murasoli thalayangam
NewsClick முதன்மை ஆசிரியர் கைது.. மோடி அரசால் ஊடகங்களுக்கு விடப்பட்டுள்ள மிரட்டல்.. முரசொலி விமர்சனம் !
முரசொலி தலையங்கம் (07-10-2023)
ஊடகங்களுக்கு விடப்பட்டுள்ள மிரட்டல்
சி.பி.ஐ. – வருமானவரித் துறை – அமலாக்கத் துறை ஆகியவற்றை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசு –- அடுத்து ஊடகங்களையும் மிரட்டி வருகிறது. ‘நியூஸ் கிளிக்’ முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவும், அதன் மனிதவளப் பிரிவின் தலைவர் அமித் சக்ரவர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த கைது நடவடிக்கை என்பது ஒட்டுமொத்தமாக ஊடகங்களுக்கு விடப்பட்டுள்ள மிரட்டல் ஆகும்.
பிரபீர் புர்காயஸ்தா –- அவசர நிலைக்காலத்தில் ( 1975) 18 மாதங்கள் சிறையில் இருந்த போராளி ஆவார். இடதுசாரிச் சிந்தனை கொண்டவர். அமித் சக்ரவர்த்தி –- ஒரு மாற்றுத்திறனாளி. இவர்கள் இருவரும்தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் இணையதள செய்தி நிறுவன அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தி பூட்டி சீல் வைத்த டெல்லி காவல்துறையினர், இந்த கைது நடவடிக்கையையும் தொடர்ந்துள்ளனர். என்ன குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கையைச் செய்துள்ளார்கள் தெரியுமா? அமெரிக்க நாளிதழான ‘நியூயார்க் டைம்ஸ்’ ஒரு செய்தியை வெளியிடுகிறது. அதில், ‘நியூஸ் கிளிக் நிறுவனம், சீனாவிடமிருந்து நிதி பெறுகிறது’ என்று குற்றச்சாட்டு சொல்லி இருந்தார்களாம். இதை வைத்து இந்த கைது நடவடிக்கையாம்!
நியூஸ் கிளிக் ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது இணையதளம் சுதந்திரமானது. சீன நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றுக் கொண்டு செய்திகளை வெளியிட்டதாகக் கூறப்படும் புகார்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை. சீனாவுக்காக பிரச்சாரம் செய்யும் எந்த செய்தியும் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட வில்லை. 2021ஆம் ஆண்டு முதல் நியூஸ் க்ளிக் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள், வரவு- – செலவுகள், வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து ஒன்றிய அரசின் பல்வேறு விசாரணை அமைப்புகள் ஆய்வு நடத்தி உள்ளன. இந்த ஆய்வுகளில் எந்த முறைகேடுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் உள்நோக்கத்துடன் வெளியான கட்டுரையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, எந்த ஆதாரமும் இல்லாமல் ‘உபா’ போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் எப்படி வழக்குப் பதிவு செய்ய முடியும்?” என நியூஸ் கிளிக் கேள்வி எழுப்பியுள்ளது.
“சீன நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் நிதி பெற்ற ‘பி.எம்.கேர்ஸ்’ ஐ நிர்வகிப்பவர் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை?” என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கேள்வி எழுப்பியுள்ளார். “சீனாக்காரர் ஒருவரிடமிருந்து கொஞ்சம் நிதி வந்த ஒரே காரணத்துக்காக, நியூஸ் க்ளிக் மீது தேசத் துரோக வழக்கு. அந்த நிறுவனத்தோடு தொடர்பு கொண்டவர்களின் வீடுகளில் ரெய்டு, அவர்களின் செல்பேசிகளும் லேப்டாப்களும் பறிமுதல். ஆனால் சீன நிறுவனங்களிடமிருந்து பெருமளவில் நிதி பெற்ற PM CARES-–ஐ நிர்வகிப்பவர் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன் முதன்மை ஆசிரியர் பிரபீருக்குச் சொந்தமான வீட்டை முடக்கியது. அவரது நிரந்தர வைப்புத் தொகையை முடக்கியது. பெரிதாக ஆதாரம் இல்லாததால், நியூஸ் கிளிக் மற்றும் அதன் உரிமையாளர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த இணைய ஊடகத்தைக் குற்றம் சாட்டி ஒன்றிய அமைச்சரே நாடாளுமன்றத்தில் பேசினார். இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 3 அன்று சோதனை நடத்தி கைதும் செய்து விட்டார்கள். ‘நியூஸ் கிளிக்’ ஊடக ஊழியர்கள் அனைவரும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள். மூத்த பத்திரிகையாளர் ஊர்மிளேஷ், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ராஜ்யசபா டிவியின் முன்னாள் ஆசிரியர் இவர்.
‘நியூஸ் கிளிக்’ என்பது இடதுசாரிச் சிந்தனை கொண்ட ஊடகம் ஆகும். பா.ஜ.க. அரசின் போலியான முகத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்துள்ளது. இதுவரை ஆங்கிலத்தில் செய்திகளை வெளியிட்டு வந்தவர்கள், சமீப காலமாக இந்தியில் செய்திகளை வெளியிடத் தொடங்கி உள்ளார்கள். ‘இந்தி’ பேசும் மாநிலங்கள் விழிப்புணர்வு பெற்றுவிடக் கூடாது என்பதில் பா.ஜ.க. எப்போதும் தெளிவாக இருக்கும். அந்த மாநில மக்களை இருட்டில் வைத்து, வாக்கு வேட்டையாடும் கட்சி அது. எனவே, ‘இந்தி’யில் செய்தி வெளியிடுவதைத் தடுக்க நினைத்துள்ளார்கள்.
‘இந்தியா’ கூட்டணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், “மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு, கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிபிசி, நியூஸ் லாண்ட்ரி, டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார், காஷ்மீர் வாலா, தி வயர் போன்ற ஊடகங்களை ஒடுக்க புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தியது. தற்போது நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தை ஒன்றிய அரசு குறிவைத்துள்ளது. மோடி அரசு ஊடக நிறுவனங்களைக் கையகப்படுத்துவதன் மூலம் தங்கள் கட்சியின் கருத்தியலுக்கு ஊடகங்களை ஊதுகுழலாக மாற்ற முயற்சிக்கிறது.” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளார்கள்.
‘அழுத்தத்துடன் பணிபுரிகிறோம்’ –- என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, டிஜிபப் நியூஸ் இந்தியா ஃப்வுண்டேஷன் (Digipub News India Foundation), இந்தியன் வுமன்ஸ் பிரஸ் கார்ப்ஸ் (Indian Women’s Press Corps), பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா (Press Club of India) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து கடிதத்தை எழுதியுள்ளன. “சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய, பத்திரிகைப் பணி ஒன்றும் தீவிரவாதப் பணி அல்ல. எனவே, பத்திரிகைத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களை உச்சநீதிமன்றம் தலையிட்டு தடுக்க வேண்டும்” என அவை வலியுறுத்தி உள்ளன. “மக்களுக்கு நன்மைகள் எதுவும் செய்ய மாட்டோம், இதை யாராவது குறை சொன்னால் அவர்களை விடவும் மாட்டோம்” -– இதுதான் பா.ஜ.க. பாணி ஆட்சி முறையாகும். இவை அனைத்துக்குமான தண்டனையை மக்கள் நிச்சயம் தருவார்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!