murasoli thalayangam
"சேவகம் புரியத் தயாராக உள்ளேன்" : ஆங்கிலேயரிடம் சாவர்க்கர் சொன்னது என்ன ? புட்டு புட்டு வைத்த முரசொலி !
முரசொலி தலையங்கம் (26.10.2023)
மருது சகோதரர்களைப் பேச மன்னிப்பு சகோதரர்க்கு அருகதை உண்டா?
...................
பல ஆண்டு காலம் அதிகாரப் பதவியை அனுபவித்துவிட்டு -– - இப்போது சொகுசான வாழ்க்கையை அடைந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இப்போதுதான் மருதுபாண்டியர் கண்ணுக்குத் தெரிய வந்துள்ளார்.
‘என்னது சிவாஜி செத்துட்டாரா?’ என்று கேட்பதைப் போல, ‘மருதுபாண்டியரை மறைத்துவிட்டார்கள்’ என்று கிளம்பி இருக்கிறார். பூனை கண்ணை மூடிக் கொண்டதால் உலகம் இருண்டு விடாது. இது மருதுபாண்டியர் பூமி என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் திராவிட பூமி இது.
இவர்களுக்கு இப்போது மருதுபாண்டியரைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவரைப் பேசுவதால் ஏதாவது ஓட்டு சிந்தாதா என்ற நப்பாசை தான். பா.ஜ.க.வுக்கு இருந்த ஒன்றரையணா ஓட்டையும் வந்து குறைத்ததில் அரைப்பங்கு அண்ணாமலைக்கு உண்டு. அரைப் பங்கு ஆர்.என்.ரவிக்கு உண்டு. மற்றபடி இவர்களால் பா.ஜ.க. ஒரு சென்டி மீட்டர் கூட உயரவில்லை.
ஏதோ ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்துக்குப் போய் தனது அரைகுறை அறிவைக் காட்டிக் கொண்டு இருக்கிறார் ஆளுநர். அந்த வரிசையில் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில், “இரண்டாண்டுகளுக்கு முன் நான் தமிழ்நாட்டிற்கு வந்தபோது தமிழ்நாடு அரசிடம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பெயர் பட்டியலை கேட்டிருந்தேன். அவர்கள் 40 க்கும் குறைவானப் பெயர்களை மட்டும்தான் எனக்குத் தந்தார்கள். பின்னர் தேடி படித்ததில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடி இருப்பது தெரிய வந்தது. தமிழ்நாட்டில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மறக்கடிக்கப்பட வேண்டும் என்றே இங்கு ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டு அதை செய்தார்கள்.
அவர்கள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படவில்லை, பாடப் புத்தகங்களில் அவர்கள் வரலாறு அழிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்டத் தியாகிகள் எந்த சமூகத்தில் இருந்து வந்தார்கள் என்பதிலிருந்து அவர்களை ஜாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி, மக்களை ஒன்றுபட விடாமல் தடுக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்டாடுவதில்லை. நாம் கடந்த கால வரலாறுகளை நினைவு கூர்வது அவசியம். தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து ஆராய்ச்சி மாணவர்கள் யாரும் ஆய்வு செய்வதில்லை. அது எனக்கு வருத்தமாக உள்ளது. வருங்கால தலைமுறையினர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்" என்று பேசி இருக்கிறார் ஆர்.என்.ரவி.
அவரது பேச்சைப் படிக்கும்போது புல்லரிக்கிறது. சுதந்திரத்துக்காகவே பிறப்பெடுத்த தலைமுறையைப் போல பேசி இருக்கிறார் அவர்.
கோட்சேக்களை குருமார்களாகக் கொண்ட கூட்டம், இந்திய விடுதலை வீரர்களைப் போற்றுவதைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது. ‘மன்னிப்பு’க் கடித சாவர்க்கரை துதிபாடும் கூட்டம் இந்திய விடுதலைப் போராட்டம் பற்றி பேசுவதைக் கேட்டால் புல்லரிக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞரான ஏ.ஜி.நூரணி அவர்கள், ‘சாவர்க்கரும் இந்துத்துவமும் –- மகாத்மா காந்தி படுகொலையும்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். ஆவணக் காப்பகத்தின் பல்வேறு தகவல்களைத் திரட்டி எழுதப்பட்ட வரலாற்று ஆய்வு நூலாகும் அது. பல முறை ஆங்கில அரசிடம் மன்னிப்புக் கேட்டவர் சாவர்க்கர் என்பதை ஆதாரங்களுடன் அந்த நூலில் ஏ.ஜி.நூரணி சொல்லி இருக்கிறார்.
