murasoli thalayangam
“வாயைத் திறந்தாலே பொய்யும் புளுகும்தான்”: பொய்ப்பிரமாணம் எடுத்துள்ள ஆளுநருக்கு ஆதாரத்தோடு முரசொலி பதிலடி!
பொய்ப் பிரமாணம் எடுத்துள்ள ஆளுநர் - 1
வாயைத் திறந்தாலே பொய்யும் புளுகும்தான் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வருகிறது. ஒரு சம்பவத்தை வைத்து அவர் நூற்றுக்கணக்கான பொய்களைச் சொல்லத் தொடங்கி விட்டார்.
ஆளுநர் மாளிகை இருக்கும் சாலையில் கடந்த 25 ஆம் தேதி என்ன நடந்தது?
25.10.2023 அன்று மதியம் 3 மணியளவில், கருக்கா வினோத் (42 வயது E-–3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் வழக்கமான குற்றவாளி) என்பவர் ஆளுநர் மாளிகை அருகே தனியாக சாதாரணமாக நடந்து வந்தார். பெட்ரோல் நிரப்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டு வந்து, அவற்றை ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சர்தார் படேல் சாலையில் எதிர்ப்புறத்தில் இருந்து எறிய முயன்றார். ஆளுநர் மாளிகையின் வெளிப்புறத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழ்நாடு காவல்துறை போலீசாரால் தடுக்கப்பட்டார்.
அப்போது சம்பவ இடத்திற்கு எதிரே சற்று தூரத்தில் இருந்து இரண்டு பாட்டில்களை வீசினார். அவை ஆளுநர் மாளிகையின் அருகே சர்தார் படேல் சாலையில் வைக்கப் பட்டிருந்த தடுப்பரண்களுக்கு அருகே விழுந்தது. பாதுகாப்பு போலீசாரால் உடனடியாக கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார். இச்சம்பவத்தால், பொருட்களுக்கோ அல்லது எந்த நபருக்கோ எவ்வித சேதமோ, காயமோ ஏற்படவில்லை.
- இவ்வளவுதான் நடந்தது. ஆனால் ஆளுநர் மாளிகை சொல்லும் பொய், பெட்ரோல் பாட்டில்களை விடப் பெரிய பொய் பாட்டில்களாக இருக்கின்றன.
* பொய் 1: ராஜ்பவன் மெயின் கேட் எண் 1 வழியாக பெட்ரோல் குண்டுகளை ஏந்திய மர்ம நபர்கள் சிலர் உள்ளே நுழைய முயன்றனர்.
உண்மை: குண்டுகளை ஏந்திய மர்ம நபர்கள் ஏராளமானவர்கள் என அப்படி யாரும் வரவில்லை. வினோத் என்ற ஒரே ஒரு நபர் மட்டும்தான் வந்தார். அவரும் சாலையின் அந்தப் பக்கம் இருந்து வாசலை நோக்கித்தான் வீசினாரே தவிர, உள்ளே நுழைய முயற்சிக்கவில்லை.
நந்தனம் சிக்னலில் இருந்து நடந்தே வருகிறார் வினோத். நந்தனம் கலைக் கல்லூரி, சைதாப்பேட்டை பாலம், சின்னமலை வரை நடந்தே வருகிறார். அவர் தனி ஆளாகத் தான் நடந்து வருகிறார். அங்கிருந்து சைதை நீதிமன்றம் வழியாக நடந்து சென்றுள்ளார். இது ஆளுநர் மாளிகைக்கு எதிர்புறம் உள்ள சாலையாகும். இந்த சாலையைக் கடந்தால்தான் ஆளுநர் மாளிகை வாசலுக்கு செல்ல முடியும். சாலையை வினோத் கடக்கவில்லை. ஆளுநர் மாளிகைக்கு எதிரே நின்று ஆளுநர் மாளிகை முன்பு வீச முயற்சித்துள்ளார். அங்கு பணியில் இருந்த ஐந்து காவலர்கள் உடனே அவரை தடுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவை அனைத்தும் வீடியோ காட்சிகளாக உள்ளன.
* பொய் 2: பாதுகாப்புப் பணியாளர்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்த முயன்ற போதும், மற்றொரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் பிரதான நுழைவாயிலுக்கு பலத்த சேதம் ஏற்படுத்தப்பட்டது.
உண்மை: பிரதான நுழைவாயிலில் பலத்த சேதமும் ஏற்பட வில்லை. சிறு சேதமும் ஏற்படவில்லை. பாட்டில் வீசப்பட்டது பிரதான வாசலில் இருந்து 30 மீட்டர் தூரத்தில் -– பேரிகாட் தாண்டி சாலையில்தான் விழுந்துள்ளது. எனவே நுழைவாயிலில் எந்த சிறு சேதமும் கிடையாது.
* பொய் 3 : வினோத்துடன் நிறையப் பேர் வந்துள்ளார்கள்.
உண்மை: கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், மேற்படி நபர் நந்தனத்தில் இருந்து சம்பவ இடம் வரை தனியாகவே வந்துள்ளார்.
* பொய் 4 : அந்த நபரை தப்பிக்க விட்டு விட்டார்கள்.
உண்மை: உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். சரியாகச் சொல்வதாக இருந்தால் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
* பொய் 5 : அவர் மீது வழக்கு பதியவே இல்லை.
உண்மை: அன்றைய தினமே J-3 கிண்டி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உடனடியாக அவர் IV-வது பெருநகர குற்றவியல் நடுவர் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, 09.11.2023 வரை சிறையில் வைக்கப்பட்டார்.
* பொய் 6: ஆளுநர் அவர்களுக்கு எதிராக பகிரங்க மிரட்டல், அவதூறுப் பேச்சு மற்றும் தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் இந்த பாட்டில் வீச்சு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நியாயமான முறையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை.
உண்மை: குற்றவாளி கைது செய்யப்படுகிறார். நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். சிறையில் அடைக்கப்பட்டுகிறார். ஆளுநர் மாளிகைக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. இதற்கு பின்னால் சதி ஏதாவது இருக்குமா என காவல் துறை விசாரிக்கிறது. இதற்கு மேல், மேல் நடவடிக்கை என்ன எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
* பொய் 7: உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
உண்மை: உடனடியாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
* பொய் 8: ஏப்ரல் 19, 2022 அன்று மயிலாடுதுறை சென்ற போது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது. இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.
உண்மை: ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் அப்பகுதியை கடந்து சென்ற பின்னர் அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் கருப்புக்கொடிகளை சாலையில் வீசினர். அக்கொடிகள் ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் முழுமையாக சென்றபின் பின்னால் வந்த வாகனங்கள் மீது விழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்படி வழக்கு புலன் விசாரணையில் உள்ளது.
ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
-– தொடரும்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!