murasoli thalayangam
வி.பி.சிங் அவர்களுக்கு அழியாப் புகழ் அளித்துள்ளார் திராவிட முதலமைச்சர் : நன்றியின் அடையாளம் இந்தச் சிலை!
முரசொலி தலையங்கம் (29-11-2023)
நன்றியின் அடையாளம் இந்தச் சிலை!
அரச குடும்பத்தில் பிறந்த புத்தர், அடித்தட்டு மக்களைப் பற்றிச் சிந்தித்ததைப் போல - இராஜ பரம்பரையில் பிறந்த வி.பி.சிங் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒளிவிளக்காக விளங்கினார். அத்தகைய சமூகநீதியின் ஒளிவிளக்காம் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னை கடற்கரை சாலையில் - மாநிலக் கல்லூரி வளாகத்தில் கம்பீரச் சிலை வைத்து அழியாப் புகழை அடைந்து விட்டார் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இந்தியாவின் சமூக நீதிக் காவலராம் வி.பி.சிங் அவர்கள் பிறந்தது உத்தரப்பிரதேச மாநிலம். 'எங்களது சொந்த மாநிலமான உ.பி.யில் கூட எங்களது தாத்தாவுக்குச் சிலை வைக்கப்படவில்லை. தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக அமைகிறது' என்று வி.பி.சிங் அவர்களின் பேத்தி சொல்லி இருக்கிறார். இதற்கு இணையத் தளத்தில் 'உதயமாறன்' என்பவர் பதில் சொல்லி இருக்கிறார்.
''மராட்டியத்தில் பிறந்த அண்ணல் அம்பேத்கர் பெயரைக் கூட அந்த மண்ணில் ஒரு கல்லூரிக்குச் சூட்ட முடியாதிருந்த காலத்தில்தான் கலைஞர் அவர்கள் இங்கே சட்டப் பல்கலைக் கழகத்துக்கு அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சூட்டினார்" என்று எழுதி இருக்கிறார். இதுதான் சமூகநீதி மண் என்பதற்கான அடையாளம் ஆகும். இந்த மண்ணில்தான் அம்பேத்கர் பெயரையும் துணிச்சலாக வைக்க முடியும். வி.பி.சிங்குக்கும் சிலை அமைக்க முடியும்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், அன்றைய முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களிடம், 'தமிழ்நாட்டில் வி.பி.சிங் அவர்களுக்கு நிரந்தரமான ஒரு நினைவுச் சின்னம் வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். தலைவர் கலைஞர் அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆட்சி மாற்றம் காரணமாக அது நிறைவேறவில்லை. தமிழினத் தலைவர் கலைஞர் விட்ட இடத்தில் இருந்து பணிகளைத் தொடங்கி நடத்தி வரும் இரண்டாம் கலைஞராம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதனை மறக்காமல் நிறைவேற்றிக் காட்டிவிட்டார்கள்.
'இந்த சிலை வைப்பதன் மூலமாக அவருக்கு நாம் காட்ட வேண்டிய நன்றியைக் காட்டுகிறோம்' என்று மாண்புமிகு முதலமைச்சர் சொன்ன சொல்லே கல்வெட்டுச் சொல்லாகும்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதி இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவது முக்கியமா? பிரதமர் பதவி முக்கியமா? - என்ற இரண்டில் சமூகநீதியைக் கையில் எடுத்தவர் வி.பி.சிங். அந்த கம்பீரத்துக்கு நன்றி தெரிவிக்கவே இந்த சிலை!
'என் ஆட்சி கவிழ்க்கப்படும்' என்று எனக்கு நன்றாகவே தெரியும் என்றாலும், சமூகநீதியில் யார் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பதை நாடு தெரிந்து கொள்ளவே இதனைச் செய்கிறேன்' என்றவருக்குச் சிலை அமைக்கப் பட்டுள்ளது!
மதவாதமா? மத நல்லிணக்கமா? - எது முக்கியம் என்ற போது மத நல்லிணக்கத்தின் பக்கம் நின்ற பன்முகத் தன்மைக்கு நன்றி தெரிவிக்கவே இந்தச் சிலை!
''பெரியார் இறந்த பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவருக்குப் பின்னாலே இருக்கின்ற மக்களின், வருகின்ற சந்ததியினரின் உள்ளங்களிலே, அவரது கருத்துகள் நிறைந்திருக்கின்றன என்றால், அவர் சாகவில்லை என்பதைக் காட்டுகிறது" என்று சொன்னாரே வி.பி.சிங். அதற்கு நன்றி காட்டவே இந்த சிலை!
''ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமையானது, ‘அவமானம்’ என்றே நான் சொல்லுவேன். இந்த நாட்டிலே கோடிக்கணக்கான மக்கள் சமூக அநீதியால், அவமானத்தால் பாதிக்கப் பட்டார்கள். மனத்தில் அவமானம் என்ற நெருப்புப் பற்றி எரிந்தால், இந்த நாட்டில் புரட்சிதான் வெடித்துக் கிளம்பும் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதை உணர்ந்ததால்தான், பெரியார், சுயமரியாதை என்ற முழக்கத்தைத் தந்தார்கள்" என்று சொன்னாரே வி.பி.சிங். அதற்கு நன்றி காட்டவே இந்த சிலை!
''இன்றைக்கு இருக்கக் கூடிய சிக்கல்களுக்கு அடித்தளம் என்ன? சமுதாயத்தில் இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை உயர்த்துவது எப்படி என்பதுதான் அந்தச் சிக்கல். அந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணப் பாடு பட்டவர்கள் தான் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களும். பெரியார் அவர்களும்" என்று சொன்ன மனிதர்க்கு நன்றி காட்டவே இந்தச் சிலை!
''நாம் 400 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வரலாற்றுக்குச் செல்வதைவிட, 4000 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள வரலாற்றுக்குச் செல்வோம்" என்று சிந்திக்கத் தூண்டியவர்க்கே சிலை வைக்கப்பட்டுள்ளது!
''மண்டல் ஆணைய அமலாக்கம் என்பது, அதிகாரப் பங்கீடு" என்ற புதுவிளக்கம் கொடுத்தவர் என்பதால் அவருக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது!
''இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி அண்ணல் அம்பேத்கர் படத்தைக்கூட நாடாளுமன்றத்தில் திறக்க முடியவில்லையே!' என்று வேதனைப்பட்டதுடன் அண்ணல் அம்பேத்கர் படத்தினைத் திறந்து வைத்தவர் வி.பி.சிங். "பாரத ரத்னா" பட்டத்தையும் அண்ணல் அம்பேத்கருக்கு வழங்கி, பட்டத்திற்குப் பெருமைச் சேர்த்த பெருமகனார் வி.பி. சிங்! அத்தகையவருக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது!
''வகுப்புவாதத்துக்கு எதிராக நாம் மதச்சார்பின்மை வேண்டும் என்கிறோம். ஆனால் மதச்சார்பின்மை மட்டுமே வகுப்புவாதத்தை ஒழித்துவிடாது. அத்துடன் கட்டாயமாக சமூக நீதியும் இணைந்தாக வேண்டும்" - என்ற புதிய அரசியல் நெறியை உருவாக்கிக் கொடுத்தவருக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
''சமூகநீதிக்காக ஒரு முறையல்ல, ஆயிரம் முறை பிரதமர் பதவியை இழக்கத் தயார். ஒரு நல்ல பொருளை வாங்க வேண்டுமா, அதற்கு நல்ல விலையைத் தந்தாக வேண்டும். நான் நல்ல பொருளை வாங்குவதற்காக நல்ல பொருளைத் தந்திருக்கிறேன்’’ என்று சொன்னவருக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் ஒரு கூட்டம். வி.பி.சிங் பேசிக் கொண்டு இருந்தார். திடீரென கூட்டத்தைப் பார்த்து, ''யாராவது உங்கள் முகத்தில் எச்சில் துப்பினால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார். கூட்டம் அமைதியாக இருந்தது. ' சொல்லுங்கள்' என்று மறுபடியும் கேட்டார். ஒருவர் எழுந்து, 'துப்பியவன் முகத்தில் ஒரு அடி கொடுப்பேன்' என்றார். 'இதுதான் சுயமரியாதை' என்று சொன்னார் வி.பி.சிங். அவருக்குத்தான் சிலை வைக்கப்பட்டுள்ளது!
டெல்லியில் பெரியார் மய்யம் இடிக்கப்பட்டது. அப்போது மருத்துவமனையில் இருந்தார் வி.பி.சிங். பின்னர் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் உரையாற்றும் போது, ''நான் அப்போது அந்த இடத்தில் இருந்திருந்தால் புல்டோசர் முன்னால் ஏறி நின்று தடுத்திருப்பேன்" என்றவர் வி.பி.சிங். அவருக்குத் தான் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
''காலம் மாறினாலும் தான் மட்டும் மாறாமல் இருக்கிற ஒரு தலைவர் உண்டென்றால் அது கலைஞர் அவர்கள்தான். பதவியைக் காப்பாற்றிக் கொள்ள என்னுடைய கட்சி முதலமைச்சர்களே என்னை விட்டு ஓடிய நேரத்தில் என்னோடு இருந்தவர் கலைஞர் அவர்கள்" என்று சொல்லி பாராட்டியவர் வி.பி.சிங் அவர்கள்.
''வி.பி.சிங்கை யார் மறந்தாலும் தமிழ்நாடு மறக்காது" என்று சொல்லி நன்றியின் உருவமாகச் சிலை திறந்த மாண்புமிகு முதலமைச்சர்க்கு தமிழ்ப்பெருங்குடி மக்களின் கோடானுகோடி நன்றிகள்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?