murasoli thalayangam
'முத்தமிழறிஞர் பதிப்பகம்' : அறிவியக்கத்தின் தொடர்ச்சி என்பதை உணர்த்திய உதயநிதி.. முரசொலி !
முத்தமிழறிஞரின் பேரால்....!
சென்னை புத்தகக் கண்காட்சியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குப் பதிலாகத் திறந்து வைத்து உரையாற்றிய மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ‘ஒரு பதிப்பாளராகவும் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்’ என்று சொன்னார்கள். ஆம்! ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’ என்று முத்தமிழறிஞரின் பெயரால் புதிய பதிப்பகத்தை உருவாக்கி இருக்கிறார் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
திராவிட இயக்கம் என்பது படைப்பாளிகள் இயக்கம். அந்த படைப்பாளிகள் இயக்கத்தின் தொடர்ச்சிதான் தான் என்பதை மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மெய்ப்பித்துக் காட்டி இருக்கிறார்.
திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம். அத்தகைய அறிவியக்கத்தின் தொடர்ச்சிதான் தான் என்பதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உலகுக்கு உணர்த்தி இருக்கிறார். கழகம் முதன் முதலில் ஆட்சிக்கு வந்தபோது பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தது. முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா
உள்பட அந்த அமைச்சரவையில் இருந்த ஐந்து பேர் பத்திரிகையாளர்கள் என்பது இந்த இயக்கத்துக்கு மட்டுமல்ல, பத்திரிகை உலகத்துக்கும் பெருமை ஆகும். திராவிடநாடும், காஞ்சியும் அண்ணா நடத்தியவை. மன்றமும் மக்களாட்சியும் நாவலர் நடத்தியவை. முரசொலியும் முத்தாரமும் மறவன் மடலும் கலைஞர் நடத்தியவை. அன்னை இதழை நடத்தியவர் சத்தியவாணி முத்து. தென்னகம் நடத்தியவர் மதியழகன். அந்த வகையில் திராவிட பத்திரிகையாளர் அமைச்சரவையாகவே அது அமைந்திருந்தது.
தமிழ்நாட்டு இதழியல் வளர்ச்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் பங்களிப்பு இது. இதழ்களை உருவாக்கினார்கள். எழுத்தாளர்கள், படைப்பாளிகளை உருவாக்கினார்கள். இதன் மூலமாக அறிவாளர்களை தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கினார்கள். இவை அரசியல் இதழ்களாக மட்டுமல்ல, இலக்கிய இதழ்களாகவும் இருந்தன. அரசியல் கட்டுரைகளோடு சேர்ந்து கதை, புதினம், கவிதை, நாடகங்களையும் வெளியிட்டன. தமிழ் இதழியல் மட்டுமல்ல, தமிழ் இலக்கியமும் வளர்ந்தது. புதிய படைப்புகளும் படைப்பாளிகளும் கிடைத்தார்கள்.
புதிய கருத்துக்கள் சொல்லப்பட்டன. சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, வடவர் ஆதிக்கம், இந்தி எதிர்ப்பு, பெண்ணின் உரிமைகள், இனப்பற்று, மொழிப்பற்று ஆகியவை அதிகமாக இந்த இதழ்களில் பேசப்பட்டன. இதேபோல் சிறுசிறு புத்தகங்களை வெளியிட்டு மக்களிடம் பரப்பினார்கள். தந்தை பெரியார் போட்டுத் தந்த பாதையாகும் இது. தொடக்கக் காலத்தில் தி.மு.க. கொள்கை முழக்கப் புத்தகங்களை திராவிடப் பண்ணை, அறிவுப் பண்ணை, திராவிடன் பதிப்பகம், செல்வ நிலையம், முன்னேற்றப் பண்ணை, புகழ் நிலையம், பாரி நிலையம், தலைவன் பதிப்பகம், அஞ்சுகம் பதிப்பகம், தூயமலர் நிலையம் --– உள்ளிட்ட பதிப்பகங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டன.என்னைக் கவர்ந்த புத்தகங்கள், வீட்டிற்கோர் புத்தகச்சாலை, சொல்வதெல்லாம் செய்தல் சுதந்திரம், ஆரிய மாயை, திராவிடர் நிலை, வாழ்க திராவிடம், நிலையும் நினைப்பும், கருஞ்சட்டைப் படை ஒழிய வேண்டுமா?, நாடகக் கலையின்
முன்னேற்றம், கோவையில் கருணாநிதி உரை, இனமுழக்கம், கோவில்பட்டி தலைமை உரை, பலிபீடம் நோக்கி, அறப்போர் -– ஆகியவை தொடக்க காலத்தில் பரபரப்பாக விற்ற புத்தகங்கள்.
