murasoli thalayangam
“பிரதமருக்குத் தெரிந்தது, கிண்டியில் இருக்கும் ஆளுநருக்குத் தெரியவில்லை..” - ஆர்.என்.ரவியை சாடிய முரசொலி!
ஒருங்கிணைப்பு இல்லையா?
"எரிகிற வீட்டில் எடுத்தது வரை லாபம்" - என்று தயிழில் இருக்கும் பழமொழிக்குப் பொருத்தமானவர் ஒருவர் உண்டென்றால் அது தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிதான். இயற்கைப் பேரிடர் காலத்திலும் தமிழ்நாடு அரசுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி வருகிறார். தொல்லை தரும் வகையில் செயல்பட்டு வருகிறார். 4 ஆம் தேதி புயல் -மழை ஏற்பட்டது என்றால் 7-8 ஆம் தேதிக்குள் இயல்பு வாழ்க்கையை முழுமையாக வழங்கி விட்டோம். வீட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் என்பதை நிவாரணத் தொகையாக முதலமைச்சர் அவர்கள் அறிவித்து, அதனையும் நான்கு மாவட்ட மக்கள் பெறக் தொடங்கிவிட்டார்கள். இவை அனைத்தும் தி.மு.க. அரசுக்கும், குறிப்பாக முதலமைச்சர் அவர்களுக்கும் மிகப்பெரிய நற்பெயரை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இதனை தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பொறாமை, வஞ்சகக் குணம் கொண்ட அவர், 19 ஆம் தேதி ராஜ்பவனுக்கு ஒன்றிய பாதுகாப்புப் படையின் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். எவ்வளவு வேகமாக ஆளுநர் செயல்பட்டுள்ளார் பார்த்தீர்களா?
டிசம்பர் 4 ஆம் தேதி அடித்த புயலுக்கான ஆலோசனைக் கூட்டத்தை டிசம்பர் 19ஆம் தேதி நடத்தி இருக்கிறார். ஆளுநர் ரவிக்காக, புயல் சென்னையில் காத்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? மக்கள் மத்தியில் நற்பெயர் எடுத்துள்ள தமிழ்நாடு அரசின் பெயரைக் கெடுக்கும் வாய்ப்பாக இந்தக் கூட்டத்தை ஆளுநர் நடத்தி இருக்கிறார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விடுத்துள்ள பத்திரிக்கைச் செய்தியானது, கெட்ட எண்ணம் கொண்டதாக அமைந்திருக்கிறது.
போதிய ஒருங்கிணைப்பு இல்லை - என்று யாரோ சொன்னதாக அந்த பத்திரிக்கைச் செய்தி சொல்கிறது. தலைநகரைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பைப் போல தென் மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்ட நாளன்று - ஒன்றிய பாதுகாப்புப் படையினரை அழைத்து இப்படி ஒரு கூட்டத்தைக் கூட்டி குழப்பத்தை ஏற்படுத்திய ஆளுநர், அந்த பாதுகாப்புப் படையினரைச் செயல்பட விடாமல் சதி செய்திருக்கிறார். தான் ஏதோ மாநிலத்தின் அதிபரைப் போல ஆர்.என்.ரவி நினைத்துக் கொள்கிறார்.
14.9.2023 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் இக்கூட்டம் நடைபெற்றது.
வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் இது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் உயரதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். அவர்களோடு இந்திய ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். விமானப்படை, கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். கடலோரக் காவல் படை அதிகாரிகளும் வந்திருந்தார்கள். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும், ஒன்றிய நீர்வள ஆணைய அதிகாரிகளும், தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். இதுதான் ஒருங்கிணைப்பு என்பது. இந்தக் கூட்டம் நடந்த தேதி 14.9.2823. அதாவது கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதியே ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தி விட்டது தமிழ்நாடு அரசு.
