murasoli thalayangam
மிமிக்ரி செய்தது மட்டும்தான் உங்களுக்கு அவமானமாக தெரிகிறதா? : ஒன்றிய அரசை வெளுத்து வாங்கிய முரசொலி!
முரசொலி தலையங்கம் (25-12-2023)
எது அவமானம்?
இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தில் இருந்து ஒரே நேரத்தில் 146 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது ஜனநாயகத்துக்கு அவமானம் இல்லையாம். மாநிலங்களவை சபாநாயகர் ஜெகதீப் தன்கரைப் போல மிமிக்ரி செய்து விட்டார்களாம். ஏதோ இந்தியாவே அவமானப்பட்டதைப் போல பிரதமரும், குடியரசுத் தலைவரும் குசலம் விசாரிப்பதும், மக்களவை சபாநாயகரும் - மாநிலங்களவை சபாநாயகரும் சந்தித்துக் கொள்வதும் குணச்சித்திரக் காட்சிகளாக அமைந்திருக்கின்றன.
நாடாளுமன்றத்துக்குள் புகைக் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதுவே விஷ வாயு குண்டாக இருந்திருந்தால் பல உறுப்பினர்களின் நிலைமை என்ன ஆகி இருக்கும் என்றே கணிக்க முடியாது. இது தொடர்பாக பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் ஒற்றைக் கோரிக்கை. அதைக் கூட ஆளும் பா.ஜ.க. ஏற்கவில்லை. புகைக்குண்டு வீசப்பட்ட நாடாளு மன்றத்துக்கு வரவில்லை பிரதமர். பதிலளிக்கவில்லை உள்துறை அமைச்சர்.
உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமை ஆகும். அதைக் கூட பயன்படுத்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை சபாநாயகர் ஜெகதீப் தன்கரும் அனுமதிக்கவில்லை. தொடர்ச்சியான முழக்கத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினார்கள். எனவே,கொத்துக் கொத்தாக உறுப்பினர்களை இடை நீக்கம் செய்யத் தொடங்கினார்கள் பேரவைத் தலைவர்கள். 146 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இப்படி இடை நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களில் சிலர் நாடாளுமன்றத்தின் நுழைவாயில் படியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதுவும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜனநாயக உரிமை ஆகும். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினரான கல்யாண் பானர்ஜி, துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை சபாநாயகருமான தன்கரைப் போல மிமிக்ரி செய்தாராம். இது தன்கர் கவனத்துக்குச் சென்றது. அவர் மாநிலங்களவையில் தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
உடனே துணை ஜனாதிபதியை தொலைபேசியில் அழைத்து பேசினாராம் பிரதமர் நரேந்திரமோடி. “பிரதமர் மோடி என்னை போனில் அழைத்து பேசினார். மாண்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் செய்த கேவலமான செயல்கள் குறித்து வேதனையை வெளிப்படுத்தினார். அதுவும் புனிதமான நாடாளுமன்ற வளாகத்தில் நடப்பது வருத்தம் அளிப்பதாகச் சொன்னார். 20 ஆண்டுகளாக தான் இது போன்ற அவமானங்களை அனுபவித்து வருவதாகவும் சொன்னார். துணை ஜனாதிபதிக்கே இப்படி நடக்கலாமா என்றும் சொன்னார்” என்று பதிவிட்டுள்ளார் துணை ஜனாதிபதி.
“மிமிக்ரி ஒன்றும் தடை செய்யப்பட்டதல்ல. இதன் மூலமாக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திசை திருப்பப் பார்க்கிறார்கள். துணை ஜனாதிபதி உள்பட யாரையும் கேலி செய்யும் எண்ணம் எனக்கு இல்லை” என்று சொல்லிவிட்டார் மிமிக்ரி செய்த எம்.பி. கல்யாண் பானர்ஜி. அதன் பிறகும் இதை பெரிது ஆக்கினார்கள்.