திராவிட இயக்கத்தவர் நடத்திய இதழ்களும், வெளியிட்ட புத்தகங்களும்தான் இந்த இயக்கத்தை நோக்கி தமிழ்நாட்டையே பார்க்க வைத்தது. அதன் தொடர்ச்சியை மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மீண்டும் உருவாக்கிக் காட்டி இருக்கிறார். ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’ ஒன்பது நூல்களை வெளியிட்டு இருக்கிறது.
2023 பொங்கல் முதல் கலைஞரின் மூத்த பிள்ளையான ‘முரசொலி’யின் கடைசிப் பக்கம் பாசறைப் பகுதியாக உருவானது. நாள்தோறும் ஒரு கட்டுரை வெளியானது. அவை புத்தகங்களாக ஆகி இருக்கின்றன.
* வழக்கறிஞர் அ. அருள்மொழி ‘திராவிடப் போராளிகள்’ என்ற தலைப்பின் பெண் போராளிகளை வரிசைப்படுத்தி வழங்கினார்.
* ‘இடம்- – பொருள் –- கலைஞர்’ என்ற தலைப்பில் காலத்தால் அழியாத கலைஞரின் உட்கட்டமைப்புகள் தீட்டப்பட்டது.
* சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான எழிலன் நாகநாதன், ‘டாக்டர்’
கலைஞர் என்ற தலைப்பின் கீழ் கலைஞர் உருவாக்கிய மருத்துவக் கட்டமைப்பு குறித்து எடுத்துச் சொன்னார்.
* பேராசிரியர் சுப.குணராஜன் ‘திராவிட சினிமா’ தீட்டினார்.
* ‘திராவிட மாடல் அரசு’ பத்திரிகையாளர் ந.வினோத் குமாரால் எழுதப்பட்டது.
* கலைஞரும் நானும் என்ற தலைப்பில் குறிப்பிடத்தக்க மனிதர்கள் தங்களது நட்பை வெளிப்படுத்தினார்கள். நீரை,மகேந்திரன் தொகுத்து எழுதியவை.
* ‘உடன்பிறப்பே’ என்பது தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு
உடன்பிறப்புகளின் வரலாற்றைச் சொல்வதாக அமைந்திருந்தது. நீரை.மகேந்திரன், ந.வினோத்குமார், விஷ்ணுராஜ், கெளதம் ஆகியோரால் எழுதப்பட்டவை.
* பத்திரிகையாளர் கோவி லெனின் எழுதி கி.சொக்கலிங்கத்தின் ஓவியத்தால் இடம் பெற்ற ‘திராவிடத்தால் வாழ்கிறோம்’ என்ற படக்கதை தினந்தோறும் ‘முரசொலி’ கடைசிப் பக்கத்தில் வெளியாகி வருகிறது. இதன் இரண்டு தொகுப்புகள்.
இவை அனைத்தையும் ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’ சார்பில் புத்தகங்களாகக் கொண்டு வந்துள்ளார் இளைஞரணிச் செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்- – கழகத் தலைவர் அவர்கள் சனவரி 2 அன்று இந்த புத்தகங்களை வெளியிட்டார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் நின்று நிலைபெறக் காரணம், அதன் அடிப்படைக் கொள்கைகளே. அரசியல் இயக்கமாக – - தேர்தல் களத்தில் பங்கெடுக்கும் இயக்கமாகவே இருந்தாலும் தனது அடிப்படைக் கொள்கையை வென்றெடுக்கவே தேர்தல் அரசியல் என்பதில் உறுதியாக இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். அதுதான் 75 ஆண்டுகளாக கழகத்தைக் காத்து வருகிறது. தமிழின எதிரிகளுக்கு கழகத்தைப் பார்த்து கோபமும் பொறாமையும் ஏற்படுவதற்குக் காரணமும் இந்தக் கொள்கை உரம்தான்.
காலங்கள் தோறும் இயக்கம் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. புதிய சொல் -– புதிய பாணி -– புதிய வேகம் -– புதிய பாதையில் நடைபெறும் இயக்கமாக இதனை தலைவர் கலைஞரும் –- அவரது வழித்தடத்தில் செயல்படும் மாண்புமிகு ‘திராவிட நாயகன்’ -– தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் செயல்பட்டு வருகிறார்கள். இளைஞரணிக்கான பாசறைக் கூட்டங்கள் வாயிலாக திராவிடத்தின் தொடர்ச்சியை தொய்வில்லாமல் கொண்டு செலுத்தி வருகிறார் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
இணைய தள உலகம் பரபரப்பைக் காட்டினாலும் புத்தக உலகம் என்பது என்றென்றும் இணையற்ற உலகம் என்பதால் ‘முத்தமிழறிஞர் பேரால் பதிப்பகம் தொடங்கி –- அறிவாயுதங்களை கூர்தீட்டி வரும் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் செயலை போற்றுவோம். வாழ்த்துவோம். பாராட்டுவோம்.
அறிவுத் தீ பரவட்டும்! அறியாமை இருள் அகலட்டும்!
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!