murasoli thalayangam

“கோவில்களை வைத்து அரசியல் : குதர்க்கப் பேர்வழிகளுக்கு நெத்தியடி கொடுத்துள்ள உச்சநீதிமன்றம்” - முரசொலி !

கோவில்களை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்ற வழக்கு மனுவை உச்சநீதிமன்றம் இரண்டு நாட்களுக்கு முன்னால் தள்ளுபடி செய்து விட்டது. நீதிமன்றங்களின் மூலமாக இதனை அரசியல் சர்ச்சையாக ஆக்க நினைத்தவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய அடியைக் கொடுத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்கிறார். அதன் உள்ளடக்கம் என்பது இதுதான்:

“அரசியல் சாசனத்தின் 26 ஆவது பிரிவின்படி அனைத்து மதத்தினரும் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக நிறுவனங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் உரிமை உள்ளது. ஆனால் இந்துகள், ஜைனர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 9 லட்சம் கோவில்களில் 4 லட்சம் கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகளுக்கு தங்கள் மத வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்க உரிமை வழங்கப்படுகிறது. இது போலவே இந்து உள்ளிட்ட மற்ற மதத்தினருக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்” என்று அவர் தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து, இந்த வழக்கையே தள்ளுபடி செய்தது. ‘விளம்பரத்துக்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள்’ என்றும் நீதிபதிகள் கண்டித்துள்ளார்கள். “இது பற்றி நாடாளுமன்றமும், சட்டமன்றமும் தான் முடிவு செய்ய முடியும். நீதிமன்றங்களால் இவற்றுக்குத் தீர்வு கொடுக்க முடியாது” என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சொல்லி விட்டது.

கோவில்களை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் குதர்க்கப் பேர்வழிகளுக்கு நெத்தியடியாக இது அமைந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னால் பிரதமர் நரேந்திர மோடியே இப்படி ஒரு கருத்தை தெலுங்கானா மாநிலத்தில் பேசினார். அரசாங்கத்தை நடத்தும் நிர்வாகப் பொறுப்பில் இருந்து கொண்டு அரசாங்க நிர்வாக கட்டமைப்புக்கு எதிராகவே கருத்துச் சொல்வதற்கு அவரால் மட்டும் தான் முடியும்.

‘தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களை, தி.மு.க. அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோவில் சொத்துகள் மற்றும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது” என்று பகிரங்கமாக மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் பேசியதாக ‘தினமலர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. அருட்திரு வள்ளலாரின் 200 ஆவது பிறந்த நாள் விழாவில் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதனைக் கடுமையாகக் கண்டித்தார். “பிரதமரின் இந்தக் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். பிரதமர் அவர்களுக்கு நான் எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின் பிரதமர் அவர்கள் - தவறான அவதூறுச் செய்தியை சொல்வது சரியா? ஒரு மாநில அரசின் செயல்பாடு குறித்து - இன்னொரு மாநிலத்தில் போய் - பேசுவது முறையா? தர்மமா?’’ என்று முதலமைச்சர் கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.

பிரதமரின் உரையை ‘தினமலர்’ நாளிதழ் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு இருந்தது. “அந்த நாளிதழின் நிர்வாகி ஒருவர், புகழ்பெற்ற திருக்கோவில் ஒன்றில் அறங்காவலர்களில் ஒருவராக இருக்கிறார். அப்படியானால் அவர், அந்த கோவிலை ஆக்கிரமித்துள்ளார் என்று அர்த்தமா?” என்றும் முதலமைச்சர் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.17.6.2022 ஆம் நாள் தேதியிட்ட ‘தினமலர்’ பத்திரிகையில் அதன் வெளியீட்டாளர் - இல.ஆதிமூலம் அவர்கள், ‘‘கோவில் உண்டியல் பணம் எங்கும் போகாது’’ என்பது ஆகும்.

பொதுவாகவே கோவில் பணங்கள் முறையாக பயன்படுத்தப்படுவது இல்லை என்பது போன்ற பொய்ப் பிரச்சாரத்தை தொடர்ந்து கட்டமைத்து வருகிறார்கள். இந்த பொய்ப்பிரச்சாரத்துக்கு ‘தினமலர்’ நாளிதழே பல நேரங்களில் துணை போய்க் கொண்டிருப்பது தான். ஆனால் அதன் வெளியீட்டாளர் ஆதிமூலம் அது தவறு என்பதை விரிவாக எழுதி இருக்கிறார்.

ஆலயங்களின் பணத்தை அரசு எவ்வளவு முறையாகக் கையாள்கிறது என்பதை ஆதிமூலம் விவரிக்கிறார்...

« மூன்றாண்டுகளாக சென்னை வடபழநி கோவிலின் தக்கார் பொறுப்பை வகித்து வருவதால் அங்கு நடக்கும் பல விஷயங்களை நான் நன்கறிவேன்.

« சிலர் கூறுவதைப் போன்று உண்டியல் பணம் வேறு எங்கும் போவது இல்லை.

« தனியார் துறை நிர்வாகங்களைக் காட்டிலும் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் நிர்வாகங்களில் பணவரவு - செலவுக்கான சட்ட நடை முறைகளும் கட்டுப்பாடுகளும் கடுமையாகக் கடைப்பிடிக்கப் படுகின்றன.

« இங்கு அவ்வளவு எளிதாக முறைகேடு நடந்து விட முடியாது.

« கோவில்களுக்கான சட்ட நடைமுறைகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, பக்தர்களுக்கான பல நற்பணிகள் தாமதமாகிறது என்று சொல்லலாமே தவிர கோவில் வருமானம் வேறு எங்கோ போகுமளவிற்கு சட்டத்தில் ஓட்டை இல்லை.

« கோவில்களில் உண்டியல் வைக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை பக்தர்களின் காணிக்கைகள் பத்திரமாகத்தான் இருக்கின்றன. மிகுந்த முன்னெச்சரிக்கையுடனேயே கையாளப்படுகின்றன.

« காணிக்கை குறித்த பதிவேடுகள் எண்ணி முடிக்கப்பட்ட மறுநாளே அறநிலையத் துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு - அங்குள்ள பதிவேடுகளில் ஏற்றப்படுகின்றன. அதிலிருந்து ஒரு நகல் தணிக்கைப் பிரிவுக்கும் அனுப்பப் படுகிறது. தனியார் நிறுவனங்களில் இல்லாத அளவுக்குக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

- தொடரும்

முரசொலி தலையங்கம்

23.10.2023

Also Read: நீட் தேர்வு : 40 தற்கொலைகளுக்கு பின்பும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இரக்கம் வரவில்லை - முரசொலி விமர்சனம் !