murasoli thalayangam
பா.ஜ.கவுக்கு 400 இடங்கள் என்று பொய் சொல்லும் மோடி : புள்ளி விவரங்களுடன் உண்மையை விளக்கும் முரசொலி!
முரசொலி தலையங்கம் (08-02-2024)
400 பா.ஜ.க.வும் – 370 பா.ஜ.க.வும்!
400 இடங்களைக் கைப்பற்றுவோம் என்று நாடாளு மன்றத்தில் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. சொல்லிக் கொள்ளட்டும்!
370 இடங்களை பா.ஜ.க. மட்டும் தனித்து கைப்பற்றும் என்றும் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. சொல்லிக் கொள்ளட்டும்!
இப்படி ஒருவர் சொல்லிக் கொள்வதை யாரும் தடுக்க முடியாது. உண்மையில் வெற்றி பெறப் போகிறவர்கள் யாரும், இப்படி சொல்ல மாட்டார்கள். வென்று காட்டுவார்கள். ஆனால் 400 என்றும் 370 என்றும் அவர் சொல்லிக் கொள்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது.
ஒன்று- இப்படிச் சொல்லி தனது மனதைத் தானே தேற்றிக் கொள்கிறார். இரண்டு –- 400, 370 என்று சொல்லி பா.ஜ.க. மீது ஒரு பொய்யான பிம்பத்தைக் கட்டமைக்கப் பார்க்கிறார்கள். தனது மனதுக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொள்வதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், 400,370 என்பது மாயப் பிம்பம் என்பதை அம்பலப்படுத்தியாக வேண்டும். கள நிலவரம் பா.ஜ.க.வுக்குச் சாதகமாக இல்லை என்பதே உண்மையாகும்.
2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தார். அதன் பிறகு அவரது போலியான பிம்பம் கிழியத் தொடங்கிவிட்டதை பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் காட்டிக் கொடுத்துவிட்டன.
2019 ஆம் ஆண்டில்..
* ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி.
* ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி.
* மகாராஷ்டிராவில் ஆட்சிக் கலைப்பு, சிவசேனா உடைப்பு என்று கூட்டணி ஆட்சியில் இருக்கிறது பா.ஜ.க.
2020 ஆம் ஆண்டில்..
* டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலில் தோல்வி.
* பீகாரில் பா.ஜ.க. கூட்டணியை நிதிஷ் முறித்து, ஆர்.ஜே.டி.யுடன் ஆட்சியை அமைத்தார். பின்னர் அவர்களை விட்டு விலகி மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது.
2021 ஆம் ஆண்டில்..
* தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி.
* கேரள சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி.
* மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி.
2022 ஆம் ஆண்டில்...
* பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி
* இமாசலப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி
2023 ஆம் ஆண்டில் ...
* கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி.
* தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி.
* மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி.
– இதுதான் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.வின் நிலைமை ஆகும். எதை வைத்துக் கொண்டு 400, 370 என்கிறார் மோடி?
சிக்கிம் - புதுச்சேரி - நாகலாந்து- மேகாலயா – திரிபுரா - ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அங்கு பா.ஜ.க. கட்சி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவானதுதான்.
அருணாசலப்பிரதேசம் – அரியானா - அசாம் - கோவா - உத்தரகாண்ட் - மணிப்பூர் - உத்தரப்பிரதேசம் – குஜராத் -சட்டீஸ்கர் – மத்தியப்பிரதேசம் – ராஜஸ்தான் - ஆகிய மாநிலங்களில் 2019 முதல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வென்றுள்ளது. இதில் உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை மட்டும்தான் பெரிய மாநிலங்கள் ஆகும். மற்றவை அனைத்தும் சிறிய மாநிலங்கள். பிறகு எப்படி 400 என்கிறார் பிரதமர்?
பா.ஜ.க.வின் கோட்டை என்று சொல்லப்படும் உ.பி., ம.பி., குஜராத், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களை மொத்தமாகச் சேர்த்தாலே 160 நாடாளுமன்றத் தொகுதிகள் தான். பிறகு எப்படி 400 என்கிறார் பிரதமர்?
