்களுக்கு ஒரு திருக்குறளைச் சொன்னால் மயங்கி விடுவார்கள். தமிழில் ‘வணக்கம்’ சொன்னால் கைதட்டி விடுவார்கள். காசி சங்கமம் போதும் என்று நினைக்கிறது பா.ஜ.க.
“இலங்கையால் தமிழ்நாட்டு மீனவர்க்கு பிரச்சினை. பாகிஸ்தானால் குஜராத் மீனவர்க்கு பிரச்சினை. இரண்டையும் தீர்க்க கூட்டு முயற்சியை மேற்கொள்வேன்” என்றும் பிரதமர் வேட்பாளராக இருந்த போது மோடி சொன்னார். பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு முறை ஆண்டு விட்டார். கூட்டு முயற்சி மட்டுமல்ல, எந்த முயற்சியும் இல்லை. ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மாதிரிதான் மீனவர் கூட்டுமுயற்சியும் ‘தொடங்கப்படாமலேயே பத்தாண்டு விழாவை’க்கொண்டாட வேண்டிய விவகாரமாக ஆகிவிட்டது.
2021 ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் பிரதமருக்கு ஒன்பது கடிதங்கள் எழுதி இருக்கிறார். எந்தப் பயனும் இல்லை. ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு 35 கடிதங்கள் எழுதி இருக்கிறார். எந்தப் பயனும் இல்லை. கடலில் போட்ட கல்லாகக் கிடக்கிறது.
அதிலும் குறிப்பாக 2023 ஆம் ஆண்டு என்பது தமிழக மீனவர்களுக்கு மிக மோசமான ஆண்டு ஆகும். அந்த ஆண்டு மட்டும், இலங்கைக் கடற்படையினர் 243 மீனவர்களைக் கைது செய்துள்ளார்கள். 37 படகுகளை பறிமுதல் செய்துள்ளார்கள்.
கடந்த ஒரு மாதம் இன்னும் நிலைமை மோசம் ஆனது. 6 கைது சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 12 மீன்பிடிப் படகுகள் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்- 8 ஆம் தேதி அன்று 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதினார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்தது. அங்கும் தி.மு.க. நாடாளு மன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இப்பிரச்சினையை எழுப்பினார். இலங்கை சிறையில் இப்போது 77 மீனவர்கள் சிறைப்பட்டு இருக்கிறார்கள். அவர்களது 151 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அங்கு இருக்கின்றன. மீனவர்களை விடுதலை செய்யவோ, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கவோ ஒன்றிய பா.ஜ.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து கடந்த 11 ஆம் தேதியன்று இராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. நடத்தி இருக்கிறது. கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தென் மாவட்டக் கழக அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். “தமிழர்களைச் சுட்டும், கைது செய்யும் இலங்கை அரசாங்கத்துக்கு 34 ஆயிரம் கோடியைக் கொடுக்கும் பா.ஜ.க. அரசு, நமது வரிப்பணத்தை தூக்கித் தரும் பா.ஜ.க. அரசு, அதே இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது தடுக்க வேண்டாமா?” என்று கேட்டுள்ளார் ஆர்.எஸ்.பாரதி.
கோவிட் பெருந்தொற்று காலம் தவிர, மற்ற காலங்களில் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகரித்தே வருகிறது. மீனவர்களை அடிப்பது, தாக்குவது, கைது செய்வது, சிறையில் அடைப்பது, படகுகளை உடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, மீன்பிடி வலைகளை அறுப்பது – ஆகிய அட்டூழியங்ள் தொடர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், ‘தமிழக மீனவர்கள் பற்றி பேசப் போகிறோம்’ என்று சொல்லிவிட்டு இலங்கை சென்றார். போய்விட்டு வந்தவர், ‘சர்வதேச கடல் எல்லைக்கு வரும் மீனவர்கள் குறித்து பேசினோம்’ என்று பேட்டி அளித்தார். இந்தப் பேட்டி கொடுத்த நாள் 2023 ஆம் ஆண்டுபிப்ரவரி 13. அதற்கு பத்து நாள் கழித்து 6 மீனவர்கள் தாக்கப்பட்டார்கள். இதுதான் பா.ஜ.க.வின் நாடகம் ஆகும்.
‘மீனவர் பிரச்சினையை தீர்த்துவிட்டோம்’ என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் சென்னை கூட்டங்களில் பேசினார்கள். ஆனால் கைது தொடர்கிறது. பறிமுதலும் தொடர்கிறது. பா.ஜ.க.வின் போலி நாடகங்களும் தொடர்கிறது. மீனவர்களின் கண்ணீர் மட்டும் ஓடிக் கொண்டே இருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!