murasoli thalayangam
தேர்தல் பத்திரங்கள் : “இதனால்தான் மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்கிறது பா.ஜ.க.” - முரசொலி விமர்சனம் !
மக்கள் ஏன் தெரிந்து கொள்ளக் கூடாது?
“எங்களுக்கு யார் நன்கொடைகள் வழங்கியது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை” – என்ற ‘ஊழல் மலிந்த’ பதிலை ஒன்றிய பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறது. இதுதான் பா.ஜ.க. அரசின் உண்மைத்தன்மை ஆகும்.
தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நடைபெற்றது. வழக்கறிஞர் கபில் சிபல் உள்ளிட்டோர், தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெரும் அரசியல் கட்சிகள் அதனை தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை இல்லை என்றும், அதனை எதற்கு வேண்டுமானாலும் செலவு செய்யும் நிலை உள்ளதாக தெரிவித்தனர். தேர்தல் பத்திர நடைமுறையை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.
ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அப்போது என்ன சொன்னார் தெரியுமா?
“நன்கொடை யார் வழங்கியுள்ளனர் என்பது அதனைப் பெறும் கட்சிக்கு மட்டுமே தெரியும். மற்ற கட்சிகளுக்கு தெரியாமல் ரகசியம் காப்பதுதான் இந்த திட்டம்” என்று குறிப்பிட்டார். அப்போது, குறுக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ''அப்படியானால் வாக்காளர்களின் உரிமை என்ன? ஏன் நன்கொடை விபரங்களை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது?” என்று கேள்வி எழுப்பினர்.
தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.” தேர்தல் பத்திர நடைமுறையால் பாதிப்பு எதுவும் உள்ளதா? அது குறித்து ஆய்வுகள் எதுவும் நடத்தப்பட்டதா? இதுவரை பெறப்பட்டுள்ள நன்கொடை தொகை எவ்வளவு? என்பது உள்பட பல கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் உரிய பதிலை அளிக்கவில்லை” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் வாதிடும் போது, “பொதுமக்கள் எதை வேண்டுமானாலும் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் நிலை இருக்கக் கூடாது. நியாயமான கட்டுப்பாடுகள் தேவை” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
“சில நிறுவனங்கள் மொத்த வருவாயையும் அரசியல் நன்கொடையாக வழங்குவதை அனுமதிப்பது ஏன்? முன்பு நிகர லாபத்தில் ஒருபகுதிதான் நன்கொடையாக வழங்க முடியும் என்ற விதிமுறை இருந்தது. தற்போது லாபம் இல்லாத நிறுவனங்கள் கூட மொத்த வருவாயையும் நன்கொடையாக வழங்க முடியும் என்று மாற்றப்பட்டுள்ளது. நிறுவனம் நடத்துவது நன்கொடை வழங்குவதற்காக அல்ல. இதனை சரிசெய்ய நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் தேவை. இதுபோன்ற பிரச்சினைகளை சரிசெய்ய ஒரு சமநிலையான நன்கொடை திட்டத்தை உருவாக்கலாம். அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை அரசும், நாடாளுமன்றமும்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வரையிலான நன்கொடை மொத்த விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த விபரங்கள் முழுமையாக இல்லை என்றால் இந்திய ஸ்டேட் வங்கியிடமிருந்து தகவல்களைப் பெற்று 2 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
அரசியல் கட்சிகள் தேர்தல் செலவுகளுக்கான நன்கொடைகள் பெறுவதற்கு தேர்தல் பத்திர விற்பனையை ஒன்றிய பா.ஜ.க. அரசு 2018 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து நன்கொடை வழங்க இது ஊக்கப்படுத்துவதாக உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனை எதிர்த்து சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. ஒரு குடிமகனுக்கு இருக்கும் தெரிந்து கொள்ளும் உரிமையை மீறுவதாக இது உள்ளது என்கின்றன இந்த மனுக்கள்.
2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் பா.ஜ.க. மட்டும் ரூ.5,272 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது மொத்த நிதியில் 58 சதவிகிதம் ஆகும். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு இதனை ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. பா.ஜ.க. பெற்றுள்ள ரூ.5,272 கோடியில் 52 விழுக்காடு தொகை தேர்தல் பத்திரங்கள் மூலமாக வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இதனால்தான் மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்கிறது பா.ஜ.க.
- முரசொலி தலையங்கம்
6.11.2023
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!