murasoli thalayangam

“காஷ்மீரத்தை விற்பனைப் பொருள் போல மாற்றிவிட்டார்கள்...” - பாஜகவை விமர்சித்த முரசொலி !

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டம் வழங்கிய சிறப்புரிமையை பா.ஜ.க. அரசு நீக்கியது. அந்த முடிவு சரியானதுதான் என்று உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பை அளித்திருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு கருத்துகளை உச்சநீதிமன்றம் சொல்லி இருந்தாலும் சட்டரீதியாகச் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.. "378 ஆவது பிரிவை நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு" - என்பது மட்டும்தான்!

காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பா.ஜ.க. அரசு மாற்றியது. இதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கும் அவர்கள் சட்டரீதியாகச் சொல்வது ஒன்றே ஒன்றுதான்... "எந்த மாநிலமாக இருந்தாலும் அதனைப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு" -என்பது மட்டும்தான்!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் சட்டரீதியான சரக்கு என்பது இவ்வளவுதான். காஷ்மீர் மாநிலத்துக்கு 1954 முதல் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமையை விலக்கிக் கொள்ளும் முடிவை ஒன்றிய பா.ஜ.க. அரசானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிறைவேற்றிக் காட்டியது.

* ராமர் கோவில் கட்டுவது

* 370 ஆவது பிரிவை நீக்குவது

* குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவது - இந்த மூன்று மட்டும்தான் பா.ஜ.க.வின் கொள்கை ஆகும். ராமர் கோவிலைக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இனிமேல் 'இலவசமாகத் தரிசிக்கலாம்.

குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றும் காலத்துக்காகக் காத்திருக்கிறார்கள். 379 ஆவது பிரிவை நீக்கிவிட்டார்கள். 370 ஆவது பிரிவை நீக்குவதன் மூலமாக சிறுபான்மை இசுலாமியர்களைப் பழிவாங்குதல் மட்டுமே நோக்கமே தவிர வேறல்ல. அந்த சட்டப்பிரிவு தான் ஏக இந்தியா உருவாக்கத்துக்கு தடை மாதிரியும், இதனால்தான் மைய நீரோட்டத்தில் காஷ்மீரிகள் இணையவில்லை என்பது மாதிரியும் பா.ஜ.க. பீதியைக் கிளப்பிக் கொண்டு இருந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, காஷ்மீர் என்ற புதிய நாட்டை கைப்பற்றி வென்றதைப் போல கட்டுரை அறிக்கையை வெளியிட்டுள்ளார். 'நான்சிந்தித்தேன்.. நான் யோசித்தேன்' என்று அதில் தனக்குத் தானே பரிவட்டம் சூட்டிக் கொள்கிறார்.

இதையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். பிதாமகர்கள் எப்போதோ சொல்லி விட்டார்கள். ஆர்.எஸ். எஸின் ராமராஜ்ய பிரஜா பரிஷத் பிரிவானது 370 ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்ற கிளர்ச்சியை 1952 ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. அதைச் செய்து காட்டியது பிரதமர் மோடியின் சாதனையாக இருக்கலாம். 370 ஆவது சிறப்புரிமையை விலக்கிக் கொண்டதை ஆதரித்து மட்டுமே உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக பா.ஜ.க. நினைக்கிறது.

காஷ்மீர் என்ற மாநிலத்தைச் சிதைத்து காஷ்மீர் - லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசமாக ஜனநாயகப் படுகொலை செய்ததைக் கேள்வி எழுப்புகிறது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு. காஷ்மீரை மாநிலமாக உயர்த்தியாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை வரவேற்று பிரதமர் மோடி தனது அறிக்கையில் எதையும் குறிப்பிடவில்லை. 'காஷ்மீரை முழுமையான மாநிலமாக ஆக்கி அம்மக்களது உரிமையைக் காப்பேன்" என்று பிரதமர் மோடி சொல்லவில்லை.

காஷ்மீர் மாநிலத்தில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அதனை வரவேற்று - பிரதமர் மோடியின் அறிக்கையில் எந்த வரிகளும் இல்லை. ஐந்து நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் கௌல், "1989 ஆம் ஆண்டு முதல் காஷ்மீரத்தில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க பாரபட்சமற்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்துள்ளார். அப்படி ஒரு ஆணைக் குழு அமைப்போம் என்று பிரதமர் மோடி சொல்லவில்லை. மாறாக, 'இரண்டு ஊருக்கு நடுவே தடுப்பணை இருந்தது, உடைத்துவிட்டேன்' என்பதைப் போல 370 ஆவது பிரிவை நீக்கியதை சாதனையாகச் சொல்லி இருக்கிறார்.

சிறப்புரிமை வழங்கும் சட்டத்தைத்தான் துரோகச் சட்டம் என்கிறார்கள் பா.ஜ.க.வினர். பிரதமர் நேருவின் பிழை என்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இவர்கள் யாருக்கும் தெரியாது இந்த 'துரோகச்' சட்டத்தை உருவாக்கிக் கொடுத்தது அன்றைய நேருவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர் கோபால்சாமி அய்யங்கார்தான் என்று!

இதுவரை 378 ஆவது பிரிவைக் காரணய் காட்டி காஷ்மீரிகளை பழிவாங்கிக் கொண்டு இருந்தார்கள். இப்போது அதுவும் ரத்தானதால் புதிய காரணத்தைத் தேடுவார்களே தவிர, காஷ்மீரிகளுக்கு நீதி வழங்கப் போவது இல்லை என்பது பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் அறிக்கை மூலமாகத் தெரிகிறது.

"காஷ்மீர் ஓர் விற்பனைப் பண்டமல்ல. அல்லது பண்டமாற்றுப் பொருளுமல்ல. அதற்கு ஓர் தனித்த வாழ்வுண்டு. அதனுடைய தலைவிதியை அதனுடைய மக்களே முடிவு செய்வார்கள். காஷ்மீர் என்பது அந்த மக்களுக்கே சொந்தம். அதற்கென ஓர் ஆன்மா உண்டு. அவர்களுடைய நல்வெண்ணமும் விருப்பமுமின்றி எதுவும் யாரும் செய்ய முடியாது" என்று சொன்னார் முதல் பிரதமர் நேரு. ஆனால் காஷ்மீரத்தை விற்பனைப் பொருள் போல மாற்றிவிட்டார்கள். தங்களது அரசியல் காய்நகர்த்தலுக்கு பயன்படுத்திவிட்டார்கள்.

ரோஜா மலரில் இதழ்கள் உதிர்ந்து முள் மட்டுமே இருப்பது போலக் காட்சியளிக்கிறது காஷ்மீர்!

Also Read: மிக்ஜாம் புயல் பாதிப்பு : தமிழ்நாடு அரசு கையாண்ட விதத்தை மனம் திறந்து பாராட்டிய ஊடகங்கள் - முரசொலி !