murasoli thalayangam
“ஆளுநர்கள் தலையில் இடியை இறக்கிய உச்சநீதிமன்றம்” : பாஜக அரசின் நரித்தந்திர நாடகங்களுக்கு முரசொலி பதிலடி!
ஆளுநர்கள் தலையில் இடி – -1
ஆளுநர்கள் தலையில் இடியை இறக்கி இருக்கிறது உச்சநீதிமன்றம். ஆளுநர்களை வைத்து நரித்தந்திர நாடகங்களை நடத்தி வரும் பா.ஜ.க. அரசுக்கும் சேர்த்துத்தான் இது இடியாக அமைந்திருக்கிறது.
அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தவறாக பயன்படுத்தி வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியது. அரசின் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போடுவதால் அரசுப் பணிகள் முடங்குவதாகவும் வாதிடப்பட்டது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட 12 மசோதாக்கள், 4 நடவடிக்கை உத்தரவுகள், 54 கைதிகளின் முன்கூட்டி விடுதலை தொடர்பான கோப்புகள் உள்ளிட்டவை ஆளுநர் ஆர்.என்.ரவியால் முடக்கப்பட்டிருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இத்தகைய வழக்கை தொடர்ந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, இறுதியாக உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டி இருக்கிறது தமிழ்நாடு அரசு.
ஆளுநராக ஆர்.என்.ரவி வந்தது முதல் கொடுத்து வரும் குடைச்சல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் பொதுவெளியில் சனாதனக் காவலராகவும், வர்ணாசிரம வழிகாட்டியாகவும், தத்துவார்த்த மேதையாகவும் தன்னைக் காட்டிக் கொள்ளச் செய்து கொள்ளும் உளறல்கள் ஒதுக்கித் தள்ளத்தக்கவை. இவை காலம் காலமாக சமூகநீதிக்கு எதிரான வகுப்புவாத சக்திகளால் நாம் கேட்டு வரும் பரப்புரைகள்தான்.
இதுவரைச் சொல்லிச் சொல்லி தோற்ற கருத்துகளை, கடைசியாகக் கிடைத்திருக்கும் கிண்டிவாலா வாயில் போட்டுச் சொல்லச் சொல்லி பத்திரிகைகளில் வர வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சொல்லித் தொலைப்பவர் கவர்னர் என்பதால், நாமும் பதில் சொல்லித் தொலைக்க வேண்டி இருக்கிறது. இது போல நிர்வாக விவகாரங்களில் இருக்க முடியாது அல்லவா?
அரசாங்கத்தின் சார்பில் எழுதிக் கொடுத்த உரையைத்தான் ஆளுநர் என்பவர் அவையில் வாசிக்க வேண்டும். ஆனால் அந்த உரையையே திருத்தி வாசித்தார் ஆளுநர் ரவி. சொன்னதைச் சொல்லாமலும், சொல்லாததை சேர்த்தும் சபையின் மாண்பைக் குலைக்கும் உரையை வாசித்தார் ஆளுநர் ரவி. உடனடியாக, அதே இடத்திலேயே, தீர்மானத்தைக் கொண்டுவந்து - அவர் வாசித்த உரையை நிராகரித்து - அரசால் வழங்கப்பட்ட உரையே அவைக் குறிப்பில் இடம் பெறும் என்று சொல்லி - சபையின் மாண்பைக் காட்டினார் முதலமைச்சர் அவர்கள்.
“சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது” என்பதையே விட்டுவிட்டு படித்தார் ஆளுநர். அதனால் தான் அவரது உரையை அந்த இடத்திலேயே நிராகரிக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்தார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் உருவாக்கி நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஏன் அனுமதி தரவில்லை என்பதற்கு ஆணவமாக பதில் சொன்னார் ஆளுநர் ரவி. ‘கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம்’ என்று பொதுவெளியில் பேசினார் ஆளுநர் ரவி. பதவிப் பிரமாணம், ரகசியக் காப்புப் பிரமாணங்களுக்கான அர்த்தம் தெரியாதவரிடம் யார் சொல்லி புரிய வைப்பது? அதனால்தான் உச்சநீதிமன்றம் போனது தமிழ்நாடு அரசு.
மாநில பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் மசோதா, தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா உள்ளிட்டவற்றை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளார்.
ஏதோ மகா யோக்கியரைப் போல வேடம் போட்டு வரும் இந்த ஆளுநர்தான், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா ஊழல் வழக்கில் நீதிமன்ற விசாரணையை தொடங்க சி.பி.ஐ. கோரிய அனுமதிக்கான கோப்புகளிலும் கையெழுத்திடாமல் உள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்குநரகம் இசைவு ஆணை கோரிய கோப்பிலும் ஆளுநர் கையெழுத்திடாமல் உள்ளார். இவை அனைத்துமே சட்டமீறல்கள் ஆகும். சட்டசபை மாண்புமீறல்கள் ஆகும். அவரது பதவிக்கான அதிகார மீறல்கள் ஆகும்.
‘அரசின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே காலதாமதப்படுத்துவது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி இருந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படுவதன் மூலம், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி பறித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
- தொடரும்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!