இன்றைக்கு இந்தியாவின் மிக முக்கியமான பெரிய மாநிலங்களை பா.ஜ.க. அல்லாத கட்சிகள்தான் ஆள்கின்றன. தமிழ்நாடு – டெல்லி – பஞ்சாப் – மேற்கு வங்கம் – கர்நாடகா- ஒரிசா - கேரளா – ஆந்திரா – ஆகிய மாநிலங்களை எதிர்க்கட்சிகள்தான் வைத்துள்ளது. பிறகு எப்படி 400 என்கிறார் பிரதமர்? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க.வின் நிலை பரிதாபத்துக்குரியது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
* தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள்
* டெல்லியிலும் பஞ்சாபிலும் ஆம் ஆத்மி
* மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ்
* மகாராஷ்டிராவில் சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸும்
* உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி
* பீகாரில் ஆர்.ஜே.டி.
*காஷ்மீரில் பரூக் அப்துல்லாவும், மெகபூபா முக்தி
* ஜார்கண்டில் முக்தி மோர்ச்சா
ஆகிய பலமான மாநிலக் கட்சிகள் இந்தியாக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இந்த மாநிலங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு 400 இடங்களை எப்படி பிடிக்க முடியும்? காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற அகில இந்தியக் கட்சிகள் இக்கூட்டணிக்குள் உள்ளன.
கடந்த முறை உ.பி., மகாராஷ்டிரா, பீகார், குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய 9 மாநிலங்களில் அதிகம் வாங்கியதால் பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்தது. 234 நாடாளுமன்றத் தொகுதிகளை இந்த 9 மாநிலங்களில் இருந்து பெற்றது பா.ஜ.க. இம்முறை பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களும் கை கொடுக்காது.
மறுபடியும் உ.பி., ம.பி., குஜராத், ராஜஸ்தானுக்குதான் பா.ஜ.க. அடங்கப் போகிறது. உ.பி.யில் சமாஜ்வாடி- – காங்கிரஸ் ஆகிய கட்சிகளை எதிர்கொள்ள வேண்டும். மற்ற மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வலுவாக இருக்கிறது.
இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம் பேர் தான். சட்டீஸ்கரில் 6 லட்சம் வாக்குகள்தான். மத்தியப் பிரதேசத்தில் 35 லட்சம் வாக்குகளை கூடுதலாக பா.ஜ.க. பெற்றுள்ளது. ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் இணைந்து போட்டியிட்டு இருந்தால், இந்த வெற்றியை பா.ஜ.க. பெற்றிருக்க முடியாது.
2022–ல் நடைபெற்ற குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வாங்கிய வாக்குகள் 1,67,07,957 மட்டுமே. பா.ஜ.க.வுக்கு எதிராக நின்றவர்கள் வாங்கிய மொத்த வாக்குகள் 3,23,81,808 ஆகும். ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட்டது. 41 லட்சம் வாக்குகளைப் பெற்றது. 12.92 சதவிகித வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸும் ஆம் ஆத்மியும் இப்போது ஒரே அணியில் இருக்கின்றன.
இவை எதுவும் தெரியாதவர்கள் தான் பிரதமர் சொல்வதற்கு தலையாட்ட முடியும். இது எல்லாம் பிரதமருக்குத் தெரியும். அதனால்தான் நாடாளுமன்றத்தில் ‘இந்தியா’ கூட்டணியைப் பற்றியே அவர் புலம்பிக் கொண்டிருந்தது ஆகும்.
Also Read
-
86,150 மாணவர்களுக்கும்,8615 ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் அன்பில் மகேஸ்
-
திருப்பெரும்புதூரில் ESI மருத்துவமனை அமைக்க அனுமதி - TR.பாலு MP-யின் தொடர் முயற்சிகளுக்கு வெற்றி !
-
"இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை" - அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் !
-
“7 மலைக்குன்றுகள், 200 இயற்கை நீர்ச்சுனைகள் அழிந்து போகும்!” : ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்!
-
கூட்டாட்சி தத்துவத்தை உறுதிசெய்யும் இந்திய அரசியலமைப்பு : முரசொலி தலையங்கம்!