murasoli thalayangam
இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி ஆதரவு கொடுக்க காரணம் என்ன? : பா.ஜ.க அரசின் முகத்திரையை கிழித்த முரசொலி!
முரசொலி தலையங்கம் (17-10-2023)
ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான போர் - 2
சுதந்திரக் காலம் தொட்டே, இந்தியாவின் ஆதரவு என்பது பாலஸ்தீனத்துக்கே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. முதல் பிரதமர் நேரு முதல் அனைத்து இந்தியப் பிரதமர்களும் பாலஸ்தீனத்தையே ஆதரித்து வந்தனர். ஆனால், 2014-–ம் ஆண்டு பா.ஜ.க வெற்றிபெற்று பிரதமர் மோடி வந்தது முதல் நிலைமை மாறியது. இதுவரை எந்த இந்தியப் பிரதமரும் இஸ்ரேலுக்குச் சென்றிருக்காத நிலையில், 2017 ஆம் ஆண்டு முதன்முறையாக அந்த நாட்டுக்குச் சென்றார் மோடி. பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் மோடி. இதன் மூலம், இஸ்ரேல் சென்ற முதல் இந்தியப் பிரதமர் ஆனார். இது வெறும் செய்தி அல்ல. இதுவரை இருந்த பிரதமர்கள் ஏன் செல்லவில்லை என்பதுதான் செய்தி. இஸ்ரேலின் காலனி ஆதிக்க எண்ணத்துக்கு எதிராக இதுபோன்ற நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர்கள் எடுத்தார்கள்.
மோடி முதன்முதலாக வந்தபோது, இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ ‘இந்திய பிரதமரின் வருகைக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம்’ என்று பேசினார். ஏன் காத்திருந்தார்கள் என்பதுதான் செய்தி. இஸ்ரேலில் வேகமாக வளரக்கூடிய ரகத்தைச் சேர்ந்த ’க்ரைசாந்துமன்’ என்ற மலருக்கு ‘மோடி’ என்றும் பெயரையும் வைத்தார். பதிலுக்கு மோடியும், இந்தியாவுடன் யூத வர்த்தக சரித்திரத்தைப் பற்றிய மிகப் பழைமையான செப்புத் தகடுகளிலான ஆவணங்களைப் பரிசாக வழங்கினார்.
பல காலமாக பாலஸ்தீன –- இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியா நடுநிலையைத்தான் பின்பற்றியது. ஆனால், முதன் முதலாக 2019-ம் ஆண்டு ‘ஷாஹீத்’ அமைப்பு தொடர்பாக ஐ.நா. அமைப்பில் நடந்த வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி தலைமையிலான அரசு வாக்களித்தது . இப்போது இஸ்ரேலை முழுமையாக ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கிறார் பிரதமர். அங்கு பாலஸ்தீனியர்கள் அனுபவிக்கும் துன்பத்தை பிரதமர் கணக்கிட்டதாகத் தெரியவில்லை.
ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி தருகிறோம் என்ற போர்வையில் ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களுக்கு எதிரான போரை இஸ்ரேல் நடத்தி வருகிறது. காசா பகுதியில் உணவு, குடிநீர், மின்சாரத்தை நிறுத்தி இருக்கிறார்கள். ஐ.நா.வின் கண்டிப்பையும் மீறி இது நடந்துள்ளது. 24 மணி நேரத்துக்குள்ளாக 11 லட்சம் மக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
“காசா பகுதிக்கான குடிநீர், மின்சாரம், எரிபொருள் ஆகிய அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்திவிட்டது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது கூட சிரமமாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். அதைக் கூடச் செய்ய முடியவில்லை. இப்போதுள்ள குடிநீர், உணவுப் பொருள்கள் சில நாட்களுக்கு மட்டும்தான் இருக்கும். பாலஸ்தீன மக்கள் பசியால் வாடுகிறார்கள். காசா பகுதி முழுக்க சேதம் அடைந்துள்ளது. தொலைத் தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. மிகக்குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் பேரால் எப்படி வெளியேற முடியும்?” என்று ஐ.நா. சபையின் மூத்த அதிகாரி ஜெனிபர் ஆஸ்டின் சொல்லி இருக்கிறார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் இஸ்ரேல் நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்திருக்கிறார். காசா நிலப்பகுதியை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்திருப்பதும், மனிதாபிமான நெருக்குதல்களை ஏற்படுத்தும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
“மின்சாரம், உணவு, எரிபொருள் எதுவுமே அனுமதிக்கப்படாத காசா பகுதியை இஸ்ரேல் முழுவதுமாக முற்றுகையிடும் என்ற இஸ்ரேலின் அறிவிப்பால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். காசாவில் மனிதாபிமான நிலைமை இதற்கு முன்னரே மிகவும் மோசமாக இருந்தது. இப்போது அந்நிலைமை மேலும் மோசமடையும். மனிதாபிமான பணியாளர்களுக்கான அணுகலுடன் மருத்துவ உபகரணங்கள், உணவு, எரிபொருள் மற்றும் பிற மனிதாபிமான பொருட்கள் மிகவும் தேவைப்படுகின்றன,” என்றும் அவர் குறிப்பிட்டார். உலக மனிதாபிமான சட்டத்தின்படி இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் குட்டெரெஸ் இஸ்ரேலுக்கு நினைவூட்டியுள்ளார். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் அடிப்படை வசதிகள் ஒருபோதும் தாக்குதலின் இலக்காக இருக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் இதைக் கேட்கும் நாடாக இஸ்ரேல் இல்லை. அப்படி கேட்கும் இயல்பு கொண்ட நாடும் அல்ல அது.
தங்கள் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 2000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளார்கள். காயமடைந்தவர்களை, மருத்துவமனையை விட்டு வெளியேறச் சொல்லி வருகிறது இஸ்ரேல் ராணுவம். இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது ஆகும். ஜெனிவா உடன்படிக்கையை மீறுவதும் ஆகும். நோயாளிகளை அப்படியே விட்டுவிட்டும் செல்ல முடியாது. அவர்களை எடுத்துக் கொண்டும் செல்ல முடியாது. ‘இத்தகைய கொலையை நாங்கள் செய்ய மாட்டோம்’ என்று காசா சுகாதாரத் துறை சொல்லி இருக்கிறது.
இவை அனைத்தும் இஸ்ரேலின் கொடுமையான முகத்தைக் காட்டுகிறது. இத்தகைய ஆக்கிரமிப்பாளர்களின் போர்களுக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ‘போர்கள் யாருக்கும் பயனளிக்காது’ என்று சொல்லும் இந்தியப் பிரதமர் அவர்கள், போரின் ஒரு தரப்பை ஆதரித்தும் இருக்கிறார்.
ஆயுதங்களை தயாரிப்பவர்களுக்கு போர்கள் தேவை. அதிகாரப் பசியில் இருப்பவர்களுக்கு போர்கள் தேவை. இஸ்ரேலாக ஆக நினைப்பவர்களுக்கு போர்கள் தேவை. பிளவுவாத எதேச்சதிகாரிகளுக்கு போர்கள் தேவை. அப்படி ஒரு போரைத்தான் இஸ்ரேல் இன்று நடத்தி வருகிறது.
மக்களுக்கு போர் தேவையில்லை. அப்பாவிகளுக்கு போர் தேவையில்லை. ஆனால் அனைத்துப் போர்களிலும் முதலில் கொல்லப்படுவது உண்மை. இரண்டாவது கொல்லப்படுவது மக்கள். அதைத்தான் இப்போது பார்க்கிறோம். இஸ்ரேல் அடங்குவது எப்போது? அடக்க யாரால் முடியும்? அதற்குள் எத்தனை பலிகள்?
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!