murasoli thalayangam
“தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக மாற்றும் மோடி - இனி நியாயமாகச் செயல்படுமா?” : முரசொலி தலையங்கம் கேள்வி!
தேர்தல் ஆணையம் நியாயமாகச் செயல்படுமா?
தன்னிச்சையாக இயங்க வேண்டிய அனைத்து அமைப்புகளையும் தன்வசப்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வருவதுதான் பா.ஜ.க.வின் பாணியாகும். அதுதான் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்திலும் நடந்திருக்கிறது. சுதந்திரமாக செயல்படவேண்டிய தேர்தல் ஆணையம் பற்றி உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, தன் வசதிக்கேற்ப சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. தேர்தல் ஆணையம் என்பது ஜனநாயகத்தின் முகமாக இருக்க வேண்டியது ஆகும். அந்த தேர்தல் ஆணையத்தை தனது வசதிக்கு ஏற்ப வளைத்து விட்டது பா.ஜ.க. அரசு.
“பிரதமர் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் தேர்தல் ஆணையக் குழு உறுப்பினர்களை நியமிக்கும் தற்போதைய அமைப்பு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை” என்று 2012 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியவர் அப்போதைய பா.ஜ.க. தலைவர் அத்வானி.
அதைத்தான் இன்று சட்டமாகவே செய்துவிட்டது பா.ஜ.க. பஞ்சாப் மாநில அதிகாரியான அருண் கோயல் என்பவர் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாள் திடீரென பதவி விலகினார். மறுநாளே இவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதாவது தேர்தல் ஆணைய ராக இவரை நியமிப்பதற்காகவே பதவி விலக வைத்துள்ளார்கள். அருண் கோயல் நியமனத்துக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தாக்கல் செய்தார்கள்.
இது போன்ற முக்கியமான பணியிடத்துக்கான தேர்வை ‘கொலிஜியம்' போன்ற அமைப்பு தான் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். தலைமைத் தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்களின் நியமனமானது சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்பதே உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கின் கோரிக்கை ஆகும்.
இந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வு தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர், மற்றும் தேர்தல் ஆணையர்களை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பதை கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதியரசர் கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இத்தீர்ப்பை அளித்தது.
* பிரதமர்
* மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
* உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகிய மூவர் அடங்கிய குழு தான் தலைமைத் தேர்தல் ஆணையரையும், தேர்தல் ஆணையர்களையும் தேர்வு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. “பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்ய வேண்டும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்றால், தனிப் பெரும்பான்மையுள்ள எதிர்க்கட்சியின் தலைவர், இந்த குழுவில் இடம்பெற வேண்டும். தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக நாடாளு மன்றத்தில் சட்டம் இயற்றும் வரை இந்த நடைமுறை தொடரும்.
ஜனநாயகத்தில் தேர்தல் எந்தவித சந்தேகமும் இன்றி நியாயமாக நடைபெற வேண்டும். புனிதத்தன்மை காக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும். அரசியல் சாசன அமைப்புக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் சட்டப்படி செயல்பட வேண்டும். நியாயமற்ற முறையில் செயல்பட முடியாது.
நியாயமான தேர்தலை தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்ய முடியவில்லை என்றால், ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் சட்ட விதிகளின் கீழ் அளிக்கப்பட்ட உத்தரவாதங்கள் சிதைந்து போகும். அரசியல் சாசனத்தின் 324-வது பிரிவில், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் நியமனத்துக்கு சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தச் சட்டத்தையும் நாடாளுமன்றம் நிறைவேற்ற வில்லை” என்று அரசியல் சாசன அமர்வு கூறியது.
உச்சநீதிமன்றத்தின் மீது மரியாதை இல்லாத பா.ஜ.க. அரசு என்ன செய்தது என்றால், கடந்த 21 ஆம் தேதி அன்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டார்கள். அதன்படி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்பதற்குப் பதிலாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் என்று மாற்றி விட்டார்கள். இதன் படி பார்த்தால் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் மூவர் குழுவில் இருவர், ஆளும்கட்சியைச் சேர்ந்தவராக இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள். அதாவது தங்கள் வசதிக்கு ஏற்ப சட்டத்தை வளைத்துக் கொண்டார்கள்.
தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா -2023 என்பது மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப் பட்டது. டிசம்பர் 12 அன்று மாநிலங்களவையில் நிறை வேறியது. மக்களவையில் கடந்த 21 ஆம் தேதி வைக்கப்பட்டது. மக்களவை உறுப்பினர்களில் 100க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து விட்டதால் அது பா.ஜ.க.வுக்கு வசதியாகப் போய்விட்டது. எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. சட்ட அமைச்சர் அர்ஜூன் மேவால் பேசினார். மசோதா நிறைவேறிவிட்டது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு அமைச்சரை நியமிப்பதன் மூலமாக தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக ஆக்க முயற்சித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இது ஜனநாயகத்துக்கு ஆபத்தான முடிவு என்பதை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் சொல்லி இருக்கிறார்.
“இந்த முறையில்தான் தேர்தல் ஆணையர்களை நியமிக்கப் போகிறார்கள் என்றால், அந்தத் திருத்தச் சட்டத்தால் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் கடுமையாகப் பாதிக்கப்படும். அதை நீக்கவில்லை என்றால் அது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறும். எனவே உச்சநீதிமன்றம் இந்தச் சட்டத்திருத்தத்தை தன்னிச்சையானது என்று அறிவித்து ரத்து செய்யவேண்டும்," என்று மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசி இருக்கிறார். இதனை உச்சநீதிமன்றம் செய்ய வேண்டும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!