புகைக் குண்டு வீசியவருக்கு நாடாளுமன்ற நுழைவு அனுமதிச் சீட்டு கொடுத்தவர் பா.ஜ.க. எம்.பி. அதனைத் திசை திருப்பவே இதைச் செய்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக 20 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திரமோடி என்ன அவமானங்களைச் சந்தித்து வருகிறார்? குஜராத் படுகொலையைச் சொல்கிறாரா? அது யாருக்கு, யாரால் இழைக்கப்பட்ட அவமானம்? இந்திய நாட்டின் பன்முகத் தன்மைக்கும், மனித உரிமைகளுக்கும், மனசாட்சிக்கும் இழைக்கப்பட்ட துரோகத்துக்கு யார் காரணம்? பொறுப்பேற்க வேண்டியவர் யார்? அது என்ன அவதூறு குற்றச்சாட்டா? அது நடக்க யார் காரணம்? யாருடைய ஆட்சியில் நடந்தது? யார் கொடுத்த துணிச்சலில் நடந்தது? யார் இதுவரை தண்டிக்கப்பட்டுள்ளார்கள்? பொத்தாம் பொதுவாக, ‘20 ஆண்டுகளாக நான் அவமானங்களைச் சந்தித்து வருகிறேன்’ என்பதன் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி யாரிடம் கழிவிரக்கம் தேட விரும்புகிறார்?
மக்களவையில் எழுந்து நின்று தன்கருக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து இருக்கிறார்கள் பா.ஜ.க. எம்.பி.கள். இது அடுத்தடுத்து நடந்த நாடகங்கள் ஆகும்.
2018 ஆம் ஆண்டு நடந்ததை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ளார். ராகுல் காந்தி சபையில் பேசிவிட்டு, பிரதமரின் இருக்கைக்குச் சென்று அவரைக் கட்டிப் பிடித்தார். அதன்பிறகு பேசிய பிரதமர் அவர்கள், ராகுல்காந்தியைப் போல மிமிக்ரி செய்ததை சுட்டிக் காட்டி இருந்தார். ‘யார் யாரை கிண்டல் செய்து நடித்துக் காண்பிக்கின்றனர். அதுவும் மக்களவைக்குள் நடித்துக் காட்டியதை நினைவுகூறுங்கள்’ என்று சொல்லி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் ஜெயராம் ரமேஷ். முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியை, பிரதமர் மோடி மிமிக்ரி செய்யும் வீடியோவையும் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டு இருக்கிறார்.
ராகுல்காந்தியை ‘பப்பு’ என்று சொல்லி அதை சைகை மூலம் மிமிக்ரி செய்து கிண்டலடித்தார் பிரதமர் நரேந்திரமோடி. அதனை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு விமர்சித்துள்ளது. “பிரதமர் மோடி கூட எதிர்க்கட்சித் தலைவர்களை மிமிக்ரி செய்துள்ளார். அவர் அவ்வாறு செய்வதை எல்லோரும் சீரியஸாக எடுக்காமல் நகைச்சுவையாகவே எடுத்துக் கொண்டனர். இப்போது என் விஷயத்தில் சீரியஸாக எடுத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல” என்றும் கல்யாண் பானர்ஜி சொல்லி இருக்கிறார்.
இந்திய நாட்டின் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து புகைக் குண்டு வீசப்பட்டது கேவலமில்லையா? இந்திய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பது அவமான மில்லையா? ஒட்டுமொத்தமாக நாடாளு மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இழைக்கப்பட்ட உரிமை மீறல் அல்லவா இது? பா.ஜ.க. உறுப்பினர்களுக்கும் சேர்த்தே தான் பா.ஜ.க. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லையா? இதைக் கேள்வி கேட்டால், அனைவரையும் டிஸ்மிஸ் செய்து விடுவோம் என்பது தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு கடைப்பிடிக்கும் நெறிமுறையா? அனைத்து உறுப்பினர்களின் பாதுகாப்பும், ஒரே ஒரு உறுப்பினரின் மிமிக்ரியும் ஒன்றா?
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!