murasoli thalayangam
“கொள்கையை ஊட்டுதலே முதல் வெற்றி... சேலம் வெல்லட்டும்! இந்தியாவுக்குச் சொல்லட்டும்!” - முரசொலி !
சேலம் வெல்லட்டும்! இந்தியாவுக்குச் சொல்லட்டும்!
“திடீரென்று இளைஞரணியைப் புதிதாக உருவாக்க வேண்டிய அவசியம் என்ன?” - என்று தலைவர் கலைஞரிடம் கேள்வி கேட்கப்பட்டது! “கழகத்தில் இளைஞர்கள் அதிகமாகி விட்டார்கள், அதனால்தான்” என்றார் தலைவர் கலைஞர்!
“திடீரென்று இளைஞரணி மாநாட்டை இப்போது நடத்த வேண்டிய அவசியம் என்ன?” என்று இப்போது யாராவது கேட்பார்களேயானால், “கழகத்தில் இளைஞர்கள் அதிகமோ அதிகம் ஆகிவிட்டார்கள்” என்பதுதான் அதற்குச் சரியான பதிலாக இருக்க முடியும்!
எந்த இயக்கத்திலும் இத்தனை இலட்சம் இளைஞர்கள் இல்லை. அதுமட்டுமல்ல; இத்தனை இலட்சம் இளைஞர்களை வழிநடத்தும் இலட்சியத் தலைமையும் எந்த இயக்கத்திலும் இல்லை. இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். கல்லூரிக் காளையர்களாக அப்போது பலரும் சேர்ந்தார்கள். பள்ளிப் பருவத்தில் 14 வயதில் தமிழ்க்கொடி தாங்கி போராட்டக் களத்துக்கு வந்துவிட்ட கலைஞரும் கைகோர்க்க; அறிவியக்கமாகவே திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது.
‘அனுபவம் அற்றவர்களால் அரசியல் களத்தில் என்ன செய்துவிட முடியும்?’ என்று ஏளனப்பார்வை பார்த்தவர்களை, ‘இவர்களைப் போல நாமும் வெல்ல வேண்டுமே’ என்று ஏக்கப் பார்வை பார்க்க வைத்தார் பேரறிஞர் அண்ணா. ‘நான் குள்ளமாக இருக்கலாம். ஆனால் நாங்கள் நடத்த இருக்கும் புரட்சி குள்ளமானதாக இருக்காது’ என்றார் பேரறிஞர் அண்ணா.
அழகிய தமிழ் பேசும் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், போராட்டக்காரர்கள் என அனைவரையும் இணைத்து பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கம், பதினெட்டு ஆண்டுகள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டே இருந்தது. அதுதான் 1967 வெற்றிக் கனியை பறித்துக் கொடுத்தது. ‘சிங்கிள் டீ குடித்துக் கொண்டு தி.மு.க. தொண்டர்கள் வேலை பார்த்தார்கள். அதுதான் வெற்றிக்குக் காரணம்’ என்றார் அந்தத் தேர்தலில் முதலமைச்சர் பதவியைப் பறி கொடுத்த பெரியவர் பக்தவத்சலம். அடுத்தடுத்த வெற்றிக்கும் அதே தொண்டர்கள்தான் காரணகர்த்தாக்கள்.
சினிமா மாயை 1980களில் ஒரு சுழற்சியை உருவாக்கிய போது, இளைஞர்களுக்கு இலட்சியப்பாதையைக் காட்டி உணர்வூட்டினார் தலைவர் கலைஞர். அப்போது அவர் தேர்ந்தெடுத்த சாரதிதான் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். ‘நெருப்பின் பொறிகளே நீங்கள்தான் தேவை’ என்று சொன்ன கலைஞர் ஏந்தியதே தளபதிதான். அவசர நிலைப் பிரகடன நெருக்கடி நெருப்பாற்றில் நீந்தி புடம் போட்ட தங்கமாக வெளியில் வந்திருந்தார் தளபதி. ‘நான் தென்றலைத் தீண்டியது இல்லை, தீயைத் தாண்டி இருக்கிறேன்’ என்ற கலைஞர் சொல்லுக்கு இலக்கணமாக அமைந்திருந்தது தளபதியின் வாழ்க்கை.
