murasoli thalayangam
அதிமுக ஆட்சி காலத்து ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற துடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி : முரசொலி கடும் சாடல்!
முரசொலி தலையங்கம் (07-11-2023)
ஊழல்வாதிகளைக் காப்பாற்றும் ஆளுநர்!
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு அரசியல் உள்நோக்கத்தோடு ஆளுநர் ஆர்.என்.ரவி தடை போட்டு வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அதில் மிக மிக முக்கிய மானது, அ.தி.மு.க. ஆட்சி காலத்து ஊழல் அமைச்சர்களை ஆர்.என்.ரவி காப்பாற்றி வருவது ஆகும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி மறுப்பதன் மூலமாக ஊழல்வாதிகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பை ஆளுநர் ரவி கொடுத்து வருகிறார்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் செய்த ஊழல் முறைகேடுகளை விசாரணை நடத்தி அம்பலப்படுத்தி வருகிறது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் ரூ.2,87,98,650/, தங்கநகைகள் 6.637 கிலோகிராம், சுமார் 13.85 கிலோகிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத பணம் ரூ.2,65,31,650/–-, வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜய பாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.13 லட்சமும், ரூ.2 கோடிக்கான வைப்புத் தொகை, நிலப்பதிவு ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.
வணிகவரித்துறை அமைச்சராக இருந்த வீரமணி வீட்டில் ரூ.34 லட்சம் பணம், 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.1,80,000 மதிப்பிலான அந்நியச் செலாவணி டாலர் கைப்பற்றப்பட்டுள்ளது. 623 சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முன்னர் இருந்ததை விட 646 சதவிகிதம் இவரது சொத்து அதிகமானதாக போலீஸார் கணக்கிட்டுள்ளனர்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர், வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடி சம்பாதித்துள்ளதாக போலீஸார் கணக்கிட்டுள்ளார்கள். ரூ.23 லட்சம் பணமும், 4.87 கிலோ தங்கமும், 136 கனரக வாகனங்களின் ஆவணமும் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
மின்சார அமைச்சராக இருந்த தங்கமணி ரூ.4 கோடி மதிப்பிலான தொகையை வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்ததாக ரெய்டு நடத்தப்பட்டு கணக்கில் வராத பணம், சான்று பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் மீது ஏற்கனவே குட்கா ஊழல் நிலுவையில் உள்ளது. குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு விற்பனை செய்ய அனுமதித்ததாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு இது. இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையை தொடங்க சி.பி.ஐ.–-க்கு அனுமதி அளிப்பதற்கான கோப்பு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருக்கிறது.
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களான டாக்டர் சி.விஜய பாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா / மாவா விநியோகிப்பாளர்களிட மிருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சி.பி.ஐ. கோரியது. மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐ.-–யின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது. ஆனால் இதுவரையில் இந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
சி.பி.ஐ. நீதிமன்றம் தொடர்ந்து கண்டித்து வருகிறது. “அரசின் அனுமதி கிடைக்காவிட்டால் இந்த வழக்கையே எப்படி நடத்துவது?” என்று சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இரண்டு நிகழ்வுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணை கோரியது. இந்தக் கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்களை முறையே 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பியது. இந்த கோரிக்கை கடிதங்களும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.
« கே.சி. வீரமணி மீதான ஊழல் வழக்கு கோப்புகள் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி அன்றே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் லஞ்ச ஒழிப்புத் துறையின் இறுதி விசாரணை அறிக்கை முழுமையாக இருக்கிறது.
« எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ஊழல் வழக்கு தொடர்பான கோப்புகள் கடந்த மே 15 ஆம் தேதி அன்றே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் இறுதி விசாரணை அறிக்கை முழுமையாக இருக்கிறது. இந்த கோப்பைப் பெற்றுக் கொண்டதாக ஆளுநர் மாளிகை ஒப்புதல் கடிதம் கொடுத்திருப்பதாக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி அப்போதே சொன்னார்.
ஆனால் இவை அனைத்தையும் மறைத்து வருகிறார் ஆர்.என்.ரவி. அவரது உண்மையான குணத்தையும் நோக்கத்தையும் இது காட்டுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!