murasoli thalayangam
“திராவிட மாடல் அரசின் தொலைநோக்குத் திட்டங்கள் இதுதான்” : குறை கூறும் பத்திரிகைகளுக்கு முரசொலி பதிலடி!
தொலைநோக்குத் திட்டங்கள்
அதிகப்படியான மழை காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழலைப் பயன்படுத்தி அரசாங்கத்தைக் குறை சொல்லி வரும் சிலர், ‘எந்தவிதமான தொலைநோக்குத் திட்டமும் அரசிடம் இல்லை’ என்பது போன்ற தோற்றத்தை கட்டமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், முன்னெச்சரிக்கையுடனும் அரசு செயல்பட்டது. தொலைநோக்குத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.
47 ஆண்டுகளில் பெய்யாத மழை, 177 ஆண்டுகளில் மூன்றாவது பெரிய மழை. எனவேதான் தண்ணீர் அதிகம் தேங்கியது. கடல் மட்டம் உயர்ந்து இருந்ததால், போய்ச் சேரும் தண்ணீரை உள்வாங்கவில்லை. இவை எதையும் கணக்கில் கொள்ளாமல் குறை சொல்லி வருகிறார்கள்.
செம்பரம்பாக்கத்தில் 2015ஆம் ஆண்டு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத காரணத்தால், அ.தி.மு.க. ஆட்சியில் சென்னையே மிதந்தது. அத்தகைய நிலைமை இப்போது ஏற்படவில்லை. இதுதான் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும். தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய அரசின் குழு முழுமையாக வரவேற்றுப் பாராட்டி இருக்கிறது. ‘சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, இல்லையென்றால் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும்’ என்றும், ‘உரிய நேரத்தில் நீர் திறந்து விடப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது’ என்றும், ‘அதற்காக இந்த அரசை நாங்கள் பாராட்டுகிறோம்’ என்றும் ஒன்றியக் குழு பாராட்டி இருக்கிறது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்தார்களே தவிர அவர்கள் கொடுத்த அறிக்கையை செயல்படுத்தவில்லை என்று கிளப்பி வருகிறார்கள். “ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் அவர்களின் தலைமையிலான கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் தற்போதைய நிலை ஆகியவற்றைத் தொகுத்து விரைவில் பொதுவெளியில் வெளியிட உள்ளோம் அதேபோல், இரண்டரை ஆண்டுக்காலத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்ட வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், அதற்கான செலவினம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெகுவிரைவில் உங்களின் தகவலுக்காக வெளியிட உள்ளோம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஆலோசனைக் குழுவை மாண்புமிகு முதலமைச்சர் அமைத்தார்கள். அவர்களது ஆலோசனைப்படி திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார். இதனால் தான் 2015 ஆம் ஆண்டு தண்ணீர் நின்ற பகுதியில் இப்போது தண்ணீர் குறைந்தது. சென்னையின் மையப்பகுதியில் தண்ணீர் குறைந்து நிற்கக் காரணம் அரசு செயல்படுத்திய திட்டங்கள் தான்.
அடையாறு மற்றும் கூவம் வடிநிலப்பகுதிகளில் உலக வங்கி நிதியில் 44.88 கி.மீ நீளத்திற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டிலும், சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியில் 50 கி.மீ நீளத்திற்கு ரூ.255 கோடி மதிப்பீட்டிலும், மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியின்கீழ் 59.5 கி.மீ. நீளத்திற்கு ரூ.232 கோடி மதிப்பீட்டிலும், மூலதன நிதியில் 11 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் தான் இதற்குக் காரணம்.
வட சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் குறைவாகத் தேங்கியது என்றால் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் 769 கி.மீ நீளத்திற்கு, ரூ.3,220 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 68 விழுக்காட்டுப் பணிகள் முடிக்கப்பட்டதால் தான். இது போன்ற பணிகள் 60 முதல் 80 விழுக்காடு முடிந்துள்ளது. 100 விழுக்காடு முடிந்த பிறகு இப்போதைய நிலைமை கூட ஏற்படாது. இவை எதுவும் குறை சொல்பவர் கண்ணுக்குத் தெரியவில்லை.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நவம்பர் 2021 முதல் நவம்பர் 2023 வரை நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 350 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, 475.85 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோன்று, நீர்வள ஆதாரத் துறைக்குச் சொந்தமான ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட பகுதிகளில் 19,876 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, 220.45 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
சூழலியலைக் காக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதையும் இவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. “பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுமையாகப் பாதுகாப்பது மிகமிக அவசியமானதாகும். தென்சென்னை பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் பயன்பாடு குறித்து நிச்சயமாக மறு ஆய்வு செய்யப்படும்.
இந்த சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும், வனத்துறை ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் (Third Master Plan) தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த முழுமைத் திட்டத்தில் வெள்ளத் தடுப்பிற்கான திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு, ஓராண்டு காலத்திற்குள் அது வெளியிடப்படும். இந்த மூன்றாவது முழுமைத் திட்டத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் சென்னையில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்புகளைக் குறைப்பதற்கான அம்சங்கள் இடம்பெறும்.
சென்னையையும், அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளையும், சதுப்பு நிலங்களையும் மேம்படுத்தி, வெள்ள பாதிப்புகளைக் குறைத்து, ஒரு நிலைக்கத்தக்க திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வதற்கு இந்த மூன்றாவது முழுமைத் திட்டம் (Third Master Plan) நிச்சயம் வழிவகுக்கும்” என்றும் முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
அரசின் சார்பில் செயல்படுத்தி உள்ள திட்டங்களைச் சொல்லி விட்டு, இனி எவை எவை செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தால் இந்த நடுநிலை பத்திரிக்கா தர்மர்களின் பரந்த மனதைப் பாராட்டலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக எதுவுமே செய்யவில்லை என்று குறை சொல்பவர்கள் தங்கள் பத்திரிகையை பா.ஜ.க.- – அ.தி.மு.க. பத்திரிக்கையாகவே அறிவித்துக் கொள்ளலாம்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?