உணர்வெனும் உருக்கை உருக்கி உருவாக்கிய இளைஞர் அணிக்கு தளபதியை அமைப்பாளர் ஆக்கிய பிறகு கழகம் பல பாய்ச்சலைக் கண்டது. மாநாடுகள் எங்கும் இளைய தலைகள். வெள்ளுடை அணிந்த இளைய பட்டாளமானது இருவண்ணப் பாசறைக் கூடமாக கழகத்தை மாற்றியது. பேரணியா, பொதுக்கூட்டமா, சிறை நிரப்புதலா, சிலிர்த்துக் கிளம்புதலா? எல்லா இடங்களிலும் இளைஞரணியினர் கைப்பற்றிக் கழகத்தை நிலைநிறுத்தினார்கள். அவர்களே பல்வேறு பொறுப்புகளை அடைந்தார்கள். கழகத்தையும் பொறுப்புகளில் அமர்த்தினார்கள்.
இளைஞரணிச் செயலாளராக இருந்த தளபதி அவர்கள், கழகத் தலைவர் ஆகி, தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் அமர்ந்திருக்கிறார் என்றார் அவரை உருவாக்கிய களம், இளைஞரணி ஆகும்.
காலம், தனக்கான அடுத்த தளபதியை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அவர்தான், இன்றைய இளைஞரணிச் செயலாளர் இனிய உதயம் உதயநிதி அவர்கள். 2019 முதல் நான்கே ஆண்டுகளில் கழகத்தின் அடையாளமாக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அடையாளமாகவே உயர்ந்து நிற்கிறார். ‘வாரிசு’ என்று சொல்லி ஒற்றை வார்த்தைக்குள் சுருக்க நினைத்தது ஒரு கூட்டம். நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு வாரிசாக அவர் கிளம்பி பேச ஆரம்பித்ததும், ‘அவரைச் சீண்டாமல் இருப்பதே சரியான முடிவு’ என்று தமிழின எதிரிகள் வாயைப் பொத்திக் கொண்டார்கள்.
கொள்கையைக் காக்கும் சமரில் சளையாத போராளியாக வலம் வந்த காரணத்தால்தான் அவர் இன்று அகில இந்தியப் புகழையும் அடைந்து உயர்ந்து நிற்கிறார். ‘இரண்டாவது மாநாடு’ என்பது வெறும் வரிசையாக இல்லாமல், ‘மாநில உரிமை மீட்பு மாநாடாக’ இதனை அடையாளப்படுத்தியதில்தான் இளைஞரணிச் செயலாளரின் வெற்றி அமைந்துள்ளது. ‘இது இந்தியாவே எதிர்பார்க்கும் மாநாடு’ என்று கழகத் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்ன சொல் என்பது நூறு விழுக்காடு உண்மையாகும்.
இலட்சக்கணக்கான இளைய பட்டாளத்தை மாநில சுயாட்சிக்காகவும், இந்தியக் கூட்டாட்சிக்காகவும் சேலத்தில் கொண்டு வந்து நிறுத்துவதன் மூலமாக, இன்று நாம் அடைய வேண்டிய கொள்கை என்ன என்பதை தலைப்பிலேயே சொல்லித் தந்துவிட்டார் இளைஞரணிச் செயலாளர். கொள்கையை ஊட்டுதலே முதல் வெற்றி. அதற்காகத்தான் சேலம் மாநாடு. நாடாளுமன்றத் தேர்தலை நாம் எந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதும் இந்த தலைப்பிலேயே இருக்கிறது.
சேலம் வெல்லட்டும்! இந்தியாவுக்குச் சொல்லட்டும்!
- முரசொலி தலையங்கம்
20.01.2024
Also Read
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!