19.9.2023 அன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நடந்த தேதியையும் கவனித்தால்தான் எவ்வளவு முன்கூட்டியே திட்டயிட்டுள்ளார்கள் என்பது தெரியும். இப்போது பெய்த மழை என்பது வானிலை ஆய்வு மையத்தாலேயே கணிக்க முடியாததாக. இருந்தது. வரலாற்றில் இதுவரை இல்லை என்று சொல்லத்தக்க வகையில் மாபெரும் இயற்கைப் பேரிடரைச் சந்தித்தது தமிழ்நாடு.
19.9.2023 அன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நடந்த தேதியையும் கவனித்தால்தான் எவ்வளவு முன்கூட்டியே திட்டமிட்டுள்ளார்கள் என்பது தெரியும். இப்போது பெய்த மழை என்பது வானிலை ஆய்வு மையத்தாலேயே கணிக்க முடியாததாக இருந்தது. வரலாற்றில் இதுவரை இல்லை என்று சொல்லத்தக்க வகையில் மாபெரும் இயற்கைப் பேரிடரைச் சந்தித்தது தமிழ்நாடு.
புயல் - மழைக்கு முன்பு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மழை, வெள்ளத்துக்குப் பிறகு அரசு எடுத்த நிவாரண நடவடிக்கைகளும் சேர்ந்து மாபெரும் சேதத்தைத் தவிர்த்தது. இல்லாவிட்டால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டு இருக்கும். ஒருங்கிணைப்பு இல்லாவிட்டால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்குமே? ஒருங்கிணைப்பு இல்லாவிட்டால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள்- கூட ஏற்பட்டு இருக்குமே? ஒருங்கிணைந்து செயல்பட்டதால்தானே ஒன்றியக் குழுவும் தமிழ்நாடு அரசைப் பாராட்டியது!
"அதிகப்படியான தண்ணீர் தேங்கக் காரணம், கடல் மட்டம் உயர்ந்து தண்ணீரை உள்ளே விடாமல் எதிர்த்தது என்பதை நான் அறிவேன்" என்று மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களே, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களிடம் சொன்னார்களே. டெல்லியில் இருந்த பிரதமருக்குத் தெரிந்தது, கிண்டியில் இருக்கும் ஆளுநருக்குத் தெரியவில்லை. தென் மாவட்டக் களத்தில் 18 அமைச்சர்கள் - 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் - 18 ஆயிரம் அரசு ஊழியர்கள்-தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையின் வீரர்கள், படகுகள், உபகரணங்கள் -375 வீரர்கள் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்கள்- 275 வீரர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்கள் - கூடுதவாக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையில் பயிற்சி பெற்ற 238 பேர் - இராணுவ வீரர்கள் 168 பேர் இருந்தார்களே; இவர்களை அனுப்பி வைத்ததும் முதலமைச்சர்தானே? முதலமைச்சருக்குத் தெரியாமல் "அரூப உருவம்' அனுப்பியதாக நினைக்கிறாரா ஆளுநர்?
விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மற்றம் கடலோரக் காவல் படையின் 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. யார் சொல்லி வந்தார்கள் இவர்கள்? முதலமைச்சர் சொல்லித்தானே? மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குக் கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவைப்படுவதால், அதிகபட்ச அளவில் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதி, அவரும் அனுப்பி வைத்தாரே? அதையாவது கிண்டியார் அறிவாரா? உச்சநீதிமன்றம் இவரது உச்சந்தலையில் பலமுறை கொட்டிய பிறகும் அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. இவ்வளவு நல்லெண்ணமும் அக்கறையும் இருந்திருக்குமானால், பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகையை ஒன்றிய அரசிடம் இருந்து வாங்கித் தருவதில் ஆர்.என்.ரவி.ஆர்வம் செலுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு, இயற்கைப் பேரிடர் நேரத்தில் தனது இழிசிந்தனைகளை அரங்கேற்றப் பார்க்கக் கூடாது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?