murasoli thalayangam
1996-ஆம் ஆண்டு முதல் இன்று வரை.. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குரல் கொடுத்து வந்த தி.மு.க : முரசொலி!
முரசொலி தலையங்கம் (22-09-2023)
மகளிருக்கு அதிகாரமும் தி.மு.க.வும்
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை இந்திய நாடாளுமன்ற மக்களவை ஆதரித்து நிறைவேற்றி விட்டது. மகளிருக்கு நாடாளுமன்ற -– சட்டமன்றத் தொகுதிகளில் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்குவதன் மூலமாக, அதிகாரம் மிகுந்த பதவிகளுக்கு அவர்கள் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் –
மகளிருக்கு நாடாளுமன்ற – சட்ட மன்றங்களில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மாநிலங்களவையில் நிறைவேற்றிய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் இந்த இடத்தில் நினைவுகூரத் தக்கவர்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். இவர்கள் மூவருக்கும் பெண் குலம் மட்டுமல்ல, மனித குலம் நன்றிக் கடன்பட்டுள்ளது.
1996–ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வழங்கினார்கள். 474 மாநகராட்சி வார்டுகளில் பெண்களுக்கு 161 – 28 மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளில் பெண்களுக்கு 10 – 649 மாவட்டப் பஞ்சாயத்து வார்டுகள் பதவிகளில் பெண்களுக்கு 242 – 106 நகராட்சித் தலைவர்கள் பதவிகளில் பெண்களுக்கு 35 என்றும் - முதன்முதலாக தமிழ்நாட்டில் வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அதுதான் இன்று 50 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பொறுப்புகளில் 11 பதவி இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து இந்த உரிமையை நிலைநாட்டி இருக்கிறார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். மொத்தம் உள்ள இடங்கள் 21 என்றால் அதில் 11 இடங்கள் பெண்களுக்குத் தரப்பட்டன. 9 மாநகராட்சி மேயர் பதவியானது பெண்கள் (பொது) பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்டியலின பெண்களுக்கு 2 மேயர் பதவிகள் தரப்பட்டுள்ளது. பட்டியலின ஆண் அல்லது பெண்ணுக்கு ஒரு இடம் தரப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 1971 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் காமாட்சி ஜெயராமன் என்ற பெண் மேயராக இருந்துள்ளார். ஐம்பது ஆண்டுகள் கழித்து இப்போது வணக்கத்துக்குரிய மேயராக ப்ரியா செயல்பட்டு வருகிறார். பெண் இனத்துக்கு அதிகாரப் பரவலை மிகச் சரியாக திராவிட முன்னேற்றக் கழகம் செய்து வருவதன் அடையாளம் ஆகும்.
இதனையே நாடாளுமன்ற - சட்டமன்றங்களிலும் கொண்டு வர கழகம் தொடர்ச்சியாகப் பாடுபட்டு வந்துள்ளது.
* 2016–ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி மகளிர் நாள் அன்று நாடாளுமன்றத்தின் மக்களவை - மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இதற்காகக் குரல் கொடுத்தார்கள்.
* 1996-ஆம் ஆண்டு தி.மு.க அங்கம் வகித்த ஒன்றிய அரசில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்டது.
* 2005–ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் மகளிர் இடஒதுக்கீட்டுக்காக தீர்மானம் நிறைவேற்றினோம். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பேரணி நடத்தினோம்.
* 2005-–ஆம் ஆண்டும் தி.மு.க. இடம்பெற்ற ஒன்றிய காங்கிரசு அரசு இதனைத் தாக்கல் செய்தது.
* 2007–ஆம் ஆண்டு கழக உயர்நிலை செயல்திட்டக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.
* 2007–ஆம் ஆண்டு சூலை 16,17 ஆகிய நாட்களில் கடலூரில் நடைபெற்ற தி.மு.க. மகளிரணி மாநாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றினோம்.
* காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் நீண்ட நாள் முயற்சியின் விளைவாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2010–ஆம் ஆண்டு மகளிர் தினமான மார்ச் 8-–ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு மறுநாள் நிறைவேற்றப்பட்டது.
* பிரதமர் நரேந்திரமோடிக்கு 24.11.2014 அன்று தலைவர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதினார்கள்.
* பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்ததும், ‘மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்’ என்று அன்றைய கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். 21.8.2014 அன்று சென்னை மணவழகர் மன்ற முத்தமிழ் விழாவில் பேசும் போது, ‘மத்தியில் ஒரு புதிய ஆட்சி வந்திருக்கிறது. அந்த ஆட்சி இதனைச் செய்யவேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
* 2016-–ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி மகளிர் நாள் அன்று நாடாளுமன்றத்தின் மக்களவை - மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் அனைவரும் சேர்ந்து இதற்காகக் குரல் கொடுத்தார்கள்.
* அப்போது தி.மு.க. செயல்தலைவர் பொறுப்பில் இருந்த தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 17.3.2017 அன்று பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி இருக்கிறார்கள்.
* 2017 -ஆம் ஆண்டு தி.மு.க சார்பில் மகளிரணிச் செயலாளரும், அப்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் டெல்லியில் பேரணி நடத்தினோம். 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி இந்தப் பேரணி நடத்தப்பட்டது.
* 2018–ஆம் ஆண்டு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘மகளிருக்கன 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் சூழலை உருவாக்குவோம்’ என்று பேசினார்கள்.
“எனது அருமைத் தங்கை கனிமொழி அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் ரேணுகா சவுத்ரி பங்கேற்றிருக்கும் இந்த விழாவின் மூலமாகக் கேட்க விரும்புவது ‘TIME IS NOW’. நாளைய தினம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. அதில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அதுதான் நீங்கள் மகளிருக்குச் செய்யும் மரியாதையாக அமைந்திட முடியும்” என்று பிரதமருக்குக் கோரிக்கை வைத்தார் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
* மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த 16 ஆம் தேதி நடந்த தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
– திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளின் தொடர் வலியுறுத்தலின் காரணமாக மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை வரவேற்போம்.
..
குறிப்பு: இதில் பா.ஜ.க.வின் கபட வேடத்தை நாளை பார்க்கலாம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!