murasoli thalayangam
“ரமேஷ் பிதுரியின் பாசிச பேச்சு.. கூச்சமோ, அருவெறுப்போ பாஜகவுக்கு இல்லையா?” : வெளுத்து வாங்கிய முரசொலி !
பாசிச பாணி பேச்சு!
பாசிச பேச்சு என்பதற்கு உதாரணம் வேண்டுமா? பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி பேச்சுதான் அதற்கு சரியான சமீபத்திய உதாரணம்.
இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினரையே தகாத வார்த்தைகளால் பேசுகிறார் ரமேஷ் பிதுரி. இந்தத் துணிச்சலை அவருக்குக் கொடுத்தது யார்? அப்படி அவர் பேசும் போது பல்லைக் காட்டிச் சிரிக்கிறார்கள் ஒன்றிய அமைச்சர்கள். கூச்சமோ, அருவெறுப்போ அவர்களுக்கும் இல்லை.
சந்திரயான் - 3 வெற்றி குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடக்கிறது. தெற்கு டெல்லியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்பியான ரமேஷ் பிதுரி, அம்ரோஹாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. அன்வர் டேனிஷ் அலிக்கு அளித்த பதிலில், நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகத்தை நோக்கி அநாகரிகமான, வகுப்புவாத வெறுப்பு நிறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அதுமட்டுமின்றி, அவையை விட்டு வெளியே வந்தபின் ‘பார்த்துக் கொள்வதாகவும்’ மிரட்டியுள்ளார். உறுப்பினரையும் அவர் சார்ந்த மதத்தையும் கொச்சைப்படுத்தி தரக் குறைவாகப் பேசினார்.
அப்போது, சபை நடவடிக்கைகளைத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்த சபாநாயகர் கொடிக்குன்னில் சுரேஷ், பிதுரியை தடுக்க முயன்றார். ஆனால் பிதுரி சர்ச்சைக்குரிய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தார். பிதுரி இதைச் செய்து கொண்டிருந்தபோது, அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனும், அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த முன்னாள் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் அவர் பேசுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில எம்.பி.க்களும் மேசையைத் தட்டி பிதுரியை உற்சாகப்படுத்தினர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிதுரியை தடுக்க முயற்சிக்கவில்லை. பிதுரியின் நடத்தைக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வேண்டா வெறுப்பாக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். “உறுப்பினர் பிதுரி என்ன பேசினார் என்பதை என்னால் சரியாக கேட்க முடியவில்லை. அவரது வார்த்தைகளால் எதிர்க்கட்சிகள் புண்பட்டிருந்தால் நான் வருத்தம் தெரிவிக்கிறேன்,” என்று கூறினார் ராஜ்நாத் சிங். இன்னும் அவரை ஏன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர் நிரூபித்தார்.
அதாவது நாடாளுமன்றத்தையே பா.ஜ.க.வின் கட்சித் தலைமையகம் போல நினைத்துக் கொண்டு பேசுகிறார்கள் பா.ஜ.க. எம்.பி.க்கள்!
கொச்சையாகப் பேசிய பா.ஜ.க. உறுப்பினருக்கு இந்த அவையில் எத்தகைய உரிமை உண்டோ அதே உரிமை பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினருக்கும் உண்டு. ஆனால் அவரை அநாகரிகமாக - அவமானப்படுத்தும் வகையில் பேசினார் பா.ஜ.க. எம்.பி.யான ரமேஷ் பிதுரி.
நாடாளுமன்றத்தில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த எம்.பி. ஒருவரை, பா.ஜ.க. எம்.பி. ஆபாசமாகவும் அச்சில் பதிவேற்ற முடியாத வார்த்தைகளாலும் பேசியது நாடுமுழுவதும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. அவர் சார்ந்த மதத்தைச் சொல்லி தீவிரவாதி என்றும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளையும் சொல்கிறார் பா.ஜ.க. எம்.பி. இது நடந்தது தெருவில் அல்ல. நாடாளுமன்றத்தில். இந்திய நாட்டின் இதயமான நாடாளுமன்றத்தில்.
பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்யக் கோரி மக்களவை சபாநாயகருக்கு மக்களவைக் கழகக் குழு துணைத் தலைவர் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, மக்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும், ராஜ்யசபாவில் ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்கும், இருக்கையில் இருந்து எழுந்து நின்று மணிப்பூர் பிரச்சினை குறித்து பிரதமரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் முன் செல்ல முயற்சித்தபோது, அவர்கள் இருவரும் அந்த அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதை விட மிகமிக மோசமானதுதான் பா.ஜ.க. எம்.பி. செய்தது ஆகும். நடவடிக்கை எடுப்பாரா சபாநாயகர்?
பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி பேசியது, பா.ஜ.க.வினரை தவிர்த்து பிற கட்சியினர் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. இது ரமேஷ் பிதுரிக்கு புதியது அல்ல. அவர் இப்படி பேசுவது இது முதல் முறை அல்ல. டேனிஷ் அலியை பேசியது போன்று பல மக்கள் பிரதிநிதிகளையும் பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி தொடர்ந்து இதுபோன்ற வகையில் பேசியுள்ளார்.
* கடந்த மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை குள்ளன் என்று பேசியிருக்கிறார்.
* மே 2019 இல், தெற்கு டெல்லியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிதுரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக ஆம் ஆத்மி எம்.பி. ராகத் சதா வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
* 2017 இல், மதுராவில் பேசிய பிதுரி இத்தாலியில் 5-6 மாதங்களில் பேரக்குழந்தை பிறக்கலாம் என சோனியா காந்தியையும், இது மாதிரியான கலாச்சாரம் மாயாவதியின் வீட்டிலோ கூட இருக்கலாம், என மாயாவதியையும் அவமானப்படுத்தி பேசியிருக்கிறார்.
* 2015 இல், ரஞ்சீத் ரஞ்சன் , சுஷ்மிதா தேவ், சுப்ரியா சுலே, அர்பிதா கோஷ், பிகே ஸ்ரீமதி டீச்சர் உட்பட 5 பெண் எம்.பி.க்கள். மக்களவையில் தங்களுக்கு எதிராக தவறான மற்றும் பாலியல் கருத்துக்களைப் பிதுரி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
* 2022 ஆம் ஆண்டில் பள்ளி தொடர்பான பிரச்சினையில் உதவி கேட்ட ஒரு பெற்றோரிடம் “நீங்கள் ஏன் முதலில் குழந்தையைப் பெற்றெடுக்கிறீர்கள்?” என கேட்டுள்ளார்.இப்படி ஆபாசமாக - ஆணவமாகப் பேசுவதையே தனது வழக்கமாக - பழக்கமாகக் கொண்டுள்ளவர்தான் இந்த ரமேஷ் பிதுரி.
இப்போது அவமானப்படுத்தப்பட்ட டேனிஷ் அலி எம்.பி.யால் ஊடகங்கள் முன் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. கண்கலங்கினார். தனது கண்ணீரையே பதிலாகக் காட்டினார்.எல்லா கண்ணீர்களுக்கும் கோபங்களுக்கும் பதில் சொல்லும் காலம் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!