murasoli thalayangam
“ரூ.23 லட்சம் கோடி முதலீடு.. தமிழ்நாட்டில் 46 லட்சம் நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு” : முரசொலி பாராட்டு!
இளையோர் நல அரசு!
புதிய புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதன் மூலமாக இளையோர் நல அரசாக உயர்ந்து காட்சி அளிக்கிறது தி.மு.க.அரசு!
10 ஆயிரத்து 205 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர், ''அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை" என்று அறிவித்திருப்பது, இளைஞர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்து வருகிறது.
கடந்த 27 ஆம் தேதி அன்று முதலமைச்சர் கலந்துகொண்ட அரசு விழா என்பது நம்பிக்கை அளிக்கும் விழாவாக இளைஞர்களுக்கு அமைந்துள்ளது. அந்த விழாவில் பல்வேறு அரசுத் துறைகளுக்கான தட்டச்சர்களாக 3,339 பேருக்கும், இளநிலை உதவியாளர்கள் 5,278 பேருக்கும் என மொத்தம் 8,617 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர்கள் 425 பேர், வரி விதிப்போர் 67, புல உதவியாளர் 19, சுருக்கெழுத்து தட்டச்சர் 1,07 பேர் --– எனவும் பணி ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் அவர்கள். ஒட்டுமொத்தமாக 10 ஆயிரத்து 205 பேர் பணி ஆணைகளைப் பெற்றுள்ளார்கள்.
“இந்த அரசு அமைந்த கடந்த இரண்டாண்டு காலத்தில் 12,576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 10,205 நபர்களுக்கும் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், நடப்பாண்டில் மேலும் சுமார் 17,000 பேருக்கு பல்வேறு அரசுப் பணிகள் வழங்கப்பட உள்ளன. அடுத்து வருகின்ற இரண்டாண்டுகளில், பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50,000 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்” என்று மாண்புமிகு முதலமைச்சர் செய்துள்ள அறிவிப்பு, இளைய சமுதாயத்துக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டு இளைஞர்களை, மாணவச் செல்வங்களை தகுதி, திறமை, அறிவு, ஆற்றல் படைத்தவர்களாக ஆக்குவதுதான் திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம் ஆகும். அதற்காகத்தான் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கினார்கள்.
பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சியைத் தொடர்ச்சியாக வழங்கி வருகிறார்கள். நான்காம் தலைமுறை தொழில்வளர்ச்சிக்கு (Industry 4.0) ஏற்ப நமது தொழிலகங்களையும், தமிழ்நாட்டு இளைஞர்களையும் தயார்படுத்திட வேண்டும் என்பதில் முதலமைச்சர் அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 10 லட்சம் இளைஞர்களுக்கு இப்பயிற்சி அளிப்பதாகத் திட்டமிடப்பட்டது. 13 லட்சம் மாணவர்கள், இளைஞர்கள் இந்தப் பயிற்சியைப் பெற்றுள்ளார்கள்.
தொழிலாளர் நலத்துறை சார்பில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அது நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற விழாவில் ஒரு லட்சமாவது பணி ஆணையை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
பெரிய நகரங்கள், சிறிய நகரங்கள் என்று பிரித்து அதற்குத் தகுந்த அளவில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,402 நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் இதுவரை 32 ஆயிரத்து 776 நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. இதுவரை நடந்த முகாம்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 63 பேர் பல்வேறு வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள்.
கழக அரசு அமைந்த பிறகு புதிய தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன் வந்துள்ளன. அந்த நிறுவனங்களுடன் முதலமைச்சர் அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். கடந்த 2 ஆண்டுகளில், 240 முதலீட்டுக் கருத்துருக்கள் மூலம், 2,96,681 கோடி ரூபாய் முதலீடு ஈர்த்துள்ளது. 4,14,836 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வருகிற சனவரி மாதம் நடத்திட முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்மூலமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்குள் வரும். இதன்மூலமாகவும் வேலை வாய்ப்புகள் நிறையக் கிடைக்கும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கியப் பங்கு அளித்திடும் விதமாக, 2030ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். இந்த இலக்கினை அடைந்திட, 23 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்திட வேண்டும். 46 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிட முடியும். மாநிலத்தில் சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதிசெய்யும் விதமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இந்தத் திட்டங்கள் பரவலாக அமைக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்துமே இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து தீட்டப்படும் திட்டங்கள் ஆகும்.
“வேலை இல்லை என்ற நிலையும் இருக்கக் கூடாது; வேலைக்குத் திறமையான இளைஞர் இல்லை என்ற நிலையும் இருக்கக் கூடாது என்று நான் உத்தரவிட்டுள்ளேன். வேலை வாய்ப்புகளை உருவாக்குவது; -வேலைக்குத் தகுதியான இளைஞர்களை உருவாக்குவது – என்ற சக்கரச் சுழற்சியுடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. வேலையின்மையும் இருக்கக் கூடாது; வேலை இழப்பும் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளேன்” என்று முதலமைச்சர் அவர்கள் தொழிலாளர் நலத்துறை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் பேசும்போது கடந்த ஆண்டு குறிப்பிட்டார்கள்.
அரசுத் துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது; - தனியார் துறையிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது; - இரண்டு துறைகளுக்கும் தகுதியானவர்களாக இளைஞர்களை உருவாக்குவது - ஆகிய மூன்று இலக்குகளுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு, - இளையோர் நல அரசாக நடத்திக் காட்டி வருகிறார்கள்.
- முரசொலி தலையங்கம்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!