murasoli thalayangam
இந்தியாவைக் காப்பாற்ற வந்திருக்கும் ஆபத்பாந்தவன் ‘இந்தியா’ கூட்டணி : முரசொலி தலையங்கம்!
முரசொலி தலையங்கம் (22-12-2023)
டெல்லியில் ‘இந்தியா’
இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து பா.ஜ.க. இந்தியாவைக் காப்பாற்ற வந்திருக்கும் ஆபத்பாந்தவன் ‘இந்தியா’ கூட்டணி. இந்தக் கூட்டணியின் வெற்றியில்தான் ‘இந்தியா’வின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது.
2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., 2019 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஒட்டுமொத்த இந்தியாவில் நம்மை எதிர்க்க இனி யாரும் இல்லை என்ற மிதப்பில் கெட்ட ஆட்டம் ஆடி வந்தது. ஆனால் அது அடைந்ததோ அதிகமாக தோல்விகளைத்தான்.
கடந்த ஏழு ஆண்டு காலத்தில் பல்வேறு மாநில சட்டசபைத் தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியை அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் தோல்வி, கேரளாவில் தோல்வி, பீகாரில் தோல்வி, மேற்கு வங்கத்தில் தோல்வி, ஜார்கண்ட் மாநிலத்தில் தோல்வி, ஒடிசாவில் தோல்வி, சட்டீஸ்கரிலும் தோல்வி, தெலுங்கானாவில் தோல்வி, ஆந்திராவில் தோல்வி, பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு முறை தோல்வி, டெல்லியில் இரண்டு முறை தோல்வி, ராஜஸ்தானில் தோல்வி - என சட்டமன்றத் தேர்தல்களில் தோற்ற கட்சிதான் பா.ஜ.க.
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த பல்வேறு இடைத் தேர்தல்களில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன. 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அது. உத்தரப்பிரதேச மாநிலம் கோசி தொகுதியை சமாஜ்வாதி கட்சியும், கேரள மாநிலத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியை காங்கிரஸ் கட்சியும், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துப்குரி தொகுதியை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்ரி தொகுதியை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் கைப்பற்றியது. காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகள் ஆகும்.
கடந்த மே மாதம் நடந்த கர்நாடக மாநிலத் தேர்தலில் பா.ஜ.க. தோற்றது. லடாக் கார்கில் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில், ‘இந்தியா’ கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 1 இடத்தை மட்டும் வெற்றி பெற்று பா.ஜ.க. படுதோல்வியடைந்துள்ளது.
இப்போதுதான் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியும் மாபெரும் வெற்றி அல்ல என்பதை பா.ஜ.க. வாங்கிய புள்ளிவிபரங்களே சொல்லும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம் பேர்தான். சட்டீஸ்கரில் 6 லட்சம் வாக்குகள்தான். மத்தியப் பிரதேசத்தில் மட்டும்தான் 35 லட்சம் வாக்குகளை கூடுதலாக பா.ஜ.க. பெற்றுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கும் 2 விழுக்காடு வாக்குகள்தான் வேறுபாடு. சட்டீஸ்கரில் 4 விழுக்காடு, மத்தியப் பிரதேசத்தில் 8 விழுக்காடு வாக்குகள் வேறுபாடு ஆகும். தெலுங்கானாவில் பா.ஜ.க.வை விட 26 விழுக்காடு அதிகமான வாக்குகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. தெலுங்கானாவில் பா.ஜ.க. அடைந்த மாபெரும் தோல்வியை மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் அடைந்துவிடவில்லை என்றே சொல்ல வேண்டும். பா.ஜ.க.வை தெலுங்கானா நிராகரித்திருக்கிறது. மிசோரமில் பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியே பா.ஜ.க.வை நிராகரித்தது. அபரிதமான - மகத்தான வெற்றி என்று சொல்லத் தக்க வாக்குகளை பா.ஜ.க. பெறவில்லை.
பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை ஒருமுகப்படுத்தினால் நிச்சயம் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்பதே முழுமுதல் உண்மை ஆகும். இதற்காகவே ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடந்த ‘இந்தியா’கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் கடந்த 19 ஆம் தேதி அன்று டெல்லியில் நடந்துள்ளது. இக்கூட்டமானது முக்கியமான நகர்வை எட்டி இருக்கிறது. பா.ஜ.க.வை வீழ்த்தும் நோக்கத்தைக் கொண்ட கட்சிகள் அனைத்தும் சேர்ந்து கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி ஐவர் குழுவை அமைத்துள்ளது.
பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் இருந்து இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி வந்துள்ளார்கள். “தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிட்டதைப் போல மாநில அளவில் ‘இந்தியா’ கூட்டணியானது ஒன்றுபட்டுப் போட்டியிட வேண்டும். எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். தொகுதிப் பங்கீடுகளைச் செய்து கொள்ளலாம். இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகள் - ஒரு மாநிலத்தில் சம விகித செல்வாக்குடன் இருந்தால் அந்த மாநிலங்களில் கூட்டணித் தலைமை என இல்லாமல் தொகுதிப் பங்கீடு என்ற வகையில் பங்கீடுகளைச் செய்து கொள்ளலாம். ஒரு கட்சித் தலைமையில் கூட்டணி –தொகுதிப் பங்கீடு ஆகியவை செய்ய முடியாத அளவுக்கு இரண்டு கட்சிகளுக்குள் கொள்கை மோதல் இருக்குமானால் பொது வேட்பாளர் என்பதை அறிவிக்க வேண்டும். எங்கும் எந்தச் சூழலிலும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் அரசியல் இலக்குக்கு எந்தவொரு தொகுதியிலும் இடையூறு ஏற்படக் கூடாது. அதில் கவனமாக இருக்க வேண்டும். நமது அணியில் சேராத – ஆனால் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்க்கும் மற்றக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பா.ஜ.க.வை தனிமைப்படுத்தும் வகையில் - பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை முடிந்தவரை இந்த அணியில் சேர்த்தாக வேண்டும்” என்பதை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். இதற்கான ஒரு வடிவத்தை டெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் எட்டியுள்ளது.
‘மாநில ரீதியாக பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் ‘இந்தியா’ கூட்டணி தீர்வு காணும்’ என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவும் தெளிவுபடுத்தி விட்டார். தொகுதிப் பங்கீட்டை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று மம்தாவும் கோரிக்கை வைத்தார். இதனை கூட்டணித் தலைவர்கள் அனைவரும் ஏற்றுச் செயல்படத் தொடங்கி விட்டார்கள். டெல்லியை அடைந்துள்ளது ‘இந்தியா’ கூட்டணி. இந்தியாவை வெல்லும் ‘இந்தியா’ கூட்டணி.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!