murasoli thalayangam

”வஞ்சக எண்ணம் கொண்ட ஒன்றிய பா.ஜ.க அரசு” : முரசொலி கடும் தாக்கு!

முரசொலி தலையங்கம் - (13-02-2024)

போராட்டம் நடத்தும் முதலமைச்சர்கள் -2

முதலமைச்சராக இருந்த போது மாண்புமிகு மோடி அவர்கள் என்ன சொன்னார்கள்?

“குஜராத் மக்கள் ரூ.60 ஆயிரம் கோடியை டெல்லிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் திரும்ப வருவது மிகக் குறைவு. குஜராத் என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா?” என்று 6.12.2012 அன்று குஜராத் முதலமைச்சராக இருக்கும்போது கேட்டவர்தான் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள். அதைத்தான் இன்று தமிழ்நாடு - கேரள - கர்நாடக – மேற்கு வங்க - பஞ்சாப் – டெல்லி முதலமைச்சர்கள் சொல்கிறார்கள்.

மாண்புமிகு மோடி அவர்கள் அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்தார். “உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைக் குஜராத் மாநில பெண் ஆளுநர் கமலா பெனிவால் ஒப்புதல் அளிக்காமல் வைத்திருக்கிறார். பெண்களுக்கு எதிரியாகப் பெண் ஆளுநரே இருக்கிறார். ஒரு பெண்மணி குஜராத்தின் ஆளுநராக இருந்தும், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது நமது துரதிருஷ்டமே’’ - என்று 2013 ஏப்ரல் 8-ம் தேதி. டெல்லியில் நடந்த இந்தியத்

தொழிலக சம்மேளனத்தின் (FICCI) கூட்டத்தில் பேசினார் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி. அதைத்தான் இன்று தமிழ்நாடு- கேரள கர்நாடக– மேற்கு வங்க - பஞ்சாப் -டெல்லி முதலமைச்சர்கள் சொல்கிறார்கள்.

மாநிலங்களிடம் இருக்கும் நிதி வளத்தை பறித்துச் சென்று விட்டு நிதியும் தருவது இல்லை. கடன் வாங்கவும் விடுவது இல்லை. இவ்வளவுதான் வாங்க வேண்டும் என்று தடை போட்டு பட்டினி போட்டுக் கொல்லப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. தானும் தர மாட்டேன், அடுத்தவரையும் தர விட மாட்டேன் என்பதுதான் இந்த வஞ்சக எண்ணம் ஆகும்.

“மாநிலங்களின் கொள்கை முன்னுரிமைகளின்படி வளங்களைத் திரட்டுவதற்கும், முக்கியமான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும் உள்ள திறனை முடக்குவதையே ஒன்றிய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குற்றம் சாட்டுவது இதனால்தான். “கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு தொடர்ந்து 15 விழுக்காடு வளர்ச்சியை அடைந்த போதிலும், 2023–2024 ஆம் ஆண்டில் நிகரக் கடன் உச்சவரம்பைக் கணக்கிடுவதற்கான மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சியை வெறும் 8 விழுக்காடாக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. இதனால், நடப்பாண்டில், 6,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ஒன்றிய அரசின் திட்டமான, சென்னை மெட்ரோ இரயில் 2 ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால், இத்திட்டத்திற்கான மொத்த கடனான 33,594 கோடி ரூபாய் முழுவதும், மாநிலத்தின் நிகரக் கடன் உச்சவரம்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளது.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில், ஆண்டொன்றுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வருகிறது. இழப்பீட்டுத் திட்டத்தை நீட்டிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் (2018–23) வரை எத்தகைய மோசடியை பா.ஜ.க. அரசு செய்து வருகிறது என்பதை இந்த புள்ளிவிபரம் காட்டும்.

ஒரு ரூபாயை தமிழ்நாட்டில் இருந்து பெற்றால் அதில் இருந்து 29 பைசாவைத் தான் திரும்பத் தருகிறது பா.ஜ.க. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஒரு ரூபாய் பெற்றால் 2 ரூபாய் 73 பைசா தருகிறது பா.ஜ.க. அரசு. உத்தரப்பிரதேசத்துக்கு ஏன் தருகிறீர்கள் என்று நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டுக்கும் ஏன் அதைப் போல தர மறுக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறோம்.

பா.ஜ.க தமிழ்நாட்டில் 26 பைசா அளவுக்குத் தான் வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?கர்நாடகாவுக்கு 16 பைசாவும், தெலங்கானாவுக்கு 40 பைசாவும், கேரளாவுக்கு 62 பைசாவும், ஆந்திராவுக்கு 50 பைசாவும்தான் தரப்படுகிறது என்றால் ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சனை அல்லவா இது? பணமாக வாங்கி பைசாவாக தருவது ஏன் என்று கேட்கக் கூடாதா?

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என்று அதற்குப் பெயர். அந்தத் திட்டத்தில் கட்டப்படும் வீட­டுக்கு ஒன்றிய அரசு தருவது 1.50 லட்சம் ரூபாய் மட்டும்­தான். இதில் மாநில அரசு தருவது 7.50 லட்சம் ரூபாய். ஆனால் இதற்குப் பெயர் மட்டும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஆகும்.

இரண்டு மாபெரும் பேரிடர்களை சந்தித்தது தமிழ்நாடு. ரூ.37 ஆயிரம் கோடி நிதி கேட்டோம். இதுவரை வழங்கப்படவில்லை. ‘காலில் முள் குத்தினால் கை உடனே எடுக்கும்’ என்று சொன்ன பிரதமர், ஏன் எடுக்க வரவில்லை? காலே உடைந்து கிடக்கிறதே தமிழ்நாட்டில். ‘நாடு என்பது மனித உடல்தான்’ என்றால் பிரதமருக்கு தமிழ்நாட்டு மக்கள் வெள்ளத்தில் மிதந்தபோது ஏன் துடிக்கவில்லை? உடனே ஏன் வரவில்லை?

Also Read: "மாநில உரிமைகளுக்காக அப்போது கர்ஜித்த மோடி, இப்போது மாநிலங்களை சிதைக்கிறார்" - முரசொலி விமர்சனம் !