1883 முதல் 1966 வரை வாழ்ந்தவர் சாவர்க்கர். இந்தியாவிலும் இலண்டனிலும் மன்னராட்சிக்கு எதிராகப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு 1910 ஜூலை 22 அன்று மும்பைக்கு அழைத்து வரப்பட்டார் சாவர்க்கர். டிசம்பர் 10 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் படி ஆயுள் காலம் முழுவதும் நாடுகடத்தப்பட்டு சிறை வைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு தரப்படுகிறது. அதன்படி அந்தமான் சிறையில் அடைக்கப் படுகிறார். 1911 ஆங்கில அரசுக்கு அவர் ஒரு கருணை மனு அனுப்புகிறார். அதன்மீது நடவடிக்கை இல்லை என்றதும் 1913 நவம்பர் 14 அன்று மீண்டும் கருணை மனு போடுகிறார். அந்த வாசகங்களை வழக்கறிஞர் ஏ.ஜி.நூரணி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“அரசு தன் நல்லதிகாரத்தைப் பயன்படுத்தி என்னை விடுவித்தால் அரசியலமைப்பின் செயல்பாட்டிற்காக வாதாடுவதுடன் ஆங்கில அரசுக்கு விசுவாசமாகவும் நடந்து கொள்வேன். அரசு எந்த வகையில் விரும்புகிறதோ அந்த வகையில் சேவகம் புரியத் தயாராக உள்ளேன். எனது மாற்றம் மனசாட்சியின் குரலுக்கேற்ப ஏற்பட்டுள்ளதால் எனது எதிர்கால நடத்தை அதற்கேற்பத்தான் இருக்கும். என்னைச் சிறையில் வைத்திருப்பதன் மூலம் எதுவும் பெற இயலாது. மாறாக அவ்வாறு இல்லாதிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். தந்தை போன்ற அரசின் வாசலுக்குக் கெட்டழிந்த மகன் திரும்ப வருமாறு கருணை செய்ய வல்லமை மிக்க தங்களால்மட்டுமே முடியும்”–- என்று சாவர்க்கர் எழுதி இருக்கிறார். மன்னிப்பு, கருணை மனுவை விட மிக மோசமான வார்த்தைகள் இவை என்கிறார் வழக்கறிஞர் ஏ.ஜி.நூரணி.
1924 எரவாடா சிறையில் இருந்து நிபந்தனைகள் அடிப்படையில் விடுதலை செய்யப்படுகிறார் சாவர்க்கர். அடுத்த ஆண்டு ஒரு கட்டுரை எழுதியதற்காக மீண்டும் அவர் மீது வழக்குப் பாய்கிறது. அதற்கு அனுப்பிய பதிலில் சுயராஜ்யம் என்ற சொல்லில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று பதில் அனுப்பி இருக்கிறார் சாவர்க்கர். அவருக்கு மீண்டும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. 1937 ஆம் ஆண்டு தான் முழுமையாக விடுவிக்கப்படுகிறார். இவை அனைத்தையும் வரிசைப்படுத்தி இருக்கிறார் ஏ.ஜி.நூரணி.
“சாவர்க்கரின் கஷ்டங்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. அதேபோல், அவரது சரணாகதியையும் சமரசப் போக்கையும் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. அவரை வீரராகப் புகழ்பவர்கள், அவரது முதல் பகுதியை மட்டும் மிகைப்படுத்திக் கூறிவிட்டு பிற்பகுதியைப் பற்றி அவர்களால் மறுக்க முடியாவிட்டாலும் கண்டுகொள்வதில்லை” என்று எழுதி இருக்கிறார் நூரணி.
இத்தகைய மன்னிப்பு சகோதரர்க்கு மருது சகோதரர்களைப் பற்றிப் பேச அருகதை உண்டா?
(குறிப்பு: தி.மு.க.வும் விடுதலைப் போராட்ட வீரர்களும் – - என்ற தலைப்பிலான தலையங்கம் நாளை!)
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!