murasoli thalayangam

”சனாதன வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கும் ஆளுநர் இனி நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும்”: முரசொலி!

முரசொலி தலையங்கம் (03-11-2023)

ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்

தான் பதில் சொல்ல வேண்டியவை எதற்கும் பதில் சொல்லாமல் - ஆரிய சனாதன வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவரைச் சட்டத்தின் நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்கிறது தமிழ்நாடு அரசு. இனி ஆளுநர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் அவரது முகம் கிழித்தெறியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதல், தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதையே வழக்கமாக கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளுக்கு உடனுக்குடன் கையெழுத்து போடாமல், ஒவ்வொரு கோப்புக்கும் விளக்கம் கேட்பதையே வழக்கமாக வைத்துள்ளார். அரசியல் எதிரி போன்று செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டமன்றமானது தனது கடமைகளைச் செய்ய விடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்.

அரசியல் சாசன பிரிவுகள் 200 மற்றும் 163-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள தமிழ்நாடு அரசு, ‘நீட்’ விலக்கு மசோதா, பல்கலைக்கழக சட்டங்களை திருத்துவதற்கான மசோதா உள்ளிட்ட 12 மசோதாக்கள், 4 நடவடிக்கை உத்தரவுகள், 54 கைதிகளின் முன்கூட்டி விடுதலை தொடர்பான கோப்புகள் உள்ளிட்டவை தமிழ்நாடு ஆளுநரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பதவி ஒரு சம்பிரதாய பதவி என்றும், ஆளுநர் அமைச்சரவை ஆலோசனையின்படி செயல்படக் கடமைப்பட்டவர் எனவும் முந்தைய வழக்குகளில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாடு அரசு, மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க சர்க்காரியா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாமதிப்பதன் மூலம் பேரவை செயல்பாடுகளையே ஆளுநர் தடுக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக அவரது செயல்பாடுகள் அனைத்தும் உள்ளது. பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது மட்டுமின்றி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் ஆளுநர் தாமதம் செய்கிறார். சரியான காரணங்களை தெரிவிக்காமல், அரசு அனுப்பும் கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார். ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளை அரசு உரிய விளக்கத்துடன் மீண்டும் அனுப்பியபோதும் ஆளுநர் ஒப்புதல் தர மறுக்கிறார்.

அரசால் அனுப்பப்படும் கோப்புகள், அரசாணைகள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் தாமதிக்கும், ஆளுநரின் இந்த நடவடிக்கையால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு அவசர சட்டமும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 6 வாரங்களில் அது நிரந்தரச் சட்டமாகியிருக்க வேண்டும். தற்போது வரை 12க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளார். இதனால் பல வகையில் அரசால் துரிதமாகச் செயல்பட முடியவில்லை.

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத்திருத்தம், மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குதல், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்தை உருவாக்குவது உள்ளிட்ட மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றை முடக்கி வைத்திருக்கிறார். இதனால் பல்கலைக் கழகங்கள் செயல்பாடு முடக்கப் பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தின் நோக்கத்தையே சிதைக்கிறார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த விஜயபாஸ்கர், ரமணா, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீதான ஊழல் புகாரில் வழக்குப்பதிவு செய்ய 2022 செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. இதுவரை அனுமதி தராமல் ஆளுநர் இழுத்தடித்து வருகிறார். அமைச்சராக செந்தில்பாலாஜியை நீடிக்கக் கூடாது என்று சொல்லி பெரிய பிரச்சினையைக் கிளப்பிய ஆளுநர் ரவி, கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் அமைச்சர்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதில்தான் அவரது உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வருகிறது.

“நான் திருப்பி அனுப்பவில்லை என்றால் நிராகரித்ததாக அர்த்தம்” என்று ஆணவமாகச் சொன்னவர் இந்த ஆர்.என்.ரவி. அந்தளவுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை கரைத்துக் குடித்தவர் அவர். எந்த சட்டமாக இருந்தாலும் ஒரு முறை விளக்கம் கேட்கலாம். திருப்பி அனுப்பலாம். இரண்டாவது முறை அரசு அனுப்பினால், அதனை ஆளுநர் ஏற்கத்தான் வேண்டும். அதைச் செய்வது இல்லை. அப்படியே ஊறுகாய் பானையில் ஊறப்போட்டு விடுவார். இதுதான் அவரது தந்திரம் ஆகும்.

நீட் விலக்கு மசோதாவை அரசியல் உள்நோக்கத்தோடு நிறுத்தி வைத்தார் என்றால், ஆன்லைன் ரம்மி மசோதாவையும் நிறுத்தி வைத்தார். ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து பேசினார். இதை விட வெட்கக்கேடு இருக்க முடியுமா? ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு முன்னதாக பொதுமக்கள் கருத்தை தமிழ்நாடு அரசு கேட்டது. ‘இதற்கெல்லாமா பொதுமக்கள் கருத்தை கேட்பார்கள்?’ என்று கிண்டல் செய்தது பா.ஜ.க. ஆனால், ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களையே சந்தித்து பேசினார் ரவி. அப்போது பா.ஜ.க.வால் வாயைத் திறக்க முடியவில்லை.

ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளன்று ஆளுநர் உரையாற்ற வேண்டும் என்பது ஒரு வழக்கம். அரசு தயாரித்து தரும் உரையை வாசித்து விட்டுச் செல்ல வேண்டும். அதையே மாற்றியும் திருத்தியும் நீக்கியும் சேர்த்தும் தன் இஷ்டத்துக்கு தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டவர் ஆளுநர் என்பதை அகில இந்திய ஊடகங்கள் அனைத்துமே கண்டித்தன. அதன்பிறகும் அவர் திருந்துவதாகத் தெரியவில்லை.

உச்சநீதிமன்ற வழக்குக்குப் பிறகாவது திருந்துவாரா என்பதைப் பார்ப்போம்.

Also Read: மத்தியில் கூட்டாட்சி - மாநில சுயாட்சி : பிரதமர் மோடிக்கு நினைவூட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் - முரசொலி!