murasoli thalayangam
UCC : “இடஒதுக்கீடு எனப்படும் சமூகநீதிக்கே பாஜகவினர் வேட்டு வைப்பார்கள்...” - முரசொலி விமர்சனம்!
முதல் தவறை செய்த உத்தரகாண்ட் !
பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவந்ததன் மூலமாக இந்தியாவில் முதல் தவறுக்குப் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது உத்தரகாண்ட் மாநிலம். இவர்களைப் பின்பற்றி ராஜஸ்தான் மாநிலமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தப் போவதாகச் சொல்லி இருக்கிறது.
பா.ஜ.க. விதைக்க விரும்பும் நச்சு விதையை உத்தரகாண்ட் முதலில் விதைத்து விட்டது. இதன் விளைவுகள் எப்படி இருக்கப் போகிறதோ?
பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகளை உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. வேற்றுமைகள் எவ்வளவு இருந்தாலும் ஒற்றுமையுடன் அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள். இதில் வேற்றுமையை விதைக்கும் காரியத்தை ஆர்.எஸ்.எஸ்., ஜனசங், பா.ஜ.க. போன்ற அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகின்றன. மதத்தை அரசியலுக்கு இவை பயன்படுத்தி வருகின்றன.
தங்களது அரசியல் லாபத்தை, மக்களது மத உணர்வுகளைத் தூண்டுவதன் மூலமாக அடைய முடியுமா என்று பார்க்கிறது பா.ஜ.க. இவர்களது அரசியல் இலக்கு, சிறுபான்மைச் சமூகத்தினர். அவர்களைக் கொச்சைப்படுத்தி அதன் மூலமாக பெரும்பான்மையினரை ஏமாற்றுவதே அவர்களது தந்திரம் ஆகும். பெரும்பான்மை மக்கள் அதற்குப் பலியாவது இல்லை. இருந்தாலும் பா.ஜ.க. அதனை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது.
பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது -
குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவது -
பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவது -
காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை ரத்து செய்வது - போன்றவை பா.ஜ.க.வினரின் வேலைத் திட்டங்கள் ஆகும்.
இவைகுறித்த எந்த விமர்சனத்தையும் பா.ஜ.க. ஏற்றுக் கொள்வது இல்லை. காஷ்மீர் தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்து 370 சிறப்புத் தகுதியை ரத்து செய்து விட்டார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதே இடத்தில் ராமர் கோவில் எழுந்து விட்டது. 'எப்போது வேண்டுமானாலும் குடியுரிமைச் சட்டம் வரலாம்' என்று சொல்லி வருகிறார்கள். பொது சிவில் சட்டத்தை உத்தரகாண்ட் நிறைவேற்றிக் காட்டி விட்டது.
இந்தியாவில் கிரிமினல் சட்டங்கள் ஒரே மாதிரியாக உள்ளன. பண்பாடு, பழக்க வழக்கங்கள் என்பவை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. எனவே, திருமணம், வாரிசுரிமை உள்ளிட்ட வழக்கங்கள் தங்களின் மதநம்பிக்கையின்படி பின்பற்றும் உரிமையை நமது அரசியல் சட்டம் அளித்துள்ளது. இதனால், சிவில் சட்டங்கள் மதங்களைப் பொறுத்து மாறுகிறது. இந்த நிலையை மாற்றுவது பா.ஜ.க.வின் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. எனவே தான் பொது சிவில் சட்டமானது ஜனநாயக சக்திகளால் எதிர்க்கப்படுகிறது.
21வது சட்ட ஆணையம், பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விரிவான கேள்விகளை முன்வைத்தும், அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டும், அதனடிப்படையில் பொது சிவில் சட்டம் அவசியமானதுமல்ல; விரும்பத்தக்கதும் அல்ல என்று முடிவெடுத்து அறிவித்தது. அதனை மீறித்தான் பொது சிவில் சட்டத்தை உத்தரகாண்ட் அரசு அமல்படுத்தி இருக்கிறது.
பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி 22வது சட்ட ஆணையத்திற்கு தி.மு.க. சார்பில் ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அனுப்பிய கடிதத்தில், “இந்திய மக்கள் பல்வேறு மத, மொழி, இனக் குடும்பமாக, 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற அடிப்படையில் வாழ்ந்து வருகிறார்கள். அவரவர் பழக்கவழக்கங்களை அவரவர் பின்பற்றி வருகிறார்கள். இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை பிரிவு 25-ன்படி குடிமக்கள் அனைவரும் தாங்கள் சார்ந்துள்ள மத வழக்கங்களைப் பின்பற்றவும், பரப்பவும் உரிமை பெற்றவர்களாவர். இத்தகைய வேறுபாடுகள் நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை வலிமையாக்கி உள்ளது.
பா.ஜ.க.வின் ‘ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு பண்பாடு' என்ற கொள்கை சட்ட விரோதம் ஆகும். இந்த நோக்கத்துடன்தான் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச் சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படுத்துவதுடன், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகளை இந்திய சமுதாயத்தில் உருவாக்கும் நிலை ஏற்படும்” - என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்தச் சட்டம் தனிநபர் உரிமையான; எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியள்ள உரிமைகளைப் பறிப்பதற்கும், பிரிவு-29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும்.
அரசமைப்புச் சட்டப் பிரிவு-29, இந்திய நிலப் பரப்பில் வாழும் ஒவ்வொரு குழுவினருக்கும், அவர்களுடைய மொழி, எழுத்து, பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கும் உரிமையை அளித்துள்ளது. அதற்கு இது விரோதமானது.
பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தனிமனித உரிமைகளைப் பறிப்பது ஏற்புடையதல்ல. சிறுபான்மை மக்களை மட்டுமல்ல; இது பட்டியலின மக்களையும் பாதிக்கும். பெரும்பான்மை இந்து மதத்தைச் சார்ந்த பட்டியலின மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள், திருமணம் தொடர்பான சடங்கு சம்பிரதாயங்களையும் இந்தச் சட்டம் அழித்துவிடும்.
பொதுசிவில் சட்டத்தின் தொடர்ச்சி என்பது; சிறுபான்மையினரின் உரிமையைப் பறிப்பதாகவும் - பட்டியல் இன, பழங்குடி மக்களது தனிச்சட்டங்கள் உரிமைகளைப் பறிப்பதாகவும் படிப்படியாகச் செல்லும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட தனி உரிமைச் சட்டங்களை ஒரே நாளில் தூக்கி எறியவும் இது அடிப்படை அமைத்துத் தரும். இடஒதுக்கீடு எனப்படும் சமூகநீதிக்கே ஒரு காலத்தில் இதை வைத்து வேட்டு வைப்பார்கள்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?